அந்தக் கணம்


ஊற்றப்பட்ட தேனீருக்கும்
உரைக்கப்பட்ட விசத்துக்கும்
மறுப்பேதும் கூறவில்லை நான்
சந்தோசமாய் எடுத்து அருந்தினேன்

அன்பே தெய்வமென்று நம்பியிருந்த காதுகளில்
அன்பினால் அழித்தாய் என்னை
என்றுன் நாக்குநுனி கீறியபோது
கூளம் கூளமாய்ச் சிதைந்தேன்

அறிவும் உணர்வும் கைகோத்து
உலகை வளைக்கும் உன் நெஞ்சுரம்
அறியாப்பிஞ்சின் தெரியாச்செயல் உனதென்றது
அரியும் அறிவோடு

இப்போதா அப்போதா என்று
கேட்கத்தோன்றினாலும்
தொண்டையில் தீப்பற்றிக்கொண்டதால்
என் நாக்கு எழவில்லை

கேட்டுமட்டும் ஆகப்போவதென்ன
என்ற ஞானம் மௌனத்துக்குள் சுருட்டி
மடித்து வைத்தது என் குரலை

சூழ்ந்து நின்று சூரையாடிய
மரண நிழல்களைத் துரத்திவிட்டு
உயிர்நீர் வார்த்த கரங்களுக்கு
விலங்கு பூட்டுவது நியாயமா
என்று நீ முறையிட்டபோது
என் நிலைமையின் அவமானம்
என்னை வெட்டிக் கூறுபோட்டது

தந்தால் தருவேன் என்ற
பேரம் எனக்கு இடுகாடு
தராவிட்டாலும் தருகிறேன் என்பதே
என் இதயவீடு

இறுதியாய்
என் உலர்ந்த ரத்தம் தூவி
இலக்கிய ரோஜா வளர்க்கிறேன்
தீப்பந்தங்களோடு வந்து இங்கும் நின்றுவிடாதே

சம்மதமின்றி நானெந்த
நக மொட்டையும் நறுக்கியதில்லை
மெழுகுத் திரியையும் கருக்கியதில்லை

பழிவீசும் சாதுர்யங்கள் விலகட்டும்
விழித்துக்கொண்ட உண்மை
இனியேனும் உயிரில் ஒளிவீசி
எனைக் காக்கட்டும்

3 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

வாசித்து முடிக்கும் போது என் கண்கள் கலங்கின. மிகவும் அற்புதம்.

சாந்தி said...

உங்களால் கவிதையிலாவது வருத்தங்களை தெரிவிக்க முடியுது..

பூங்குழலி said...

ஊற்றப்பட்ட உரைக்கப்பட்ட நல்லா இருக்கு

உண்மை சம்பவமா ..பொருமலாய் வடிகிறது கவிதை