சின்னஞ்சிறு வயதில்
நிலவைத் தொட்டு மடியில் இட்டு
விழியிரண்டும் இமைகளுக்குள் கிறங்கிக் கிடக்க
வெதுவெதுப்பாய் முத்தமிட விரும்புவேன்

ஏழு வர்ண வானவில் ஊஞ்சலில்
தேகத்தைச் சிலிர்ப்புப் பூக்களாக்கும்
சிறு தூரல்களின் ஈரமான தழுவல்களில்
நானெனும் நினைவழிந்து
ஆடிக்கொண்டிருக்க ஆசைப்படுவேன்

சுழித்தோடும் பெருவெள்ள நதியின்
கம்பீரத்தின் மேல் ஓர் இலையாய்
மேலும் கீழும் ஏறியிறங்கி
போகுமிடம் அறியாத பூரிப்பில்
கனவுகளாய் மிதந்துபோக கனவு காண்பேன்

கண் தொடாத தூரங்களைக்
காணும் திசையெல்லாம் கொண்ட
ஆச்சரிய ஆகாயத்தின் காற்றில் ஏறிக்கொண்டு
இல்லாத சிறகுகளை
இருப்பதாய் அசைத்துப் பறக்க ஏங்குவேன்

வாலிபம் வந்தது
கற்பனைப் தவிப்புகள் வளர்ந்து வளர்ந்து
விருட்சங்களாய் நிறைந்தன
என் நிஜங்களை மூடி
முழுவதும் மறைத்தே விட்டன

நீ வந்தாய்
அட இதெல்லாம் ஒன்றுமே இல்லை
என்று உன்னை ஊட்டினாய்
என் மைய வேர்களையும் ஆட்டினாய்
கற்பனை யாவும் தூசெனத் தள்ளும்
நிஜம் காட்டினாய்

போய்விட்டாய்
ஆயிரம் கற்பனைகளிலும்
என்னிடம் உண்மை என்று இருந்த
என் உயிரும் பொய்யானது

Comments

சிவா said…
ஏழு வர்ண வானவில் ஊஞ்சலில்
தேகத்தைச் சிலிர்ப்புப் பூக்களாக்கும்
சிறு தூரல்களின் ஈரமான தழுவல்களில்
நானெனும் நினைவழிந்து
ஆடிக்கொண்டிருக்க ஆசைப்படுவேன்


ஆகா .. படிக்கும் போதே குளிர்கிறதுநீ வந்தாய்
அட இதெல்லாம் ஒன்றுமே இல்லை
என்று உன்னை ஊட்டினாய்
என் மைய வேர்களையும் ஆட்டினாய்
கற்பனை யாவும் தூசெனத் தள்ளும்
நிஜம் காட்டினாய்


உண்மை தான் ஆசான் ... காதலிக்க ஆரம்பித்த பிறகு காதலியை தவிர வெறு நினைவேது


ஆயிரம் கற்பனைகளிலும்
என்னிடம் உண்மை என்று இருந்த
என் உயிரும் பொய்யானது


இதுக்கு என்ன சொல்ல... விதி. (இதுக்கு மேல எழுதினா, அக்கா, அண்ணா எல்லாரும் அடிக்க வருவாங்க ஆசான் )
புன்னகையரசன் said…
என்னதான் செய்வது ஆசான்....

இவங்கள புரிஞ்சிக்கவே முடியல...

அருமை... வாழ்த்துக்கள்..
ஆயிஷா said…
போய்விட்டாய்
ஆயிரம் கற்பனைகளிலும்
என்னிடம் உண்மை என்று இருந்த
என் உயிரும் பொய்யானதுஎன் கண்களும் கசிந்தது. அருமை ஆசான்.
அன்புடன் ஆயிஷா

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்