02 முகம் மூடி அகம் திறப்பவர்கள்

முகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன். எனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் பொதுவில் காட்டவே விரும்புகிறேன். அதுதானே நான்?

என்னை அன்புடையோனாகப் பார்ப்பவர்கள்
அன்புடன் நிர்வாகியாகப் பார்ப்பவர்கள்
கருணையுடையோனாகப் பார்ப்பவர்கள்
பலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்
காதல் கவிஞனாக மட்டுமே பார்ப்பவர்கள்
தமிழ்ப் பற்றாளனாகப் பார்ப்பவர்கள்
கிரந்தம் விரும்புவதால் தமிழ் விரோதியாகப் பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வியப்போடு பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வெறுப்போடு பார்ப்பவர்கள்
தனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்
மதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்

இப்படியே அடுக்கலாம்.....

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முகம் காட்டி நான் நிற்கலாம்தான். ஆனால் இவை அனைத்தின் கலவைதானே உண்மையான நான்?

என் நிஜமுகத்தோடு, அது எத்தனை அழகாயிருந்தாலும் சரி எத்தனை அசிங்கமாக இருந்தாலும் சரி, என்னைக் காட்டிக்கொள்வதுதானே சரி.

ஏன் பயப்படவேண்டும்? யாருக்குப் பயப்படவேண்டும்?

என் புத்திசாலித்தனங்களை மட்டுமல்லாமல் என் முட்டாள்தனங்களையும் கொண்டவன்தானே நான் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு நாணம் வரவில்லை.

கண்ணதாசன் வனவாசத்தில் இயன்றவரை தன் உண்மை முகம் எழுதினார். காந்தி அவருக்கு அந்த எண்ணத்தைத் தந்தார் என்றும் சொல்கிறார்.

போலியற்ற நிலையில்தான் மனிதர்கள் உயர்வானவர்கள் என்பது என் கருத்து.

கலாச்சாரம் பண்பாடு, கௌரவம், பெறுமை என்ற போர்வைக்குள் சுயம் கொன்று ஆடும் கூத்து எனக்கு அருவறுக்கத்தக்கதாய்ப் படுகிறது.

நான் நிச்சயமாக எவரையும் குறைகூறவில்லை. என் மனமும் ஒருநாள் முகமூடி நாடியது. முயன்றும் பார்த்தேன், பின் அதைக் கைவிட்டேன்.

நான் நானாக இருப்பதால் எவருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றே பொருள், இதில் இழப்பு என்ன இருக்கிறது?

3 comments:

ராஜவம்சம் said...

நேரம் இருந்தால் கிழே செல்லவும்

http://nizamroja01.blogspot.com/2009/10/blog-post_16.html

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

சிந்தனை அருமை ‍ உடன் படுகிறேன். இருப்பினும் சமுதாயத்தில் நாம் ஒருவனாக மதிக்கப்பட வேன்டுமெனில் ‍ நமது மறு பக்கத்தினைக் கண்ணதாசனைப் போல வனவாசம் எழுததாமல் இருக்க வேண்டாமா ? என்ன செய்வது ‍ நாம் புகழ் பெற்றவருமில்லை ‍ எதைச் சொன்னாலும் மற்றவர்கள் மதிப்பதற்கு ‍ அல்லது முற்றும் துறந்த எதைப்பற்றியும் கவலைப் படாதவரும் இல்லை. என்ன செய்வது ‍ இன்னும் முகமூடிகள் தேவைப்படுகின்றன புகாரி

Unknown said...

கடவுள் பக்தி மிகக் கொண்டோரிடம் ஒரு கேள்வி.

கடவுளுக்கு முன் உங்கள் முகமூடி செல்லுபடியாகுமா? கடவுளுக்கே எல்லாம் தெரியும் என்றால் மனிதர்களுக்குத் தெரிந்தால் என்ன?

கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு ஒரு கேள்வி.

மாயைகளை நம்பாவதர் நீங்கள் என்றால் உங்களையே ஏன் ஒரு மாயையாய் ஆக்கிக்கொள்கிறீர்கள்?

எல்லாம் இயற்கை என்று நம்பும் நீங்கள் ஏன் உங்கள் இயற்கையை மூடுகிறீர்கள்?

போலிகளுக்கு விழா எடுத்து பொழுதுக்கும் கொண்டாடுவதால்தான்
பல உண்மைகள் பதுங்கிக்கிடக்கின்றன.

நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்று கண்ணதாசன் பாடல் காதில் ஒளிக்கிறது