உன்மீதான என் பிரியம் என்பது
உன்னையே பொன் தூவி வாழ்த்தும்
என் ரசனைகளின் ஒளிப்பந்தல்

உன்னையே வண்ணங்களாய்ச்
சுற்றித் திரியும் என் நினைவுகளின்
நிறத்தோட்டம்

ஆனால்
வாகனம் மூடிக்கிடக்கும்
வெண்பனிப் பொழிவைப்போல
அவை உன்னால்
வரவேற்கப்படாததாய் ஆனபின்

உன் நினைவுகளின் கதகதப்புகள்
எனக்கு வேண்டவே வேண்டாம் என்று
முடிவெடுத்து நிறுத்திக்கொள்ள
நினைத்ததுதான் தாமதம்
என் காடு கொள்ளாத பட்டாம் பூச்சிகளாய்
உன் நினைவுகள் பெருக்கெடுத்துப்
படபடத்துப் பறப்பது ஆச்சரியம்

அந்த ஆச்சரியத்தில்
உன் மீதான என் பிரியம்
அந்தியின் உந்து காற்று ஏறிய
செம்மஞ்சள் அலைகளாய் மேலும் மேலும்
உயர்ந்து உன்னையே இன்னமும்
இறுக்கமாய்த் தழுவுகிறது

என்றால்
என் நெஞ்சப் பொதியே
உன் மீதான என் பிரியத்தின்
உயிர்ப் பிடியிலிருந்து
நான் தப்பிப்பதுதான் எப்படி?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

பாதிக்கப்பட்ட எல்லோருக்குள்ளும் இருக்கும் மனநிலையிதை நீங்கள் கவிஞர் என்பதால் மிக மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நல்ல வார்த்தைகள், கண்முன்னே சித்திரம் போன்ற சொல்லழகு, நிஜநிலை உணர்த்தும் மிக அழகிய கவிதை.

வாழ்த்துக்கள்

அன்புடன்
என் சுரேஷ்
தொடர்ந்து ஊக்கமூட்டும் உங்கள் கருத்துக்களுக்கு என் நன்றிகள் சுரேஷ்

என் நெஞ்சப் பொதியே
உன் மீதான என் பிரியத்தின்
உயிர்ப் பிடியிலிருந்து
நான் தப்பிப்பதுதான்
எப்படி :)

அன்புடன் புகாரி
பூங்குழலி said…
///உன் நினைவுகளின் கதகதப்புகள்
எனக்கு வேண்டவே வேண்டாம் என்று
முடிவெடுத்து நிறுத்திக்கொள்ள
நினைத்ததுதான் தாமதம்
என் காடு கொள்ளாத பட்டாம் பூச்சிகளாய்
உன் நினைவுகள் பெருக்கெடுத்துப்
படபடத்துப் பறப்பது ஆச்சரியம்///

இது நாம் எதை மறக்க முற்படும் போதும் நடப்பது தான் ...அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
சக்தி said…
அன்பின் நண்பர் புகாரி,

காதலுக்கு மற்றொரு பிரியம்
கவிதையொன்றின் மூலமாக
கச்சிதமாய் விளக்கி விட்டீர்
இனிய பல கவிதை தரும்
இன்முகத்து நண்பருக்கு
இன்பமான வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி
இளங்கோவன் said…
உன் மீதான என் பிரியம்
அந்தியின் உந்து காற்று ஏறிய
செம்மஞ்சள் அலைகளாய் மேலும் மேலும்
உயர்ந்து உன்னையே இன்னமும்
இறுக்கமாய்த் தழுவுகிறது

அசத்திட்டிங்க புகாரி சார்...

படித்தேன்... மகிழ்ந்தேன்...

அன்புடன் இளங்கோவன்.
சிவா said…
//ஆனால்
வாகனம் மூடிக்கிடக்கும்
வெண்பனிப் பொழிவைப்போல
அவை உன்னால்
வரவேற்கப்படாததாய் ஆனபின்

உன் நினைவுகளின் கதகதப்புகள்
எனக்கு வேண்டவே வேண்டாம் என்று
முடிவெடுத்து நிறுத்திக்கொள்ள
நினைத்ததுதான் தாமதம்
என் காடு கொள்ளாத பட்டாம் பூச்சிகளாய்
உன் நினைவுகள் பெருக்கெடுத்துப்
படபடத்துப் பறப்பது ஆச்சரியம்//


அட அட அட .. வரிகள் வைர வரிகள்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்