அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்ற கண்ணதாசனின் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இதை வெறும் சினிமாப்பாட்டு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். சங்ககாலத்துப் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகளை எடுத்து கண்ணதாசன் திரையிசையில் கலக்கிய பாடல். இதை சினிமாவில் போடுகிறேன் என்றதற்கு எம் எஸ் வி கண்ணதாசனை விடவில்லை. இதெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று புறந்தள்ளிவிட்டார்.
கண்ணதாசன் கண்களில் கண்ணீர். அடடா கண்ணதாசா இதுக்கெல்லாம் அழலாமா சரி சரி போடலாம் விடு என்று எம் எஸ் வி சம்மதித்திருக்கிறார் இந்தப் பாட்டில் வரும் காய்களை உற்றுக்கவனியுங்கள். அவற்றுள் வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன. இது மிகமிக இலக்கியத்தரம் வாய்ந்த சினிமாப் பாடல். அதனால் எனக்கு மிக மிகப் பிடித்தபாடல்.
தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஒரு சுவாரசியமான விசயம் சிலேடை. இரு பொருளைத்தரும் ஒரு சொல் அல்லது வரி அல்லது பாடல்தான் சிலேடை. நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் அந்தப் பா வகைக்குள் ஒளிந்துகிடக்கும். இதற்கு உதாரணமாய் எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம். அதில் ஒன்றுதான் இந்த அத்திக்காய் காய் காய்.
அந்த சங்ககாலப்பாடலில் வருவது சில காய்கள்தான். ஆனால் அதைத் தழுவி கண்ணதாசன் எழுதிய திரையிசைப்பாடலில் ஏகப்பட்ட காய்கள். கொத்தவால் சாவடிக்குள் நுழைந்துவிட்டதைப் போல கமகமக்கும்
அத்திக்காய்
ஆலங்காய்
இத்திக்காய்
கன்னிக்காய்
ஆசைக்காய்
பாவைக்காய்
அங்கேகாய்
அவரைக்காய்
கோவைக்காய்
மாதுளங்காய்
என்னுளங்காய்
இரவுக்காய்
உறவுக்காய்
ஏழைக்காய்
நீயும்காய்
நிதமுங்காய்
இவளைக்காய்
உருவங்காய்
பருவங்காய்
ஏலக்காய்
வாழக்காய்
ஜாதிக்காய்
கனியக்காய்
விளங்காய்
தூதுவழங்காய்
மிளகாய்
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
சிரிக்காய்
கொற்றவரைக்காய்
தனிமையிலேங்காய்
எத்தனைக் காய்கள் பாருங்கள். இத்தனையையும் கொண்டு கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்தான் அத்திக்காய் காய் காய். இதோ முழுப்பாடலும். பாடலை முதலில் பாடிப்பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு வரியையும் நாம் அலசுவோம்.
அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய்
எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ
கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)
பாடல்:அத்திக்காய் காய் காய்
குரல்:டி எம் சௌந்தரராஜன், சுசீலா, P B ஸ்ரீநிவாஸ், ஜமுனா ராணி
வரிகள்:கண்ணதாசன்
வருடம்: 1965
கேட்க - http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4296
இது ஒரு சங்ககாலப் பாடல் என்று முன்பே சொன்னேன். சங்ககாலப் பாடலில் இருந்தது இரண்டுமூன்று காய்கள்தான். ஆனால் கண்ணதாச மரத்தில் காய்த்ததோ முப்பதையும் தாண்டி.
தலைவன் பொருள்தேடிப் பிரிகிறான். அவன் சென்ற திசை நோக்கி இவள் ஏங்கிக் கிடக்கிறாள். இந்தப் பொல்லாத வேளையில் நிலவு வந்து இம்சிக்கிறது. ஏற்கனவே
அவள் மனம் ஏக்கத்தில் சிக்கியிருக்க காதலை ஊட்டும் வசீகர நிலா தன் ஒளியைப் பாய்ச்சி அவளை உஷ்ணப்படுத்துகிற்து. அவளோ துவள்கிறாள். கோபம் வருகிற்து நிலவின்மீது. என்ன இது அநியாயம் என்னை ஏன் வதைக்கிறாய் என்று திட்டவேண்டும்போல் இருக்கிற்து. இருந்தாலும், நிலா காதல் உணர்வுகளை ஊட்டும் அற்புதமாயிற்றே திட்டவும் மனமில்லை. எனவே, அதனுடன் முறையிடுகிறாள் அவள்....
எப்படி
அத்திக்காய் காய் காய்
ஏ நிலாவே..... நீ காய்கிறாய் நான் தேய்கிறேன். என்னை நீங்கிச்சென்ற தலைவனோ அங்கே இன்பமாய் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் காய்கிறாய்? எனவே நீ அவன் இருக்கும் அந்தத் திக்கில் காய் - அந்த திசையில் காய் - அவனிடம் சென்று காய். அவனை இந்தக் காதல் நோய் பற்றட்டும். அப்படிப்பற்றினால்தான் அவன் என்னிடம் ஓடிவருவான்.
ஆலங்காய் வெண்ணிலவே
வெறுமனே காய்ந்துவிடாதே. அது அவனுக்குப் போதாது. பொறுப்பில்லாம அங்கேயே இருந்துவிடுவான். நீ காய்க்கும் மோக வெப்பத்தில் அவன் என்னை நோக்கி ஓடிவரவேண்டும். எனவே நீ விசத்தைப் போல் காய். ஆலம் என்றால் விசம். சாதாரண காய்ச்சலுக்குக் கரையாத அவன் மனம் உன் விசக் காய்ச்சலுக்கு நிச்சயம் சிதையும்
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ
என்னிடம் வந்து இந்தத் திக்கில் நின்று காய்ந்து தொலைக்காதே வெண்ணிலாவே. உனக்கு பெண்களில் தாபம் புரியாதா? தவிப்பு விளங்காதா? தனிமை புரியாதா? ஏக்கம்
அறியமாட்டாயா? ஏனெனில் நிலாவே, நீயும் ஒரு பெண்ணல்லவா?
அடடா எத்தனை அருமை பாருங்கள். இந்த இலக்கிய ரசனைதான் என்னை நம் பழந்தமிழ் இலக்கியத்தின்முன் மண்டியிடச் செய்யும். விடவே மாட்டேன் பழைய இலக்கியங்களை.
அத்திக்காய் என்பது அத்திக்காய் அல்ல அது அந்தத் திக்காய்
ஆலங்காய் என்பது ஆலமரக்காயல்ல அது விசம்போல் காய்
இத்திக்காய் என்பது நாம் அறியாத காயல்ல அது இந்தத் திக்காய்
இதோடு மூன்று காய்கள் முடிந்தன.
இனி
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
4. கன்னிக்காய்
5. ஆசைக்காய்
6. பாவைக்காய்
7. அங்கேகாய்
8. அவரைக்காய்
9 கோவைக்காய்
மேலும் ஆறு காய்கள். அடடா அதற்குள் ஒன்பது காய்களை அடுக்கிவிட்டார் பாருங்கள் கவியரசர் கண்ணதாசன்.
தலைவி பாடுகிறாள். நிலவே, தலைவனை நினைத்து நினைத்து உறங்காத விழிகளோடு தவியாய்த் தவிக்கும் இந்தக் கன்னிப் பெண்ணுக்காக, (கன்னிக்காக - கன்னிக்காய்) அவள் சின்னஞ்சிறு வயதுமுதல் அதாவது ஞாபகம் முளைக்காத அந்த பழைய நாள் முதல் அவன் மீது கொண்டுவிட்ட அடங்காத ஆசைக்காக (ஆசைக்காய்), அவன்மீது அபரிமிதமான காதல் கொண்டுவிட்ட பாவைக்காய் (பாவை என்றால் பெண்), அதாவது இந்தப் பெண்ணுக்காய், இங்கே காய்ந்து தொலைக்காதே.
என் மீது இரக்கப்படு, நான் தகிக்கும் உன் காதல் கதிர்களைத் தாங்கும் நிலையில் இல்லை, அவனைத் தேடும் விழுகளோடும், அவனுக்காக ஏங்கும் இதயத்தோடும், அவன் இல்லாமல் உயிரற்றுப் போன உடல் போலவும்தான் வாடுகிறேன். வாடாமல் என்னைவிட்டு எங்கோ ஓடிப்போன காதல் மறந்து என் மீது இரக்கமற்ற அவனிடம் நீ சென்று காய், அங்கேகாய்.
என் காதலரான அவரைக் காய் (அவரைக்காய்) இந்த மங்கையின் ஒற்றை அரசன், தலைவன் கோ (கோ என்றால் அரசன். இளங்கோ என்றால், இளைய அரசன்) வைக்காய்
(கோவைக்காய்). அப்போதுதான் அவன் என்னிடம் என் காதல்நாடி என்னைத்தேடி ஆசையாய் வந்து தொலைப்பான்.
9 காய்கள் முடிந்தபின் மேலும் இரண்டு கண்ணதாசக் காய்கள்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இப்போது தலைவியின் அந்தப்பக்கப் பாட்டுக்கு தலைவன் இந்தப் பக்கம் இருந்துகொண்டு எசப்பாட்டு பாடுகிறான். நிலவே, இவள் சொல்கிறாள் என்று என்மீது காய்ந்துவிடாதே! நான் அவளைவிட கொதிப்பில் இருக்கிறேன். அவள் அப்படித்தான் பழியை என்மீது தூக்கிப் போட்டுவிடுவாள். அவள் உள்ளம் காய். என்மீது கனியாத காய்.
தொழில் நிமித்தமாகவே நான் இங்கே வந்து இப்படித் துடித்துச் சாகிறேன். அவளென்னவோ நான் அவளைப் பிரிவதற்காகவே இப்படிப் புறப்பட்டுவந்துவிட்டதைப் போல் உன்னிடம் முறையிடுகிறாள். நான் அப்படிப்பட்டவன் அல்லன்.
மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்)
மாது அவள் உள்ளம் காய்தான் - என் மீது கனிவின்றிச் சாடுகிறது. என்னை நெருப்பாய்ச் சுட்டெரிக்க உன்னைத் தூண்டிவிடுகிறாள். அவள் என் மீது மிகுந்த அன்பு உள்ளவள்தான். ஆனால் அவளது காதல் அவளை உண்டு இல்லை ஒரு கை பார்க்கிறது. அதனால் அவள் உள்ளம் காயாகிவிட்டது. அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா?
என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? அவளுக்கு முன்பே நீதானே என் காதலி. என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக்க் காயாதே. பாருங்கள் ஆண் இங்கே நிலாவை என்னைக் காயாதே அவளைப் போய் காய் என்று மூட்டிவிடவில்லை. என்னைக்காயாதே நீயும் என் உயிர்தானே என்னை அறிந்தவள் தானே என்று கூறுகிறான். அட எப்படிப்பார்த்தாலும் ஆண்கள் நல்லவர்களப்பா :)
01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்
என்று பதினோரு காய்கள் முடிந்துவிட்டன, இனி அடுத்த இரு வரிகளில் இன்னும் ஏழு காய்கள். அம்மாடியோவ் கண்ணதாசா, அப்படியே அசத்துகிறாயே கவியரசா!
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும்காய் நிதமும்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்
12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்
இது ஆண்பாடும் வரிகள். பெண்கள் எப்போதுமே தூரமாய் இருக்கும்போது, வா வா என்பார்கள். ஏங்கித் தவிக்கிறேன் என்பார்கள். தூங்காமல் துவள்கிறேன் என்பார்கள்.
அருகே வந்தால் போதும், அது அச்சமோ நாணமோ மடமோ பயிர்ப்போ, அந்த வள்ளுவனுக்குத்தான் வெளிச்சம், ஒரே பிகுதான்.
வெட்டிக்கு ஒரு சண்டை வேறு போடுவாள். ஏன் சண்டை போடுகிறாய் கெண்டை மீனே என்று கேட்டால், வள்ளுவன் வேறு வக்காலத்துக்கு வருவான்.
இது ஊடலடா மடையா. நீ ஊடிக்கூடு அதில்தான் உற்சாக வெள்ளம் கரைபுறண்டோடும் என்று சூடுபோடுவான்.
ஆக, தவிப்பும் துடிப்புமாய் ஆண்களில் நிலை பாவம் பாவம் அந்தோ பரிதாபம்.
கெஞ்சுடா நீ கெஞ்சலேனா மவனே கஞ்சிடா என்று மிதப்பாய் நிற்பாள் அவள். சரி வேண்டாம் போலும் என்று விட்டு விலகித் தொலைத்தால் போதும், பிறகு ஒரு ரகளையே நடக்கும்.
வேறு வழி? கெஞ்சிக் கொஞ்சி பின் கிடைப்பாள் அந்த வஞ்சி ஓர் ஒன்றையணா முத்தத்துக்கு ;-)
இரவுக்காய்... ம்ம்ம் இறைவன் ஏன் இரவைப்படைத்தான்? அட இரவில்லையேல் இன்பமே இல்லை. பலரும் அது உறங்குவதற்குத்தான் என்று நினைத்துக்கொண்டு குறட்டையோடு தயாராக இருப்பார்கள்.
சோத்தப்போடு ஒரு சங்கீதம் மிச்சம் வெச்சிருக்கேன் என்ற மிதப்பு கண்களில் மின்னியலையும்.
இரவு காதலுக்குச் சொந்தம். இளமாலை தொட்டு இருள் ஏற ஏற காதலும் ஜிவ்வென்று ஏறும், அந்த இரவுக்காய்.
சரி இரவு வந்தாச்சு. வந்து? உறவில்லேன்னா? தொலைஞ்சுதே சங்கதி. ஆக இரவும் வேண்டும் அதில் அதனோடு உறவும் வேண்டுமே.
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்.
யார் ஏழை? உழைப்பவன் எவனும் ஏழையில்லை. கையேந்துபவன் மட்டும்தான் ஏழை. மாடி வீட்டில் இருந்தாலும், தன் தேவைக்காக கையேந்தினால் அவன் ஏழைதான்.
பெண்கள் ஆண்களை ஏழையாக்கிப் பார்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஏங்கும் ஏழையாகிறான் காதலன் தன் காதலியின் முன். இல்லேன்னு யாராச்சும் சொல்லுவீங்களா?
அடியே ஆருயிர்க் கற்றாழை ஆசையாய் ஒரு முத்தம்தா செவ்விதழ் சுழித்து என்று கேட்டுவிட்டால் போதும், உடனே பதில் வரும். "மாட்டேன்" அடடா இந்த ஏழைகள்படும் பாடு இருக்கிறதே :)
இவ்ளோ பாடு படுத்துகிறாளே இவள். நான் தானே தவிச்சிக்கிடக்கிறேன். என்னை ஏன் காய்கிறாய் நிலாவே. இவளைக்காய் என்கிறான் தலைவன். அதுவும் எப்படி?
எலிதான் காயுதுன்னா எலிப்புழுக்கையும் ஏன் சேந்து காய்கிறது என்று எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க. தஞ்சாவூர் கிராமங்களில் சொல்லப்படாத பழமொழிகளே இல்லை என்று சொல்லலாம்.
காதல் படுத்தும் பாட்டில் தலைவன் காய்ந்துதான் கிடக்கிறான். அட நிலா ஏன் காயுது. அது யாரின் வரவுக்காகக் காயுது. சூரியனாய் இருக்குமோ? இருக்கும் இருக்கும்.
நிலாவே உனக்குத் தெரிகிறதா காய்வதென்பது எத்தனை கொடுமை என்று. எனவே நீயும்காய், நிதமும் காய். பவுர்ணமிக்கு மட்டும் விறுவிறுப்பாய்க் காய்ந்தால் போதாது. தினமும் காயவேண்டும். இல்லையெனில் இவள் சரிவரமாட்டாள். இதெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாய் நிலாவிடம் தலைவன் சொல்கிறான். நேரில் நிற்கும் இவளைக்காய் என்று.
அடடா இதற்குள் என்னே ஒரு மந்திரப் பொருள் பாருங்கள். நேரில் தான் நிலாவே இவள் நிற்கிறாள். பாவி படுபாவி. மனுசன் வேதனை புரியுதா இவளுக்கு? பாரு அப்படியே கல்லு மாதிரி நிற்கிறாள்?
பொண்ணுன்னா அனல் பட்ட வெற்றிலையாய்த் துவள வேண்டாம்?
அப்படியே ஒரு வளைவும் காட்டாமல் என் நேரில் அப்படியே சிலை மாதிரி நிற்கும் இதோ இவளைக்காய் காய் காய் காய் என்று பாடுகிறான்
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும்காய் நிதமும்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்
பாருங்க, இதெல்லாம் காய் காய் தாங்க. ஆனால் அத்தனையும் உண்ணத் திகட்டாத கனி கனி கனி கண்ணதாசன் கனிகள்ங்க. வாங்க. அடுத்த இருவரிகளுக்கு.
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
18. உருவங்காய்
19. பவ்ருவங்காய்
காதலனோ மிகத் தெளிவாக ஏழு காய்களை வீசி, இவளே இரக்கம்ற்றவள் இவளையே காய் நிலாவே. அருகிருந்தும் அப்படியே நிற்கிறாள், நீ காய்ந்தாலே இவள் கழுத்தைக் கட்டிக்கொள்ள ஓடிவருவாள் என்று தன் மனக்குறையைச் சொன்னதும், பெண் மனமல்லவா. அப்படியே இளகுகிறது வளைகிறது தாழ்கிற்து அவனுக்காகப் பாடுகிறது அதுதான் பெண்மை. பெண்மையின் மேன்மையான ரகசியம்.
தருவதற்கென்றே பிறந்தவர்கள் பெண்கள். அவர்கள் அழகில் மட்டும் தாராளம் இல்லை அன்பிலும் தாராளம், அணைப்பிலும் தாராளம், கனிவிலும் தாராளம், காதலிலும் தாராளம். என்ன வித்தியாசம் என்றல் ஆண் எப்போதும் துடித்துக்கொண்டே நிற்பான். பெண் அதற்கென்று ஒரு சூழலில் அமர்க்களமாய் எழுவாள். எழுந்தால் இவன் விழுந்தான், அவ்வளவுதான்.
என்னுடைய உருவம்தான் நான் முரண்டு பண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து ஒட்டிக் கிடக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமே அவளுக்கு. நிலவைப் பார்த்து நிலவிடம் சொல்வதுபோல் சொல்கிறாள்.
உருவங்காய் ஆனாலும் உள்ளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவா
சிலையைப்போல் சலனமற்று நிற்பதாய்த் தோன்றும் பெண்ணின் உள்ளே பல வண்ணத்துப்பூச்சிகள் பலகோடி சிறகடித்துப் பறப்பதை யாரறிவார்? இப்போது அவளால், அவனைக் காய் என்று சொல்லமுடியவில்லை. அவன் தான் கொதித்து நிற்கிறானே. ஏழு காய்களை எடுத்துவீசி இந்தக் கனியின் கனியிதழுக்காகக் காத்திருக்கிறானே.
இருவரும் சேர்ந்து இனி பாடுகிறார்கள்
அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஒருவழியாய் இருவரும் யார் யார் மடிமீது என்று அறிந்துகொள்ள முடியா வண்ணம், யார் கரம் யாரை வளைத்துக்கொண்டு என்று தெரியாமல், உஜாலாவுக்குத்
தாவுகிறார்கள். அதோடு நின்றார்களா. இல்லை இத்திக்காய் காயாதே. எங்களை விட்டுவிடு. அத்திக்கில் ஊடலில் கிடக்கும் ஏனைய காதலர்களைக் காய் என்று டாடா சொல்லி
அனுப்பிவைக்கிறார்கள்.
அனுப்பி வைத்துவிட்டு....
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்
நான் பிறந்த ஊர் ஒரத்தநாடுங்க. ஒரத்தநாடு தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கடற்கரையோரம் வாழும் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேனீர் அருந்தும்போது
வெறும் பால் மட்டும் சேர்க்கமாட்டார்கள். கூடவே ஏலக்காய் வேண்டும் அல்லது இஞ்சி வேண்டும் அப்படியே பல சுவைமிக பொருட்களைச் சேர்த்து அருமையாய்
கமகமக்கும் மசாலா தேநீர் ஆக்கிவிடுவார்கள். ஒருமுறை அதைப் பருகிப் பழகிவிட்டால் அவ்வளவுதான். நாக்கு மீண்டும் அதையே கேட்டு மல்லுக்கு நிற்கும்.
ஏலக்காய் பல்லுக்கு நல்லது என்பதால் அழகிய காதல் சொல்லுக்கும் நல்லது. ஏலக்காய் தொண்டைக்கு நல்லது என்பதால் காதலில் கனிந்துபாடும் பாட்டுக்கு நல்லது.
அதுமட்டும் இல்லீங்க இன்னொரு மிக முக்கியமான விசயம் ஏலக்காயிடம் இருக்குங்க. அது இந்தக் காதல் என்றால் முகம் சுழித்து காத தூரம் ஓடுபவர்களின் மலட்டுத் தனத்தை உடைத்து ரத்தம் சுத்திகரித்து ஆண்மையை வலிமையாக்கி.... இவ்ளோ போதுமா இன்னும் சொல்லவேண்டுமா?
தேநீருக்கே இந்த ஏலக்காய் தரும் வாசமும் வீரியமும் இத்தனை என்றால், வாழ்க்கைக்கு? அதான் தலைவி சொல்கிறாள், ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம்
வாழக்காய் என்று. ஒரு தரம் அந்த வாசனையைத் தேநீரில் பருகிவிட்டால் எப்படி விடமுடியாதோ அதே போல அவர்கள் உள்ளமும் ஒருவரை ஒருவர் விடாமல்
வாழவேண்டும் என்று கண்ணதாசன் முடிவுபண்ணிட்டுத்தான் இப்படி எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சரி அவர் அதோடு நிக்கலீங்க, ஒருககால் அதுகூட கைகொடுக்கலேன்னா இந்த ஜாதிக்காயைக் கொண்டுவருகிறார் வாழ்க்கைக்குள். தலைவியின் கவலையே அதுதானே? எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி அமையவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் காதல் விருப்பம்.
ஜாதிக்காயும் வாசம் வீசும் சமாச்சாரம்தான். ஏன் கண்ணதாசன் இப்படி வாசனை வீசும் சமாச்சாரமாகவே கொண்டுவருகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம்
காரணமாகத்தான். முதலிரவு என்றால் மல்லிகை மணம் வேண்டுமல்லவா? திருமணம் என்ற பேச்சு வந்தாலே பூக்கள்தான். அவை தரும் வாசனைதான். அப்படியே
கிளர்ச்சியை ஊட்டி, ஊட்டியையே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.
ஜாதிக்காயை கொஞம் அதிகமாகப் பயன்படுத்திவிட்டால் என்னாகும் தெரியுமோ மயக்கம்தான் கிறக்கம்தான் போதைதான். அந்த ஜாதிக்காய் வைத்திருக்கும்
பெட்டகத்தைப்போல அதாவது பெட்டியைப்போல அதைத் திறந்தால் அந்த வாசனையில் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கிடைக்க அதனுள் இன்பம் கனியக்காய் என்று நிலாவை காயச்சொல்லிக் கேட்கிறாள். ஏன் இப்போதுமட்டும் காயச் சொல்கிறாள் என்றால் தலைவன் தலைவியின் மடிக்கு வந்துவிட்டான். இனி நிலா காய்வது அவசியமாகிவிடுகிறது. அமாவாசையோ தேய்பிறையோ கூடாது அவளுக்கு. அப்போதுதானே காதல் ஊட்டப்பட்டு அவர்கள் அற்புதமாய் வாழலாம் அல்லவா!
20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்
அப்படியே 23 காய்கள் இதுவரை வந்துவிட்டன. இத்தோடு நிற்கலீங்க. கண்ணதாசன் அவ்வளவு எளிதில் திருப்தி பட்டுவிடுவாரா என்ன? மேலும் அவர் தன் பாட்டுச் சாவடிக்குள் குவித்த காய்களை அடுத்த இடுகையில் காண்போம்.
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
தலைவி சொல்லிவிட்டாள் நிலாவே நாங்கள் ஏலக்காய் வாசனையாய் வாழக்காய் என்றும் ஜாதிக்காய் பெட்டகத்தின் வாசனையாய் எங்கள் வாழ்வில் இன்பம் கனியக்காய் என்றும். நிலாவை இனி காயாதே என்று சொல்லாமல் வந்து எங்களிடம் காய் அதனால் எங்களை வாழவைப்பாய் என்று சொல்லிவிட்டாள். இனி தலைவன் என்ன சொல்வது?
தலைவன் ஒரு ரகசியத்தை ரகசியமாய் சொன்னதைக் கேளாத வான் நிலாவுக்குச் சொல்லுகிறான். நிலாவே, தலைவி சொன்னதெல்லாம் உனக்கு விளங்கியதா இல்லையா? ஒழுங்காய் விழங்கிக்கொள். உனக்கு எப்பவும் சொல்வதைக் கேட்கும் பழக்கம் கிடையாது. எதையாவது குண்டக்க மண்டக்க செய்துகொண்டிருப்பாய். தூதுபோ என்றால் முகில் படுதாக்குள் பதுங்கிவிடுவாய். காயாதே என்றால் உடனே வந்து காயோ காயென்று காய்வாய். காரணம் என் மீதுள்ள ஊடல் என்று நானறிவேன்.
ஆனால் நீ புரிந்துகொள் நிலாவே, நீ தலைவியைக் காய்ந்தால்தான் அவள் என்னைத் தேடுவாள். எனக்கு நீ காயவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நான் எப்போதும் காய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆகவே என்னைக் காய்வதை விட்டுவிட்டு நீ தலைவியையே காய். அப்போதுதான் காதல் கனியும் காமம் சுவைக்கும் வாழ்க்கை வசமாகும். என்ன விளையாடுகிறாயா என்கிறாயா? உண்மையை உனக்குமட்டும் ஒரு கிசுகிசுப்பாய் உன் காதோடு சொல்கிறேன் கேள்.
தலைவியைக் காதலிக்கும்முன் நான் உன்னைத்தானே காதலித்தேன். அதில் மாற்றமில்லை என்றென்றும் நீ என்னுயிர்தான். என் செல்லம்தான். நீ தூரத்து நிலா என்பதால் உன்னை அருகில் கொண்டுவரும் வரமாகத்தான் இந்தப் பக்கத்து நிலா. உன்னைக் கிள்ளி எடுத்து வைத்தச் சின்ன நிலாதான் இவள். இந்தப் பக்கத்து நிலாவோடு நான் சொர்க்கம் காண்பது நீ காய்வதால்தான். அதாவது தலைவியிடம் நான் காணும் சுகமெல்லாம் நீ காய்வதால் அவள் கொள்ளும் காதலால்தான். அதாவது உன் காதலைத்தான். அவளைத் தூண்டிவிட்டு அவளோடு கூடும் போது நான் கொள்கிறேன். நீதானே என் உயிர் என்று நிலாவிடம் தலைவன் கதைவிடுகிறான்.
நிலா அவன் வார்த்தைகளில் மயங்கி ஓ அப்படியா கதை? நீ என்னைத்தான் காதலிக்கிறாயா என்னோடு கொஞ்சிக் குலவுதாகத்தான் நீ அவளுடன் இருக்கிறாயா என்று புரிந்துகொண்டு நாள் தவறாமல் தலைவியைக் காய நிலா அக்கறையாய் வந்துவிடும் என்று நினைப்பு தலைவனுக்கு! லஞ்ச லாவண்யங்களில் உச்சிக்கே போனவர்களாயிற்றே ஆண்கள். ஏமாற்றும் கலையைச் சொல்லித்தரவேண்டுமா? ஊடலை உடைக்க இவர்கள் சொல்லும் பொய் யுகம் தாங்குமா?
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
24.விளங்காய்
25. தூதுவழங்காய்
மேலும் நாலு காய்கள் பற்றி அடுத்த இடுகையில் நாம் காணும்வரை நீங்கள் காயாதிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள் கண்ணதாசனும் வண்ணநிலாவும்!
உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ
இந்த வரிகள்தான் கண்ணதாசனை இந்த சினிமாப்பாட்டு எழுத வைத்த கவர்ச்சி வரிகள். கண்ணதாசன் நொறுக்குத் தீனி தின்ற காகிகத்தில் யாரோ எழுதிய சில வரிகளைப் பார்க்கிறார். அதிலிருந்த காய்கள் இவர் மனதைக் கவிதையாய்க் கனியவைக்கின்றன.
கவிஞனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அவன் எழுதும் கவிதைகள் சில வேறெவரின் கவிதையையோ வாசித்து பிரமித்ததின் பலனாய் உருவாகும். அப்படியான பாதிப்பில் கவிதை எழுதாத கவிஞர்களே இருக்கமுடியாது என்று ஒரு கவிஞனாய் நான் சத்தியம் செய்வேன்.
கவிஞன் என்பவனே நேற்றைய கவிஞனின் தொளேறி நிற்கும் புதிய உயரமானவன்தான். நேற்றைய கவிஞன் இல்லாவிட்டால் இன்றைய கவிஞனின் உயரம் குள்ளமாகவே இருக்கும்.
வெள்ளரிக்காயா
விரும்பும் அவரைக்காயா
உள்ளமிளகாயா
ஒருபேச் சுரைக்காயா
இதுதான் கண்ணதாசனை உலுக்கிய வரிகள். நொறுக்குத்தீனி தின்றவர் அப்படியே அதன் சுவையில் சறுக்கி விழுந்தார். ஏன் இதை வளர்த்தெடுத்து காய்களின் ஊர்வலம் ஆக்கக்கூடாது என்று தன் கற்பனை சிட்டைப் பறக்கவிட்டார். ஒருமுறை வைரமுத்து நான்கு வரிகளாய் இக்கவிதையைச் சொன்ன ஞாபகம். இந்தக் கவிதை முழுவதும் கிடைத்தால் நான் பாக்கியசாலியாவேன். அறிந்தோர் எனக்கு அறிவிக்க அன்புடன் பணிகிறேன்.
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்கிறான் தலைவன் தலைவியைப் பார்த்து. அட என்னங்க தன் காதலியைப் பார்த்து இப்படியா மிளகாய் சுரைக்காய் என்று திட்டுவது? பிறகு காதல் எங்கே மலரும் சண்டை முள்தான் மண்டும் அல்லவா? மிளகாய் என்று அவள் குணத்தையும் சுரைக்காய் என்று அவள் உருவத்தையும் கேலிசெய்வதாகவல்லவா இருக்கிறது இந்த வரி என்று நீங்கள் கவலைப்படவேண்டாம். காதலி அந்தக்காலத்தவள் தமிழ் அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். இந்தச் சிலேடையெல்லாம் அவளுக்கு பிசுகோத்து.
இந்தக்காலப் பெண்போல் ஆங்கில மீடியத்தில் படித்தவளா அவள்? மிகுந்த உணர்ச்சியில் பொங்கித் ததும்பி தன் காதலைச் சொல்லும்போதுகூட ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் சொல்லும் இன்றைய தூய தமிழ்ப் பெண்ணா அவள்? வள்ளுவன் கம்பன் இளங்கோ போன்றோருக்கும் முந்தைய கவிஞர்களும் நக்கீரன் ஒட்டக்கூத்தன் போன்றோருக்கும் முந்தைய விமரிசகர்களும் உருவாக்கிய பழந்தமிழ் மாதாயிற்றே அவள்?
உள்ளமெலாம் மிளகாயோ என்பதை உள்ளம் எல்லாம் இளகாயோ என்று சரியாகவே அவள் புரிந்துகொள்வாள். அதே போல ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்பதை ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ என்றும் புரிந்துகொள்வாள். தலைவன் அவள் புரிந்துகொள்வாள் என்ற தைரியத்தில்தான் உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்று பயமின்றி சொல்கிறான். ஒருக்கால் புரியாமல் அவள் நின்றால் அதன் வழியே ஊடல் வரும் அதன்பின் காதல் வரும் அது சொர்க்கம் தரும் என்ற நப்பாசையாகவும் இருக்கலாம்.
அதைத்தொடர்ந்து தலைவன் சொல்கிறான் வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ? இதுவரை வானத்து வெண்ணிலவையே காய் காய் என்று கதறிக்கொண்டிருந்துவிட்டு. நீதான் என் வெண்ணிலா என்று தலைவியின் தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் தலைவன். வெள்ளரிக்காய் பிளந்து பார்த்திருக்கிறீர்களா? வேறு எந்தக்காயைப் பிளந்தாலும் அத்தனை அழகான சிரிப்பை நீங்கள் தரிசிக்கவே முடியாது. வெள்ளரிக்காய் பிளந்ததைப்போல் வெண்ணிலவாகிய நீ சிரிக்கமாட்டாயா என்று காதலன் தலைவியிடம் ஒப்புதல் கேட்கிறான். இபோது வெண்ணிலா தன் அருகிருக்கும் தலைவியாகிவிடுகிறாள். ஆண்கள் வசதிக்கேற்ப வர்ணனைகளை மாற்றிக்கொள்வார்க்ள்தானே?
பொம்பள சிரிச்சாப்போச்சு என்பார்களே என்ன பொருள், அவள் சம்மதம் தந்துவிட்டாள் என்று பொருள். பிறகென்ன இவர் கைவரிசையைக் காட்டிவிடுவாரல்லவா? அதுதான் நோக்கம்.
26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்
இவ்விரு வரிகளில் கண்ணதாசன் என்ற வினோத கவிதை மரம் நான்கு காய்களை உலுக்கிக்கொடுத்துவிட்டது. அத்தோடு நிற்கவில்லை இறுதியாய் மேலும் இரு காய்களைத்தர நாளை வருகிறது என் இடுகையில் வழியே!
கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா
அத்திக்காய் காய் காய் பாட்டின் கடைசி இரு வரிகளுக்கு வந்துவிட்டோம். இந்த இருவரிகளில் கண்ணதாசன் விருந்து வைப்பது இரு காய்களை. அதில் முதலாவது.
கொற்றவரைக்காய். கொத்தவரங்காய் என்று காய்கறிக்கடையில் கூடையில் குவித்துவைத்திருப்பார்களே அதுதான். பச்சைக் கொலுசுகளாய் அவை பளபளக்கும். கொற்றவரைக்காய் என்றால் கண்ணதாசன் முன்வைக்கும் பொருள் என்ன?
கொற்றவன் பெற்ற குலக்கொடியைக்
கல்விகற்க விட்டேனடா அடா
குற்றம் புரிந்தனையா இல்லையா
அதை மட்டும் உரைத்துவிடு
கொற்றவன் என்ற சொல் கேட்டதுமே என் மூளைக்குள் ஓடிவரும் ஞாபகம் இந்த வரிகள்தாம். இது பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன். அம்பிகாபதி அமராவதி காதல் நாடகத்தில் வரும் ஒரு பகுதி. குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவதிக்குத் தமிழ் சொல்லித்தர வந்த அம்பிகாபதி அவளைக் காதலிக்கிறான். அதை அறிந்த மன்னனின் விசாரனைக் கூடம் எழுப்பும் கேள்வியே இது.
கொற்றவன் என்றால் அரசன். கொற்றவரைக் காய் என்றால் என் மன்னனைக் காய். பழந்தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவனை தன் அரசன் என்றே காண்பார்கள். என் ராசா என்று செல்லமாய்க் கொஞ்சுவார்களே அது இதன் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தக் காலப்பெண்போல கணவனைக் கடன்காரணாய்க் காண்பதில்லை :)
தலைவி சொல்கிறாள், நிலவே நீ என் தலைவனைக் காய். அவன் காதல் அதனால் பெருகட்டும். எங்கள் வாழ்வு இனிக்கட்டும். என் தலைவன் பொய்யுரைப்பதுபோல் நானொன்றும் காதல் உணர்வுகள் இல்லாமல் இல்லை. எனவே கோதை என்னைக் காயாதே. கோதை என்றால் பெண். இந்தக் கோதை காதல் வாதையில்தான் நாளெல்லாம் இருக்கிறாள். எனவே என் கொற்றவரைத்தான் நீ காயவேண்டும் என்கிறாள்.
தலைவனின் முகம் பொய்க்கோபத்தால் வாடுகிறது. இந்த ஊடலுக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் மனதைத் திருப்பிக்கொள்ளா கள்ளத்தனத்துடன்.
உடனே தலைவி அவன் தோள்களில் விழுகிறாள். இந்தப் பெண்களே ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கும் புத்திசாலிகள்தானே? அப்படியே கழுத்தை வளைக்கிறாள். மனமும் விழிகளும் கனிந்துருக வெண்ணிலவைப் பார்க்கிறாள். வெண்ணிலவே நீ எங்கள் இருவரையும் காயாதே என்று செல்லமாகச் சொல்லிச் சிணுங்குகிறாள்.
அத்தோடு அவள் நிற்கவில்லை அவள் காதல் உள்ளம் காதலை அடைந்த பூரிப்பில் இந்தக் காதலுக்குக் காரணமான நிலவைப்பார்த்து பரிதாபப்பட்டு, இப்படி தினம் தினம் தனிமையில் வந்து வானில் காய்கிறாயே பாவம் இப்படி நீ இனி தனிமையில் ஏங்காதே வெண்ணிலவே. உன் காதலன் ஆதவன் மடிசென்று சேரு என்று வெண்ணிலவுக்குப் பரிந்துரைக்கிறாள்.
இத்தோடு பாடல் முடிகிறது ஆனால் அது நம் இதயத்தில் என்றென்றும் தொடர்கிறது. காலத்தால் அழியாத இந்த கண்ணதாசப் பாடலுக்கு முடிவேது? காய் காய் என்று கவிதையாய்க் கனிந்தவன் நம் எல்லோரையும் கனியவைக்கிறான் அவன் மறைந்தபின்னும். கவிஞனுக்கு மறைவு உண்டா? இல்லவே இல்லை. கண்ணதாசன் வாழ்கிறான்.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வாழ்கிறான். நம் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் வாழ்கின்றான். காதல் என்ற சொல்லுக்கு கண்ணதாசன் என்று ஓர் அர்த்தம் உண்டென்று அகராதிகளைப் புதுப்பிக்க வேண்டும். இதோ அவன் கொட்டிக்குவித்த முப்பத்தியோரு காய்கள்.
01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்
12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்
18. உருவங்காய்
19. பருவங்காய்
20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்
24.விளங்காய்
25. தூதுவழங்காய்
26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்
30. கொற்றவரைக்காய்
31. தனிமையிலேங்காய்
இனி அவன் புகழ்பாட அவனை ஒட்டிப்பாட நான் எழுதிய மேலும் சில காய்கள் வருகின்றன கீழே:
கவிதைக்காய் சிலேடைக்காய்
கண்ணதாசன் கொய்யாக்காய்
வேலங்காய் விழியிங்காய்
தேடித் தோற்றேன் வெண்ணிலவே
நெஞ்சுருகாய் நினைத் தேங்காய்
காலம் தந்த பிரிவுக்காய்
வெஞ்சருகாய் காய்க்காமல்
வருவேன் நிலவே உன்னருகாய்
கள்ளிக்காய் கனவுக்காய்
ஆசைகள் நெஞ்சில் சுண்டக்காய்
காதல்காய் வாழ்வல்லவோ
கத்தரிக்காய் வெண்ணிலவே
கவிஞர் புகாரி
4 comments:
ஆசான் எங்கே விளக்கம்... தொடருங்கள்... நான் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று இது...
அசத்திடீங்க , மிக அருமையான விளக்கம். இன்று தான் படிக்க நேர்ந்தது. உங்களின் விரல்களில் தமிழ் நாட்டியம் ஆடுகிறது.Athammohamed, Belgium
ரொம்ப நல்ல இருக்கு
அருமையான விளக்கம்
Post a Comment