என்னைப் பார்

உனக்குச் சொன்னால்
புரிய மாட்டேனென்கிறது

கட்டுகளைக் கொஞ்சம்
கழற்றி எறிந்துவிட்டு
உள்ளத்தால் உள்ளத்தைத்
தொட்டுப் பார்

என்னை என்ன
செய்யச் சொல்கிறாய்

நான் தேடும்
எல்லாமாகவும் நிறைந்திருக்கும்
உன்னை நான் ஆராதிக்காமல்
வேறென்ன செய்ய

இந்த உறவு உரசல் உருவாக்கும்
வழக்கு நிமிடங்கள்கூட
எத்தனைத் தித்திப்பு தெரியுமா

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
இந்த உலகத்தை
எல்லாம் தலைகீழ் நாடகம்

வேண்டாம்களை
வேண்டச் சொல்லியும்
வேண்டும்களைத்
தீண்டவிடாமல் விரட்டியும்
விளையாடும் விபரீதங்கள்
ஜீவனைக் கடித்து
நடைபிணமாய்த் துப்புகின்றன

கொஞ்சம் வாழலாமென்றால்
புழுத்துப்போன தடைகளெல்லாம்
உயிரை இழுத்துவைத்து
ஊசிகளல்லவா ஏற்றுகின்றன

பொய்யாய்ப் பெருங்கதையாய்
மெல்லத் தொலையாமல்
வேறென்ன நிகழும் இனியும்

செத்ததும் கிடைக்கும்
சந்தோசம் என்று
சீக்கிரமாகவே புதைக்க
தினம் தினம் மல்யுத்தம்

வாழும் வழிதேடி ஓடி வந்தால்
ஏன் இந்த விளங்காத மௌனம்
உன்னிடம்

காலங்காலமாய் அணிவிக்கப்பட்ட
கண்ணுக்குத் தெரியாத
கண்ணாடிகளைக் கழற்றியெறிந்துவிட்டு
என்னைப் பார் அழகே

No comments: