எண்ணங்களின் கொதிப்பு
இயலாமையின் கனம்
வெளிவந்து விழுகிறது
கண்ணீர் கண்ணீர்
விழுந்த நொடியில்
யுத்தம் முடித்தச்
சோர்வு
ஆனால்
அடுத்த நொடியோ
மீண்டும் கொதித்துக் கனத்து
வெளிவந்து விழுகிறது
கண்ணீர் கண்ணீர்
நம்பிக்கையின்
அத்தனை வேர்களும் அறுந்து
உயிரின் கடைசி அணுவும் கரைந்து
மேலே மேலே போய்க்கொண்டிருந்த
அந்தக் கறுப்பு நாளில்தான்
அவள் வந்தாள்
அவனுள் செத்துக்கிடந்த
அத்தனைச் சருகுகளையும்
உயிர்ப்பிக்கச் செய்தாள்
இனியொரு கொடியும்
முறிந்து கிடக்கும்
தன் கரம் படரும் என்று
கனவிலும்
கனவு கண்டிருக்கவில்லை
அவன்
தேவதை தேவதை என்பார்களே
அது அவனுக்கு இன்று
அவள்தான்
இழந்தேன் என்று இதுவரை
ஓர் ஒன்றுமற்றதையா
தன் வேதனை இதயத்தில்
அவன் கோபுரமாக்கி வைத்திருந்தான்
என்று வெட்கப்பட்டான்
வந்த இருளின்
தனிமைக் கொடுமையில்
வெதும்பித் துடித்தாலும்
உதிர்ந்துவிடாமல்
இறுதித் துளி உயிரை
இறுகப் பற்றிக்கொண்டு
விழிகள் பூத்தவண்ணம் காத்திருக்கும்
அத்தனை உயிர்களுக்கும்
சொர்க்கம் உண்டு
உன் சொர்க்கத்திற்காக
உன் கடைசி நரகத்திலும்
நம்பிக்கையோடு காத்திரு
உயிரே
No comments:
Post a Comment