உரிக்கவும் புசிக்கவும்
சுவையானது சுலபமானது
அதே சுலபத்தோடு
வழுக்கிக்கொண்டும் ஓடிவிடும்
கவனிக்காமல் ஒருநாள் விட்டாலும்
அழுகிச் சிதையும்
அது வாழைப்பழக் காதல்

பலாப்பழக் காதல் அப்படியானதல்ல
கடினமான முள்தோல் கொண்டது
சிரமப்பட்டு தோலை அகற்றிவிட்டால்
சுவையும் சுகமும் நிரந்தரம்
வாழைப்பழம்போல் இல்லாவிட்டாலும்
கவனிக்காமல் சில தினங்கள்
விட்டுவிட்டால் அழுகியும்போகும்

பேரீச்சம்பழக் காதலோ
பழுக்க வைக்கப் பலகாலம் ஆகும்
அப்படிப் பழுக்கும்போதுகூட
ஒரே சமயத்தில் முழுவதும் பழுத்துவிடாது
அணு அணுவாகத்தான் பழுக்கும்
பழுக்கும்வரை அதைச்
சத்தியம் என்ற சூரியனின்
மடியில் இட்டுப் போற்றவேண்டும்
பழுத்துவிட்டாலோ
எத்தனை ஜென்மங்கள் ஆனாலும்
அழியாது அழுகாது மாறாது
எந்த கனவுக் காதலையும்
அது தோற்கடிக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

சாந்தி said...

வித்யாசமான ஒப்பீடு .. நன்று.


--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

பூங்குழலி said...

பழக்காதல் நல்லா இருக்கு

சக்தி said...

அன்பின் நண்பர் புகாரி,

காதலென்னும் உணர்வின் சுவையைக்
கனிகளுடன் ஒப்பிட்டு
கவிதையொன்று தந்தீர்
தஞ்சை தந்த நல்கவிஞன்
தரவேண்டும் மென்மேலும் கவிதைகள்

அன்புடன்
சக்தி

சீனா said...

காதலில் இத்தனை பழக் காதல்களா

அனைத்துப் பழங்களுமே சுவை மிக்கது தான் - உடனே உரித்து உண்ணும் வாழைப்பழம் சிறந்தது - பேரீச்சம்பழம் அடுத்தது - பலா கடைசியில் தான்