நிசப்தங்கள் ஒன்றுகூடி
மாநாடு நடத்திக்கொண்டிருந்த
நட்ட நடு இரவில்

பொதி சுமக்கத் திணறித் திண்டாடிக் கதறி
உறக்கத்தை நெருப்பின் பற்களுக்கு
தின்னக் கொடுத்திருந்த என் தலையை

நடுங்கும் ஆயுள் ரேகையற்ற என் கரங்களால்
பிடித்துக் கசக்கிப் பிதுக்கி
அதன் கொடுங்கவலை கழிவுகளை
மரண நினைவுச் சாக்கடைகளை
வெளியேற்ற வெறியோடு போராட

இந்த அவல நாடகத்தை நமட்டுச் சிறுநகையோடு
இரவு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க
நான் வந்து பிழியட்டுமா என்று கேட்டுக்கொண்டே
பகல் படபடவென்று வந்தேவிட

பாரத்தின் சீழ் சட்டென உடைந்து பெருக்கெடுத்து
அதிகாலை நித்திரையாய்
திமுதிமுவென எரியும் விழிகளில்
ஈரமாய்ப் படர்ந்தது

Comments

பூங்குழலி said…
இரவெல்லாம் தூக்கமின்றி தவித்து அது வந்து அதிகாலையில் தழுவுவதை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் .கவிதையின் நடை தலையணையில் தலை தேய்த்து புரண்டு தவிப்பது போலவே இருக்கிறது .
புன்னகை மன்னன் said…
தூக்கமில்லாம தவிச்சு..
ஒரு கவிதையால தவிக்க வைக்கறீங்க...

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே