சிதைந்து கிடந்த
என் எழுத்துக்களைப் பொறுக்கி
வார்த்தைகளாய்க் கோத்தவள் நீ
வார்த்தைகளின் கூட்டுக்குள்
உயிர்க் காற்று ஊதி
வாழும் கவிதையாய் ஆக்கியவள் நீ
அனாதைக் கவிதையை
ஆகாயத்தில் எறிந்துவிடாமல்
அள்ளி மடிகிடத்தி பரிவமுதூட்டி
காதலன்னையானவள் நீ
பாசப் பொழிவுகளால்
என் கடலை மூழ்கடித்தவள் நீ
அன்பு வெள்ளத்தால் என்னை
உனக்குள் அடித்துச் சென்றவள் நீ
உன் பால் முகத்தில்
வழிந்தோடிக்கிடக்கிறேன்
உன் கருணை விழிகளில்
ஒளிவீசிக்கிடக்கிறேன்
உன் அன்புப் புன்னகையில்
வசந்தமாய் மலர்கிறேன்
முன்னைவிடத் தீவிரமாய்
ஒவ்வொரு நொடியும்
உன்னையே நினைத்துருகுகிறேன்
கடந்துபோன
பிரிவுகளும் துயரங்களும்
ஏறிமிதித்த ஏக்கங்களும் ஏமாற்றங்களும்
காதலை வைரக்கண்ணீர் என்று
விழா எடுத்து அழைக்கின்றன
அந்தக் கண்ணீர்தான்
உணர்ந்த காதலை உலரவிடாமல் காக்கும்
ஈரக் கவசமாய் இருக்கிறதோ
என்று நான் கசிந்துகொண்டிருக்கிறேன்
6 comments:
முன்னைவிடத் தீவிரமாய்
ஒவ்வொரு நொடியும்
அவளையே நினைத்துருகுகிறேன்
கடந்துபோன
பிரிவுகளும் துயரங்களும்
ஏறிமிதித்த
ஏக்கங்களும் ஏமாற்றங்களும்
காதலை வைரக்கண்ணீர் என்று
விழா எடுத்து அழைக்கின்றன
அருமை வரிகள்..
சிதைந்து கிடந்த
என் எழுத்துக்களைப் பொறுக்கி
வார்த்தைகளாய்க் கோத்தவள்
வார்த்தைகளின் கூட்டுக்குள்
உயிர்க் காற்று ஊதி
வாழும் கவிதையாய் ஆக்கியவள்
அருமையான வரிகள்
கடந்துபோன
பிரிவுகளும் துயரங்களும்
ஏறிமிதித்த
ஏக்கங்களும் ஏமாற்றங்களும்
காதலை வைரக்கண்ணீர் என்று
விழா எடுத்து அழைக்கின்றன
ரொம்ப அழகான வரிகள்...
என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஆசான் ... நெஞ்சை உருக்கும் கவிதை
ஆசான்........
அழகான வரிகள்...இந்தப் பாறைக்குள்ளும் அன்பு கசிந்து விடுமோ என்ற
சிறு சந்தேகம் எனக்கு.
அந்தக் கண்ணீர்தான்
உணர்ந்த காதலை உலரவிடாமல் காக்கும்
ஈரக் கவசமாய் இருக்கிறதோ
என்று நான் கசிந்துகொண்டிருக்கிறேன்
ஆம் ஆசான் கண்ணீர் கசிவதெல்லாம் வேதனையை மறப்பதற்காகவல்ல.. உறவுச் செடியை உலராமல் காப்பதற்கே இல்லையா. 1996ம் ஆண்டு நான் எழுதிய வரிகள் சில.....அதிலும் இதே கருத்துப் பட நான் எழுதியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை என்னளவில் இதை நான் கவி என்பேன். உங்களைப் பொறுத்த வரை இது கவியாகாது என்பது எனக்குத் தெரியும். இதை கவியாக மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என தாங்கள் கூறினால் மகிழ்வேன். இதோ கவிதையென நான் நினைத்திருப்பது
என் நினைவு
உன்னில் எங்கே?
என் எதிகால வாழ்வை
பூஜ்யமாக்கிச் சென்ற
உத்தமன் - உன்
நினைவாய்
என்னிடம்
சுற்றிச் சுற்றி
வலம் வந்து கொண்டிருப்பது
உன் ஞாபகத்
துளிகள் மட்டுமே!.
ஓயாத
கடல் அலையாய்
உன் நினைவுகள்
என்னைத்
துன்புறுத்தும் போதும்
உணர்ச்சிப் பிழம்புகள்
வெளியேறி விடாமல்
கண்ணீர் துளிகளால்
அவற்றை
அணைத்திடப்
படுபாடுபடுகின்றேன்.
நம் காதல்
சாட்சியாய் - நான்
பொத்தி வைத்திருக்கும்
அந்தக்
கண்ணீர் துளி கூட - உன்
கொடுங்கோல்
நீதியின் கீழ்
வாய் மொழிய
அஞ்சி
ஊமையாகி விட்டது
என்னைப் போல
என் அன்பின் எதிரியே
புரிந்து கொள்
இந்தக் கண்ணீர்
கதறுவதெல்லாம் - என்
சோகங்களைப்
புதைப்பதற்காக அல்ல.... - உன்
உறவுச் செடியை
உலராமல்
காப்பதற்கே........!.
அன்புடன் ஆயிஷா
இந்த புகாரிக்கு மட்டும் எப்படிதான் கவிதை அருவி போல வருகின்றது என்று எனக்கு தெரியவில்லை.
அவரின் கவிதைகளை படிக்கும் போது பொறாமை தான் வருகிறது
கவிதைக்கு நன்றி
போநிஒ
Post a Comment