எல்லோரும் எழுதுகிறார்கள்
இனிப்பாகவே எழுதுகிறார்கள்
நானோ கவிதை என்ற பெயரில்
எதையோ கிறுக்குகிறேன்
இருந்தாலும் அவள்
என் கிறுக்கலைத்தான் ரசித்தாள்

எல்லோரும் பேசுகிறார்கள்
தித்திப்பாகவே பேசுகிறார்கள்
நான் பேசுவதென்னவோ
அத்தனை மதுரமாய் இருக்காது
ஆனாலும் அவள் என்னோடுதான் பேசினாள்

எல்லோரும் புன்னகைக்கிறார்கள்
அழகாகவே புன்னகைக்கிறார்கள்
நான் ஒன்றும் அப்படியொரு
கவர்ச்சிப் புன்னகைக்குச் சொந்தக்காரனல்ல
ஆனாலும் அவள் என்னிடம்தான் புன்னகைத்தாள்

எல்லோரும் திரண்ட தோள்களுடன்
கம்பீரமாய்தான் நடக்கிறார்கள்
என் தோற்றமோ சாதாரணமாகத்தான் இருக்கும்
ஆனாலும் அவள் என்னைத்தான்
விரிந்த விழிகளுடன் பார்த்தாள்

எல்லோரும் நிற்கிறார்கள்
நானும் நிற்கிறேன்
நான் மட்டும்தான் என் உயிரை
கண்களில் நிறுத்தி அவளுக்காகத்
துடியாய்த் துடித்துத் தவித்து நிற்கிறேன்
ஆனாலும் அவள்
என்னைமட்டும்தான் விட்டுவிட்டு
எங்கோ போய்க்கொண்டிருக்கிறாள்

5 comments:

சீனா said...

இது நல்லா இருக்கே

கிறுக்கலை ரசித்தவள்
பேசியதை செவி மடுத்தவள்
புன்னகைக்குப் புன்னகைத்தவள்
விழிகளை விரித்து ரசித்தவள்
இறுதியில் விட்டு விட்டு எங்கோ போகிறாள்

ஏன் நண்பா

அவள் காதலிக்க வில்லை - உன்னை ரசித்தாள் - உனது பல செயல்கள் அவளுக்குப் பிடித்திருக்கின்றன - அனால் காதலிக்க வில்லை,

காதல் வேறு - அதில் இவைகள் அத்தனையும் இருக்கும்
ஆனால் இவைகள் இருப்பதனால் மட்டும் அது காதலாகி விடாது

காதலர்களே கவனம் தேவை

Unknown said...

அருமையான விமரிசனத்திற்கு நன்றி சீனா

பலரும் பெண்கள் ஒரு பார்வை பார்த்துவிட்டாலே அது காதல் என்று உறுதி செய்துவிடுகிறார்கள். அவளைப் படாத பாடும் படுத்தி எடுக்கிறார்கள்.

அன்புடன் புகாரி

பிரசாத் said...

மிகவும் நல்லா தான் கொண்டு போனீங்க... ஆனா யதார்த்தமா முடிச்சுட்டீங்க...
பாடல்களிலாவது காதலரை சேர்த்து வையுங்களேன்...

ஆயிஷா said...

ஹா.......ஹா....ஹா....
இது தான் சீனா சார் உண்மை. ரசிப்பதையும், பருவத்தின் சிலிர்ப்பையும் காதலென நம்பி விடக் கூடாது தான்.
அன்புடன் ஆயிஷா

சிவா said...

கலக்கிட்டீங்க போங்க