கனாக்கண்டேன் தோழி

அமுதநீர் சுரக்கும் இதயக் கிணற்றில்
ஊமைக் காயங்களாய் மூடிக் கிடக்கும்
அவளின் ஆசை ஊற்றுக்கண்கள்
அத்தனையையும்
அந்தரங்க விரல்கள் நீட்டி
மெல்ல மெல்ல உடைத்தான் அவன்

வெள்ளம் வெள்ளம்
எப்போதும் இல்லாத அளவில்
விழி மனம் உயிர் ஆன்மா
அனைத்தையும் நனைத்துத் துவைத்து
பொங்கிப் பெருகி
அவளுள் ஒரு வெள்ளத் திருவிழா

குருதிச் சித்திரங்கள் தீட்டி
துடித்து வெடித்து விளைந்த
அவனின் கந்தகக் காயங்களிலெல்லாம்
மெல்லிய மன இழைகளால்
பொழுதுகள் தப்பாமல்
நேச உயிர் ஒத்தடங்கள் கொடுத்தாள் அவள்

கண்ணீர் கண்ணீர்
இமைகளைக் கரைத்தழித்துக்கொண்டு
கருணை பெற்ற நெகிழ்ச்சியில்
கனிந்து குழைந்த அவனின் கண்களில்
காட்டாற்று கண்ணீர்ப் பெருவிழா

வாடி வதங்கி
உயிர்மட்டும் மீதம் வைத்து
வான் நோக்கிக்கிடந்த
காய்ந்த பழைய செடியில்
பூத்தது ஒரு சந்தனமுல்லை

காலப் பெருமரத்தில் முட்டி மோதி
அடிபட்டு குற்றுயிராய்க் கிடந்த
ஒரு வண்ணத்துப்பூச்சி
திடுதிப்பெனத் தேடிவந்த பொன் வசந்தத்தில்
மூச்சுப்பற்றி உயிர்த்தது

தன்னையே பதித்துப் பூத்த
சந்தன முல்லையின் இதயவனத்தில்
ஓர் ஈர முத்தமாய்ச் சென்றமர
கருகிக் கிடந்த சிறகுகளை
புத்துறவுக் காற்றில் புதுப்பித்துக்கொண்டு
சிறகடித்துச் சிறகடித்து சிலிர்த்தது
வாஞ்சைமிகு வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சியே
வண்ணத்துப்பூச்சியே
அங்கேயே நில்
என் வண்ணத்துப்பூச்சியே
அருகிலொருபோதும் வாராய்
என் உள்ளங்கவர்
வண்ணத்துப்பூச்சியே

என்னைப் பறித்தெடுத்து
அலங்கார ஆடையில் செருகி
விருந்துக்குச்செல்ல விரைந்து வருகிறான்
அதோ என் எஜமானன் என்று
முகம் மூடி விசித்தது சந்தனமுல்லை

இயற்கைத் தளிர்களையெல்லாம்
துண்டுதுண்டாய் நறுக்கிப்போட்டு
வாழ்க்கை அடுக்களையில் இவைபோல்
எத்தனை எத்தனையோ கூட்டுக்கறிகள்

நிரம்பி வழியும் ஏக்கங்களில்
பெருகி உயரும் துயரங்களில்
சுற்றிச் சுழலும் பெருமூச்சுப் புயல்களில்
பிரபஞ்சமே அழிந்துபோகும் என்று
பிரபஞ்சமே கதறுவதுபோல்
கனாக்கண்டேன் தோழி

1 comment:

பனித்துளி சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com