ஒரு மடியும் சில மல்லிகைப் பூக்களும்
*
அதிகாலை அரைத்தூக்கத்தோடு
உன் பொன்மடியில் படுத்தால்
பேரொளி அருவியாகிவிடுகிறேன் நான்

கைகளால் மெல்ல வளைத்து
மென்மையாய் அணைத்து
மெத்து மெத்தென்று முகம் புதைத்து
சௌகரிய இடம் நோக்கி
கன்னம் அசைத்து அசைத்து
சொகுசுக்குள் ஒரு
சொர்க்க சொகுசு தட்டுப்பட்டதும்
அப்படியே நிம்மதியாய்
நடு இரவில் பனி இறங்குவதைப்போல
சீராய் மூச்சுவிட்டுக்கொண்டு

இப்படியே உன் மடியில்
எனக்கு ஒரு யுகம் வேண்டும்
அது முடிந்ததும் இன்னொன்று
அதுவும் முடிந்ததும்
வளர் தொடராக இன்னும் இன்னும்

உன் நீள் விரல்கள் கருணையோடு
என் தலைமுடிக்குள் அலைகிறது
தோள்களில் மெல்ல பிரியத்துக்கு பிரியம் கூட்டி
அமைத்த தாளத்தில் இதமாய்த் தட்டுகிறாய்

உன் இதயக் கூண்டுக்குள்
கொஞ்சம் பட்டாம்பூச்சிகள்
கொஞ்சம் சிட்டுக்குருவிகள்
ஓரிரு வெட்டுக்கிளிகள் படபடவென்று சிறகடித்து
நிதானமாய் உயரே எழுகின்றன

நீயே எப்போதேனும் நுழையும் உன்
அந்தரங்கத் தோட்டத்தில்
புத்தம்புது ரோஜாக்கள் படக்கென
இதழ்விரித்துப் பூக்கின்றன

உதிரும் மூத்த மல்லிகை ஒன்று
அடர் வாசனை வீச
பரவிப் பரவி சுவாசத்தின்
பிரத்தியேக அறைகளை வாசனையாக்குகிறது

குறை உள்ளம் நிறைவடைகிறது

எனக்கும்....

உனக்கும்....

நான் பூரணமாகிறேன்
நீ அந்த பூரணத்துக்குள் பூரணமாய் இருக்கிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

vasu balaji said...

/மென்மையாய் அணைத்து
மெத்து மெத்தென்று முகம் புதைத்து
சொகரிய இடம் நோக்கி
கன்னம் அசைத்து அசைத்து
சொகுசுக்குள் ஒரு
சொர்க்க சொகுசு தட்டுப்பட்டதும்/

வார்த்தையிலயே தெரியுதுங்க புகாரி அந்த சுகம். அருமை.

/இப்படியே உன் மடியில்
எனக்கு ஒரு யுகம் வேண்டும்
அது முடிந்ததும் இன்னொன்று/

ஆஹா,ம்ம்ம்

/உன் இதயக் கூண்டுக்குள்
கொஞ்சம் பட்டாம்பூச்சிகள்
கொஞ்சம் சிட்டுக்குருவிகள்
ஓரிரு வெட்டுக்கிளிகள் படபடவென்று சிறகடித்து
நிதானமாய் உயரே எழுகின்றன/

வாவ். க்ரேட்.

/நான் பூரணமாகிறேன்
நீ அந்த பூரணத்துக்குள் பூரணமாய் இருக்கிறாய்/

Ultimate.உச்சம். இதுக்கு மேல எதுவுமில்லை. பாராட்டவும் கூட

Unknown said...

நன்றி வானம்பாடிகளே,

உங்கள் மின்னஞ்சல் முகவரி எனக்குக் கிடைக்கவில்லையே?

anbudanbuhari@gmail.com இதுதான் என் மின்முகவரி

vasu balaji said...

vasu.balaji@gmail.com. நன்றி புகாரி.

சீனா said...

அன்பின் புகாரி

படிக்கும் போதே சுகம் - அருமையான காதல் கவிதை - மனைவியின் சுகம் கணவனுக்கு - கற்பனை வளம் - அனுபவம் பேசுகிறது

வரிக்கு வரி ரசித்தேன் - வரிக்கு வரி கற்ப்னையில் கலந்தேன்

மனம்கைழ்ச்சி

நன்று நன்று நல்வாழ்த்துகள் நண்ப புகாரி