சுழலும் குளிர்க்கோள் கண்கள்
சூடுமிழும் முதுவெயில் இதழ்கள்
அழகிய கணித்திரை நெற்றி
அணிற்பழ மீதமாய்ச் செவி

நிறைகுளப் பரப்பாய்க் கன்னங்கள்
நிழல்மர விரிப்பாய்ப் பார்வைகள்
மடக்கி நிறுத்தி வைத்த
மழைக்குடையாய் மூக்கு

சரிந்து நிலம் விழுகின்ற
தங்கத் தாம்பூலமாய்த் தாடை
அலைவீசும் மணல் குழைவாய்
மேலுதட்டு மேடை
பனிவிழுந்த மாவிலையாய்
கீழுதட்டுத் தாழ்வாரத்தில்
துளித்துளியாய்த் தேன் ஈரம்

வகிடுக்குப் படியாத திமிரில்
கருங்கற்றைக் கூந்தலோரம்
கவிதை கிறுக்க அலையும்
விசிறி முடிச் சிதறல்கள்

புலம்பெயர்ந்த தமிழ்போல் வாசம்
புரியாத செம்மொழியில் நாணம்
புண்பட்டவனுக்கு எங்கே மருந்து
புறப்பட்டுவிடுமே இந்தப் பேருந்து

4 comments:

சக்தி - லண்டன் said...

அன்பின் புதுக்கவிதைப் புயலே !

உங்களுடைய கவிதை வரிகளின் வார்த்தைகளென்னை அப்படியே மயக்கி விடுகின்றன.


>> நிறைகுளப் பரப்பாய்க் கன்னங்கள்
நிழல்மர விரிப்பாய்ப் பார்வைகள்
மடக்கி நிறுத்தி வைத்த
மழைக்குடையாய் மூக்கு >>


பாராட்டுக்கள்

அன்புடன்
சக்தி

அன்புடன் மலிக்கா said...

கவிதை மெட்டுக்கட்டியதால்-நான்
இங்கு தாளயங்களை கொட்டிவிட்டேன்
கவிதை அருமை என்று

பிரசாத் said...

அழகான வர்னனை... பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு காதல்....

Unknown said...

//அழகான வர்னனை... பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு காதல்....//

என்ன பெரிய காதல் பிரசாத்? பேருந்து நிறுத்தத்தில் எல்லோரும் செய்யும் ஒரு காரியம்தான். பையன் ”சைட்” அடிக்கிறான் - காமத்துப்பாளில் திருவள்ளுவர் தன் முதல் குறளில் ’சைட்’ அடிப்பதைப்போல!