கண்ணீரே இல்லை கவிதை முற்றும்

அவன்
புழுதிகளாலும்
சபிக்கப்பட்டுவிட்டான்

மரணத்துக்கு
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அவனுக்கு அடங்காப் பசி

ருசியில்லாப் பிண்டம்
அவனை
மரணமும் மறுதலிக்கிறது

தெருத் தெருவாய் அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனமானான்

உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாக் குருவியானான்

மென்று மென்று தின்று பார்த்து
பாதியில் மீதியைத் துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று மரணம்

மிச்ச எலும்புகளைப்
பொறுக்கிப் புதைத்துப் பார்த்தான்

கிழிந்த தசைத் தொங்கல்களை
நெருப்புக் கூட்டி எரித்துப் பார்த்தான்

விடைதரா விருந்தாளியாய்
வேதனை மட்டும்
ஒட்டிக்கொண்டேதான் இருந்தது

வேறொரு நல்ல உடல்தேடி
எங்கோ அலைந்துகொண்டிருக்குமோ
தனக்கான மரணமும் கூட
என்று தாழ்வு மனப்பான்மையின்
பாதாளம் தொட்டான்

அப்போதுதான்
பறந்து வந்தது ஒரு பறவை

அதன் முறிந்த சிறகுகளை
அவன் முகத்தில் விசிறியது
இரத்தம் சொட்ட

வெடித்து எழுந்தான்
துடித்து அழுதான்
இப்போது அவனுக்காக அல்ல
அந்தப் பறவைக்காக

மீதக் கதையில்
ஆனந்தத்திற்காகக்கூட
கண்ணீரே இல்லை

கவிதை முற்றும்

No comments: