காயங்கள் நிலைக்கவில்லை
அனுபவம் நிலைத்தது
தழும்புகள் திடப்படவில்லை
அறிவு திடப்பட்டது
ஞாபகங்களில் எப்போதும்
எனக்குப் பூக்களின் வாசம்தான்
முட்களை மறப்பதே என் இதயத்தின் இயல்பு
எல்லோரையும் நம்புகிறேனா தெரியாது
ஆனால் உன்னை மட்டும்
அதிகமாகவே....
நீ சொன்னதெல்லாம்
உண்மையென்று நம்பியதால்தான்
சோகம் என்னிடம்
முட்டி முட்டிப் பார்த்துவிட்டுத்
தோற்றுப்போனது
ரத்த அடர்த்தியுடைய
கண்ணீரோடு கேட்டுக்கொண்டதால்தான்
என்னால் புன்னகையோடு புறப்பட முடிந்தது
வாழவிடும் சுகமென்பது
சால-உறு-தவ-நனி-கூர்-கழி
உயர் ஈகைச் சுகம்
பூ, பட்டாம்பூச்சி, பெண்
கையில் வைத்துக் கசக்குபவன்
மனித இனமில்லை
என் நினைவு உன்னிடம் அழியலாம்
அது இயற்கை
நிரந்தரமாய் அழிய
நிச்சயமாய் வாய்ப்பே இல்லை
இது என் நம்பிக்கை
அந்த முதல் முத்தத்தில்
உன் நீள்விழி உதிர்த்த
ஒரு துளி நீருக்கு ஈடாக எதையும் தரலாம்
மறுஜென்மம் கண்ட என் உயிர்
எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை
என்று அறிந்துகொண்டவன் நான்
திசைமாறிய சிறகசைப்பு முயற்சிகளெல்லாம்
என்னை முடமென்றே பரிகசிக்க
நானும் பறந்தவன்தான் என்ற
பழைய செருக்கோடு என் பயணம்
எதுவுமே இல்லாத எதையோ நோக்கி
என்று பிதற்றினாலும்
ஒன்று மட்டும் உண்மை
உன் முகம் மறப்பதாயில்லை
உன் குரல் அழிவதாயில்லை
உன் கொஞ்சல் கலைவதாயில்லை
என்ன தவம் செய்தனை
2 comments:
wow.. excellent buhari..!
/ஒன்று மட்டும் உண்மை
உன் முகம் மறப்பதாயில்லை
உன் குரல் அழிவதாயில்லை
உன் கொஞ்சல் கலைவதாயில்லை
என்ன தவம் செய்தனை/
அருமைங்க.
Post a Comment