200308 முகிலின் துப்பட்டாவுக்குள்

முகிலின் துப்பட்டாவுக்குள்
முத்தமிட்டேன் முத்தமிட்டேன்
நனைந்தேன் நனைந்தேன் நான்
சூரியனாய் சூடானேன் ஆனேன் என்
உசுருக்குள் கருவானேன் ஆனேன் ஆனேன்

நேற்று வரை நானும் ஒரு
கூழாங்கல் கூழாங்கல்
இன்று முதல் யோகங்களின்
வைரக்கல் வைரக்கல்

என்னைவிட்டு போகாதே
போகாதே உயிரே
உயிரின் கரு கலைவது
கூடாதே கூடாதே

நெருப்புக்குள் விழுந்து நான்
நனைகிறேன் நனைகிறேன்
நீருக்குள் நின்று நான்
எரிகிறேன் எரிகிறேன்

வானத்தின் வரப்புகளில்
நடக்கின்றேன் நடக்கின்றேன்
பூமிப்பந்தின் உள்ளுக்குள்ளே
பறக்கிறேன் பறக்கிறேன்

கண்டு கொண்டேன் உன்னை நான்
நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்
கண்கள் போகும் பாதை எல்லாம்
நீயே கண்டேன் கண்டேன்

காற்றுக்குள்ளே என் சுவாசத்தை
காணவில்லை காணவில்லை
கண்மணியே உன் காதல் இன்றி
மூச்சே இல்லை இல்லவே இல்லை
மூடிக்கொண்டன
காயங்களைச் சுட்டெரித்த விழிகள்
எரிந்துபோனது இதயம்

திரும்பிக்கொண்டது
கண்ணீரை ஆனந்தமாக்கிய இதயம்
செத்துப்போனது உணர்வு

மடக்கிக்கொண்டன
கனவுகளை ஏற்றிவைத்த விரல்கள்
அணைந்துபோனது உயிர்

வாழ்வை
வண்ணமயமாக்கும்
விழிகளையோ இதயத்தையோ
ஒரே இடத்தில் தேடுவது தவறோ

வீசி எறிவதும் வேறு பெறுவதும்
வணிகம்போல்
வாழ்க்கைக்கும் நியதிதானோ

02 முகம் மூடி அகம் திறப்பவர்கள்

முகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன். எனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் பொதுவில் காட்டவே விரும்புகிறேன். அதுதானே நான்?

என்னை அன்புடையோனாகப் பார்ப்பவர்கள்
அன்புடன் நிர்வாகியாகப் பார்ப்பவர்கள்
கருணையுடையோனாகப் பார்ப்பவர்கள்
பலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்
காதல் கவிஞனாக மட்டுமே பார்ப்பவர்கள்
தமிழ்ப் பற்றாளனாகப் பார்ப்பவர்கள்
கிரந்தம் விரும்புவதால் தமிழ் விரோதியாகப் பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வியப்போடு பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வெறுப்போடு பார்ப்பவர்கள்
தனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்
மதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்

இப்படியே அடுக்கலாம்.....

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முகம் காட்டி நான் நிற்கலாம்தான். ஆனால் இவை அனைத்தின் கலவைதானே உண்மையான நான்?

என் நிஜமுகத்தோடு, அது எத்தனை அழகாயிருந்தாலும் சரி எத்தனை அசிங்கமாக இருந்தாலும் சரி, என்னைக் காட்டிக்கொள்வதுதானே சரி.

ஏன் பயப்படவேண்டும்? யாருக்குப் பயப்படவேண்டும்?

என் புத்திசாலித்தனங்களை மட்டுமல்லாமல் என் முட்டாள்தனங்களையும் கொண்டவன்தானே நான் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு நாணம் வரவில்லை.

கண்ணதாசன் வனவாசத்தில் இயன்றவரை தன் உண்மை முகம் எழுதினார். காந்தி அவருக்கு அந்த எண்ணத்தைத் தந்தார் என்றும் சொல்கிறார்.

போலியற்ற நிலையில்தான் மனிதர்கள் உயர்வானவர்கள் என்பது என் கருத்து.

கலாச்சாரம் பண்பாடு, கௌரவம், பெறுமை என்ற போர்வைக்குள் சுயம் கொன்று ஆடும் கூத்து எனக்கு அருவறுக்கத்தக்கதாய்ப் படுகிறது.

நான் நிச்சயமாக எவரையும் குறைகூறவில்லை. என் மனமும் ஒருநாள் முகமூடி நாடியது. முயன்றும் பார்த்தேன், பின் அதைக் கைவிட்டேன்.

நான் நானாக இருப்பதால் எவருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றே பொருள், இதில் இழப்பு என்ன இருக்கிறது?

நவீன தமிழ்ச்சொற்கள்

தமிழ்ச்சொற்களின் வளர்ச்சிக்கு கணினி என்ற சொல்லே ஒரு நல்ல உதாரணம். முதலில் அவசரத் தேவைக்கு உலகின் ஒரு புதிய சொல்லை அப்படியே பயன்படுத்தவேண்டும்.

கம்ப்யூட்டர்

இதனால் நவீன ஆக்கங்கள் தடைபடாது அல்லது ஆக்கப்படுவதற்காகக் காத்திருக்காது. அப்படி ஆக்கப்படுவது எல்லோருக்கும் புரியும். இதற்கு அடுத்த நிலை அந்த புதிய சொல்லின் மொழிபெயர்ப்பு

கணிப்பொறி

இப்போது மக்களிடம் ஓரளவு கம்ப்யூட்டர் என்றால் புரியும் நிலை வந்துவிட்டது. அதை கணிப்பொறி என்று சொல்லும்போது அது கம்ப்யூட்டர்தான் என்று அறிகிறார்கள். அடுத்து சட்டென்று உலகின் ஒரு மூலையிலிருந்து ஒரு சொல் பிறக்கிறது.

கணினி

இது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. கணிப்பொறி என்று சொல்வதைவிட கணினி என்பது இனிமையும் பொருள்தரக்கூடியதுமாக இருக்கிறது.

ஆனால் இதை கணனி என்று இலங்கையில் எழுதுகிறார்கள். உலகமே கணினி என்று எழுதும்போது இலங்கையர் கணனி என்று எழுதுவது நெருடலாய் இருக்கிறது. இந்த மனப்பான்மை தமிழர்களிடம் இருந்து மறைய வேண்டும். ஆனாலும் இலங்கை வழக்கு என்று ஒன்று இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அதை நான் மறந்துவிடுகிறேன்.

பிறமொழிச் சொற்களுக்கு பலரும் கிரந்தம் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இலங்கைத் தமிழர்கள் ரிம் ரேக் அவுட் அண்ட் கேற்றரிங் (Tim Take out and Catering) என்றும் ஸ்ரார் (Star) என்றும் எழுதுகிறார்கள். வாசிக்கும்போது கண்ணுடைந்து கைகளில் விழுகிறது. அவர்கள் கவலையே படுவதில்லை. விளக்கமும் தருவதில்லை.

கணினி என்ற சொல்லை கணி என்றும் பயன்படுத்தலாம். என் கவிதைகளில் நிறைய சொற்களை அப்படி உருவாக்கி இருக்கிறேன்.

கணித்தமிழ், கணிமொழி, கணியெலி, கணிப்பாவை, கணித்திரை என்று சென்றுகொண்டே இருக்கும்.

இந்த நிலைப்பாட்டின்படி தமிழ் 100 சதவிகிதம் நவீனகாலப் பயன்பாட்டிற்கு உகந்தது. ஆனால் இந்த கிரந்த எதிர்பாளர்கள்தான் தமிழை ஒரு கூண்டுக்குள் அடைத்து சிறகுகளை வெட்டியெறியப் பார்க்கிறார்கள். அவர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன் ஏனெனில் அவர்கள் தோல்வியாளர்கள். வளரும் தமிழை எவராலும் தோற்கடிக்க முடியுமா?
இனியும் ஒருமுறையென
விழிமணி இழுப்பதும்

பார்க்கும் பொழுதெலாம்
பூக்கள் பொழிவதும்

மூடிய இமைக்குள்ளும்
ஈரமாய் மிதப்பதும்

முற்றாய் மறந்த நாளொன்றில்
நிலவாய்ப் புலர்வதும்

புலரும் பொற்கணங்களில்
இதழ்முகை அவிழ்ப்பதும்

ஊசிகளாய் இறங்காமல்
உணர்வுகளுக்குள்
ஊற்றுகளாய் எழுவதும்

ஆசைத்திரி தூண்டாமல்
இதயக் கிண்ணியில்
தீபச்சுடர் ஏற்றுவதும்

அழகு அழகு
பேரழகு
என் மீது
அடிக்கடி கோபப்படு
அதில் உன் பிரியம் தெரிகிறது
அழுத்தமான நேசிப்பு தெரிகிறது
உனக்கென்று என்னிடமிருந்து
நீயே எடுத்துக்கொள்ளும்
உரிமை தெரிகிறது
நமக்கான உறவு அதில்
வேர் பரப்பிக் கொண்டிருக்கிறது

வலித்தாய்


வலி
உன்னை
வளர்த்தெடுக்கும் தாய்

உன்னை
உனக்கே உரித்துக்காட்டும்
அம்மணம்

தேடாத விழிகளில்
திசைகளெல்லாம்
ஊமைகளாய் மூடிக்கிடக்கும்

வலியே
தேடலின் வல்லமை

உன் உண்மை முகவரியை
எழுதும் முள்

இருட்டை உடைத்து
வெளிச்ச வழி குடையும்
சிற்றுளிகளின் பேரியக்கச் சக்தி

மனிதா
நீ எப்போதும்
எதையும் வென்றதே இல்லை

உன் தோல்விகள்தாம்
ஒன்றுகூடி
வலிகள் பெருக்கி
வெற்றியிடம் உன்னை
அடித்து இழுத்துக்
கொண்டுபோய்ச் சேர்க்கின்றன

ஒபாமாவுக்கு நோபல் பரிசு



ஒபாமாவுக்கு அல்ல
அமெரிக்காவுக்கு
நோபல் பரிசு

செய்த
சாதனைக்காக அல்ல
செய்யக் கூடாது என்ற
போதனைக்காக

பாராட்டுவதற்காக அல்ல
மனிதநேயம்
வலியுறுத்துவதற்காக

போதும் ரத்த ஆறு
அதன் ஊற்றுக் குழி அடைக்க
பலி தருகிறோம்
உலக உன்னத நோபல் பரிசையே
என்ற அகிம்சை வதை

மனித மாமிச
உண்ணா விரதம் காக்க
உலக கௌரத்தையே
உணவாய்ச் சமைத்த விருந்து

இந்த அழகான திரிஷ்டிப் பூசணியைக்
கழுத்தில் மாட்டிவிட்டால்
நரபலி கேட்கும் சாத்தான்
வாக்குறுதி மீறி வெறிகொண்டாலும்
அடக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு

இனியும் ஓர் ஆயுதம்
அமெரிக்கக் கைகளில் முளைத்தால்
அது குடிக்கப்போவது
முதலில்
நோபல் பரிசின்
குறை உயிரைத்தான்
பித்தான முத்தத்திற்கு
மெத்தையிட்டு வைத்ததுபோல்
மெத்து மெத்தென்ற கீழுதடு

கிழுதட்டின் முத்தத் தாகத்
தகிப்பின் கொதிப்பிற்கு
காற்று வீசும் சாமரமாய்
அடர்ந்த கருகரு
மீசையோடு மேலுதடு

நடுவில்
கவர்ச்சியான புதைகுழியில்
தேனூத்துப் பள்ளத்தாக்கில்
முத்தங்கள் ஏன்
தன் தித்திப்பு யுத்தத்தை
நாளும் பொழுதும்
நடத்திக்கொண்டே இருக்காது
முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்
வழமையாய்ப்
பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு
போதும்
பூக்களெல்லாம்
நிறமிழந்து
உதிர்ந்து போகும்
உனக்கு யார்தான்
தமிழ் சொல்லிக் கொடுத்தார்களோ
தெரியவில்லை
பக்கத்தில் உட்கார் என்றால்
உனக்குப் புரிவதே இல்லை
மடியில் வந்து உட்கார்ந்துகொண்டு
பக்கம் என்றால் மடிதானே
என்று சண்டைக்கு வருகிறாய்
கருங்கூந்தல் கற்றைகள்
செவ்வாழைத் தோள்விழுந்து
பொன்மின்னல் இழைகளாய்த் தெறிக்க

உன் தாஜ்மகால் தலை சாய்த்து
இடக்கண் இமைகளை
சந்தனக்காட்டு வண்ணத்துப் பூச்சிகளின்
சாயுங்காலச் சிறகசைப்பாய்
படக்கென ஒரு முறை முத்தமிடச் செய்தாய்

அப்போதே நான் உன் பைத்தியம் என்ற
கண்ணியமான பட்டமளிப்பு விழா
விழித் திரைகள் ஒளிர
இதயச் சங்குகள் முழங்க
நரம்பு நந்தவனம் அதிர
நடந்தேறிவிட்டது
கோடிப்பூக்கள்
கொட்டும் சுகந்தத்தில்
ஒன்றுமே இல்லை
என் விலையுயர்ந்த
வாசனைத் திரவியம்
உன் வியர்வை
வலிந்து ஊதுவது
அணைப்பதற்கா ஏற்றுவதற்கா
அணைப்பதாய் நினைத்துக்கொண்டு
இனியும் ஒருமுறை
உன் உதடுகளால்
என் நெருப்பை ஊதாதே
உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்

இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா
எத்தனை பெரியவனாய்
இருந்தும் என்ன
உன்
சர்க்கரைத் தோட்டத்தில்
சித்தெறும்புதானே
நான்
ஒரு துளி
கண்ணீர் கசிந்தாய்
நீ என்முன்
காலமெல்லாம் கண்ணீரானேன்
நான் உன்முன்

ஒரு துளி பருகி
ஏழுகடல் தருவது என் காதல்

உன் கண்ணீருக்குள்
கட்டிக்கொண்ட கூட்டுக்குள்
என் கண்ணீர்மட்டும்தான்
இன்று நீயாக
தலை துளைத்த
ஆத்திர அதிரடிப் புயலின்
அவசரச் சீற்றத்தில்

உயிரின் உட்கருவும்
அணு உலையில் அகப்பட்டு
கொதித்த கணங்களில்
கொட்டிய மலச் சொற்களை

மறதித்
துடைப்பத்தால் பெருக்கி
மன்னிப்புக்
குப்பையில் இட்டுவிட்டு
ஏற்றுவோம்
மீண்டும் வாழ்க்கைத் தீபம்

தீபம் மட்டுமே
ஞாபகத் திரியில் ஏற்றுவதற்கு
என்றென்றும் ஏற்ற ஒன்று
ஒருநாள்
உன்னை வர்ணிக்கும் தாகத்தில்
உனக்கொரு
உவமைதேடிப் புறப்பட்டேன்

என் புறப்பாடு
விரயமாகிவிடுமோ
என்று நான் அஞ்சியபோது
நீயே கிடைத்தாய்
நான் பூரித்துப்போனேன்

காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்
கால்கள் ஆகாயத்தில் மிதக்க
கைகள் கோத்துக்கொள்ள
கண்கள் படபடக்க
சுவாசத்தில் வாசனை கமழ
மனக்கயிறு கட்டி
உயிர்ப் பிணைப்போடு
இதய ஊஞ்சலாடிய பூமரம்
தன்னையே வெட்டி
சிலுவை செய்துகொள்கிறது
இது பொதுவழியல்ல என்ற
அறிவிப்புப் பலகைக்குப்
பின்னால்
ஒரு மடியும் சில மல்லிகைப் பூக்களும்
*
அதிகாலை அரைத்தூக்கத்தோடு
உன் பொன்மடியில் படுத்தால்
பேரொளி அருவியாகிவிடுகிறேன் நான்

கைகளால் மெல்ல வளைத்து
மென்மையாய் அணைத்து
மெத்து மெத்தென்று முகம் புதைத்து
சௌகரிய இடம் நோக்கி
கன்னம் அசைத்து அசைத்து
சொகுசுக்குள் ஒரு
சொர்க்க சொகுசு தட்டுப்பட்டதும்
அப்படியே நிம்மதியாய்
நடு இரவில் பனி இறங்குவதைப்போல
சீராய் மூச்சுவிட்டுக்கொண்டு

இப்படியே உன் மடியில்
எனக்கு ஒரு யுகம் வேண்டும்
அது முடிந்ததும் இன்னொன்று
அதுவும் முடிந்ததும்
வளர் தொடராக இன்னும் இன்னும்

உன் நீள் விரல்கள் கருணையோடு
என் தலைமுடிக்குள் அலைகிறது
தோள்களில் மெல்ல பிரியத்துக்கு பிரியம் கூட்டி
அமைத்த தாளத்தில் இதமாய்த் தட்டுகிறாய்

உன் இதயக் கூண்டுக்குள்
கொஞ்சம் பட்டாம்பூச்சிகள்
கொஞ்சம் சிட்டுக்குருவிகள்
ஓரிரு வெட்டுக்கிளிகள் படபடவென்று சிறகடித்து
நிதானமாய் உயரே எழுகின்றன

நீயே எப்போதேனும் நுழையும் உன்
அந்தரங்கத் தோட்டத்தில்
புத்தம்புது ரோஜாக்கள் படக்கென
இதழ்விரித்துப் பூக்கின்றன

உதிரும் மூத்த மல்லிகை ஒன்று
அடர் வாசனை வீச
பரவிப் பரவி சுவாசத்தின்
பிரத்தியேக அறைகளை வாசனையாக்குகிறது

குறை உள்ளம் நிறைவடைகிறது

எனக்கும்....

உனக்கும்....

நான் பூரணமாகிறேன்
நீ அந்த பூரணத்துக்குள் பூரணமாய் இருக்கிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
அந்த
மழைக்கால ஈரம்
காய்ந்துவிடவே இல்லை
எத்தனை கோடைகள் வந்தும்
எனக்குள் நீ பறித்துப்போன
குழிகளிலிருந்து
முகர்ந்தாலே
வாடிவடுமாம் அனிச்சமலர்
நம் இலக்கியம் சொல்கிறது
மிகச் சிறுபொழுதே எனினும்
உன்னை நினைத்தாலே வாடிவிடும்
நீ என்ன மலர்
உன்னை வர்ணிக்கும் வரம்கேட்டு
நித்தம்
அத்தனை நாழிகைகளிலுமே
நானோர் சுகதவத்தில்
அமிழ்ந்திருக்கிறேன்
என் நெருப்பு
உன் விழிகளில் எரிகிறது
என் நீர்
உன் ரத்தத்தில் பாய்கிறது
என் காற்று
உன் நுரையீரலில் நிறைகிறது
என் மண்
உன்னை தாங்குகிறது
என் ஆகாயம்
உன்னை விழுங்கிக்கொள்கிறது

நீ நானாய் ஆனாய்
நான் உன்னை
என் கண்ணீருக்குள் வைத்துக்கொள்கிறேன்

என் அழுகைகள்
உன்மீதான என் பிரியத்தை
உறுதிசெய்துகொண்டே இருக்கின்றன
என் ஏக்கங்கள்
உன்னுடனான நெருக்கத்தை
இறுக்கிக்கொண்டே இருக்கின்றன
என் காதல்
உன்னை விழுங்கிக்கொண்டு
என்னை நீயாக காட்டிக்கொண்டிருக்கிறது
நேரங்கழித்து வந்தாலும்
கோபிக்கிறாய்
நேரத்தோடு வந்தாலும்
கோபிக்கிறாய்

பரிசு வாங்கித் தந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்காமல் வந்தாலும்
கோபிக்கிறாய்

பாடச் சொன்னாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொல்லாவிட்டாலும்
கோபிக்கிறாய்

வரவா என்று கேட்டாலும்
கோபிக்கிறாய்
கேட்காவிட்டாலும்
கோபிக்கிறாய்

போகிறேன் என்றாலும்
கோபிக்கிறாய்
போகவில்லை என்றாலும்
கோபிக்கிறாய்

ஓ புரிந்துவிட்டது
நான் எப்போதும் உன்முன்
கெஞ்சிக் கெஞ்சியே
இழுத்து அணைத்து முத்தமிட்டு
செல்லம் செல்லம் என்று
கொஞ்சிக் கொஞ்சியே
இருக்க வேண்டும் அப்படித்தானே
அடடே சிரிப்பைப் பாரு
காதலென்பதோர் வினோத யுத்தம்
அது நிகழும்போது
விழிகள் விரிந்து
எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் சிதறும்
பொன்வானமாகிறது
ரத்தம் புத்துணர்வு அலைதெறிக்கும்
புதுவெள்ளம் ஆகிறது
உயிர் ஓர் யுகத்திற்கான
பெருஞ்சக்தியாய் உரமேற்றப்படுகிறது

யுத்தம் தடைபட்டாலோ
விழிகள் திரவமாகிவிடுகின்றன
ரத்தம் பித்தமாகிவிடுகிறது
உயிர் சொல்லிக்கொள்ளாமல்
மயான வெளி தேடிப்
பறந்தே போய்விடுகிறது
துடித்துருகும் ஏக்கப் பொதிகளை
உயிர்ப் பூக்களாய்க் கோத்து
அகிம்சை நெறியில்
ஒன்றன்பின் ஒன்றாகச் சாகக்கொடுக்கிறேன்
நான் உன் காதலுக்காக

நீயோ
என் நிம்மதிக் குஞ்சுகளை
உன் அலட்சியத் தூண்டில்களில் கொய்து
அவை துடிக்கத் துடிக்க
இதய நீருக்கு வெளியே எறிந்துவிட்டு
நித்திரை கொள்ளப் பார்க்கிறாய்
மூளை நரம்புகளுக்குள்
சிக்கிக் கிடக்கும் உன் ஞாபகங்கள்
வீரியம் கொள்ளும்போது
நீ வருவாய் அன்பே
என்னைத் தேடி நீ வருவாய்

உன் வருகையின்போது நான் உன்
காதலனாக இருக்கமாட்டேன்
ஏமாற்றம் காதலின் வேரறுத்துவிடும் என்பதால்

உன் நண்பனாக இருக்க மாட்டேன்
துரோகம் நட்புக்கு ஆகாது என்பதால்

உன் விரோதியாக இருக்க மாட்டேன்
மன்னிப்பு மனிதர்களின் பண்பு என்பதால்
பாரமாய் கனத்து நொடியில் எடையிழந்து
தரைபாவாமல் தவிக்கும் உடல்

சிறகடித்துச் சிறகடித்து தனக்குள்ளேயே
அடைபட்டுத் தவிக்கும் மனம்

படு வேகமாய்த் துடிக்கத் தொடங்கி
சட்டென்று நின்றுபோய்
தவியாய்த் தவிக்கும் உயிர்

இந்த உலகத்திலேயே
முதன்மையான தவிப்பு
காதலியைச் சந்திக்கப் போகிறோம்
என்ற தவிப்புதான்
நீ மட்டும்தான் வேண்டும் என்று
நான் நிற்பதுபோல்
நான் மட்டும்தான் வேண்டும் என்று
நீ நின்றால்

அன்று வா
அதுவரை சென்று வா

“மட்டும்தான்”
என்ற நம்பிக்கைதான் கடவுள்

”மட்டும்தான்”
என்ற உணர்வுதான் காதல்
இதழ்களில்லா
இதயம் பாடும் மௌனராகம்
அது எனக்கு மட்டும் கேட்கும்
என் உயிரிருக்கும் இடமறிந்து
நீ என்னைத் தொட்டால்
அது உனக்கும் கேட்கும்
உயிருக்குயிராய் நேசிக்கும்
ஜீவனை விழிகள் தேட
வாழ்க்கை கரைந்துவிடுகிறது
சிலருக்கு

உயிரையே வைத்திருக்கிறேனென்று
நிரூபிக்கத் தவிக்கும் தவிப்பில்
வாழ்க்கை தீர்ந்துவிடுகிறது
சிலருக்கு

எப்படியானாலும்
தூக்கிச் சுமக்க
ஓடிவருவது மட்டும்
உன்னை விலக்க முடியாத
இன்னொரு உறவுதான்
உயிரின்
வேர்களும் ஈரமாகும்
உண்மையான காதலைச்
சந்திக்கும்போதெல்லாம்
கண்ணீர்தான் முதலில் வந்து
முட்டி நிற்கிறது
வாழ்த்துச் சொல்ல
எந்தச் சூழலிலும்
சுகந்தம் தரும் விழிகளோடும்
எந்த இறுக்கத்திலும்
சுவாசம் தரும் உயிரோடும்
பின்மாலைப் பொழுதொன்றில்
என் வாழ்க்கையின்
உருவத்தைக் கண்டேன்

பிரமித்து உருகினேன்

கைப்பற்ற நினைத்து
மெல்ல எட்டித் தாவியபோது
விரல்களைச் சுட்டுவிட்டு
ஓடிச்சென்றுவிட்டது துரிதமாக

உயிர் விம்ம
பெரும்பொதித் துக்கம் பின்மூளை பிழிய
வழியற்று விட்டகன்று நகர்கிறேன்

இருள் விழுங்குவதற்குள்
பாதச் சுவடுகளின்
வாசம் வீசுகிறது என் பின்பாக
காதுக்குள் வாசனையாய்
நாசிக்குள் ரகசியமாய்
கண்ணுக்குள் ஒலியாய்
தேகத்தில் கனவாய்
எனக்கு நீ
உனக்கு நான்
போ போ

என் கண்களின் ரத்த வெள்ளம்
மறைக்க மறைக்க

மீறிக்கொண்டு கூர்ந்து நோக்கும்
என் விழியின் பரிதாபத்தை
பயத்தோடும் பதட்டத்தோடும்
நிராகரித்து

தூரமாய் துயரமாய்
சிறகுகளில் கண்ணீர் கசிய
படபடத்து பறந்து சிறு துகளாய்
காற்றில் மிதந்து கரைந்து காணாமல்

போ போ

நீ திரும்பி வரும்போது
இந்த கூட்டுக்குள் என் உயிரின்
ஒரு துளியேனும் மீதம் இருந்தால்
அது என் ஜனனம்
எங்கே தவிப்போ
அங்கேதான் வாழ்க்கை ஆரம்பமாகிறது

எங்கே நிம்மதியோ
அங்கேதான் வாழ்க்கையின் அர்த்தம்
விளங்கிப்போகிறது

நீ என் தவிப்பு
நீ என் நிம்மதி
நீ என் வாழ்க்கை

என் உயிரின் சமாதானம்
உன் விழிகளுக்குள்
புதைந்துகிடக்கின்றன

உன் மடிகளில் மகிழ்ந்த
ஒவ்வொரு நொடியும்
என் சாவிலும் என்னைப் பிரியாது
உனக்காகவே
படைக்கப்பட்டவளின்
உயிர் உரசும்போதுதான்
சுகத்தில் இதயம்
வலிக்க வலிக்க நீ பிறக்கிறாய்
அதுவரை வெறுமை எனும்
கர்ப்ப இருட்டில்
கருவாகத்தான் இருக்கிறாய்
தூரத்து நிலாக்கள்
தாஜ்மகாலின்
சலவைக்கல் மடிகளைப்போல
நிச்சலனக் குட்டையின்
மேலாடைபோல

பாதப்பூ மலர்ந்த கணத்தில்
இடறிய கற்களின் நிழலுருக்கள்கூட
ஆர்வக் கண்களின்
நிரந்தர அடைக்கலனில்

இன்றோ
நெஞ்சச் சுடுகாட்டில்
ரண ஓலங்கள்
தழும்புச் சமாதிகளின்
அவசரப் பிரசவங்கள்
உன் கனவுகளை
என் விழிகளுக்குள்
குறுந்தகவல்
அனுப்பிக்கொண்டிருந்த
அந்தக் காலமும் சரி
உன் கண்களின் உயிர்ப்பைத்
துண்டித்து வைத்திருக்கும்
இந்தக் காலமும் சரி
நான் உன்னை என்
வாழ்நாள் இணைப்பாகவே
அடைகாக்கிறேன்
ஒரு பொட்டு நெருப்பு
உயிருக்குத் தள்ளாடிக்கொண்டு
உள்ளே ஒளிந்திருந்தாலும் போதும்
ஊதி ஊதி நிற்க
குப்பென்று பற்றிக்கொள்ளும்

கொஞ்சம்
ஞாபகச் சருகுகளை
உணவாய்க் கொடுத்தால்
இன்னும் வீறிட்டு எழுந்து
வான்தொட எரியும்

கழிவு நீரில்
ஊறிக்கிடக்கும் கரித்துண்டிடம்
நுரையீரலையே
விற்றுக்கொண்டு நின்றாலும்
உயிர்தான் வீங்கி வெடிக்கும்
உன் பறவைகள்
சிறகடிக்கின்றன இடைவிடாமல்
எனக்காக

நீயோ
பின்நகர்ந்த வண்ணமாய்
இருக்கிறாய்

எப்படித்தான்
சூரியனை விழுங்கிக்கொண்டு
இருட்டைக் குடிக்க
முடிகிறதோ உன்னால்
காற்று பெண்
நெருப்பு ஆண்

துணையோடு எரியும்
துணைகேட்டு எரியும் நெருப்பு
தூண்டித் தூண்டிவிடும்
தூண்டப்பட்டு அலையும் காற்று

நிலம் பெண்
நீர் ஆண்

நிலத்தடி தேடியே நீர் பாயும்
நெருப்பிதழ் தீண்டி காற்றுத் தோள் பற்றி
ஆகாய மடிகளில் உறங்கிப்போனாலும்
நீர் ஆசையாய் ஓடிவரும்
நிலமே நிலமே என்று

நீர் வேண்டியே
நிலம் வெடித்துக் கிடக்கும்
நீரைக் கலந்தே உயிர்கள் ஈனும்

ஆகாயம் என்பதோ
ஆணும் பெண்ணும் இணைந்த
முழுமை

ஒன்றே ஒன்றென ஒன்றிக் கலந்ததில்
ஈடில்லா அமைதி
இடரில்லா நிம்மதி
உயிர் பூத்த
உச்சம்
நீ மையிடுவது
உன் விழிகளை அலங்கரிக்க
என்று நான் என்றுமே நினைத்ததில்லை
மையை அலங்கரிக்கவே
என்று மட்டும் நினைத்ததுண்டு

நான் கவிஞனானதால்
உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால்
நான் கவிஞனானேன்

இன்றெல்லாம்
நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லை
உன்னை நினைத்திருப்பதால்
நான் விழித்திருக்கிறேன்

நீ வரவில்லை

இதுதான்
அவளுக்காக நான் எழுதிய
இறுதி வரிகள் என்று
தயக்கத்தோடு நீட்டினேன்
இவளிடம்

"நிமிசங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வருடங்களாகியும்
நீ வரவில்லை
இருந்தும்
இந்த ஜென்மத்தையே
உனக்காகக் காத்திருக்க
எழுதிக்கொடுத்துவிட்டேன்
என்றாவது ஒருநாள்
ஒரே ஒரு முறையேனும் வா
அந்த ஒன்றே
இந்த ஜென்மத்தின்
முழு அர்த்தமாகிப் போகட்டும்"

நானும் எழுதி இருக்கிறேன்
இதே போன்ற வரிகளை
என்றவளின் கண்களில்
துருவேறிய மின்னலின் மிச்சம்
மிளிர்ந்தது ஒரு கணம்

மறுகணம் காகிதத்தைக்
காற்றில் கப்பலாக்கி
கடலலையை வென்று சிரித்தாள்

நெஞ்சு கோத்து நடந்தோம்
பொன்மணல் கம்பளத்தில்
நீ
அற்புதமாய் வாழ வேண்டுமென்று
ஒவ்வொரு கணமும்
தவமிருப்பேன் என்றாய்
நீயில்லாமல் நான் எப்படி
என்பதை
அறியாதவளல்ல
நீ

வழிகளற்ற வலிகள்
வெளியேற்றும் வார்த்தைகள்
தண்டிக்கப்பட்டபின்தான்
குற்றவாளிகளாய் வெளிவருகின்றன
கூண்டிலேற்ற அவசியமில்லை
சபிக்கப்பட்ட இதயமிது
என்று அறிந்ததும்
நீ வரம் தந்திருக்க வேண்டாம்
இன்னுமொரு சாபம் தராமல்
சென்றிருக்கலாம்
என்னை ஏன் இப்படித்
தேம்பித் தேம்பி அழவைக்கிறாய்
காயங்களை ஆற்றும் இந்த மயிலிறகு
உன் அன்பில்லையென்றால்
செத்துப்போகும்

உறவென்றும் பகையென்றும்
ஒருவருக்கும் ஒருவரும்
நிரந்தரமல்ல

மயிலிறகின் செவிகளில்
ஆகாய அளவு அன்புகொண்ட
உன் உதடுகள் விரித்து
மெல்லமெல்ல உள்ளம் பேசு
கடுங்குளிர் கரைய
வசந்தத்துக்குள் மலர்ந்துவிடுவாய்

வருட வரும் உயிரிழைகளை
நிராகரித்தல் தற்கொலை
உன் மூட்டைகளை
இறக்கிவை என் தோள்மீது

உன் மனஅமைதியே என் பெயரானால்
என் உயிர்த்துடிப்பின் பொருள்
எனக்கும் விளங்கும்

உன்னைச் சந்தித்தால்
நான் அழவே செய்வேன் என்பது
உனக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும்

கட்டுக்கடங்காத கண்ணீரை
உன் கட்டளைக்குள் கட்டிவைத்து
நெஞ்சழியும் நயாகராவே
உனக்கே ஏனடி நீ வஞ்சகியாகிறாய்
கண்கள் திறந்துதான் இருக்கின்றன
பார்வை மட்டும் உனக்கு
எப்போதும் ஒரே திசையில்

தனிமை இருட்டில்
உனக்கே உனக்குச் சொந்தமான
மெல்லிதயக் கொடி தவித்துக்கிடக்கிறது

மின்சாரக் கம்பம்
பாம்பின் வால்
புலியின் கால்
என்று எது அகப்பட்டாலும்
அவசரமாய்த் தொற்றித் தப்ப

அப்போதும்
ஒரே திசையில்தான் உன் பார்வை
ஒட்டிக்கிடக்கப் போவதால்
நட்டமென்று ஏதுமில்லைதான்
உனக்கு
உங்கள் மீது ஆணையாக
இனி ஒருநாளும் மாறவே மாட்டேன்
என்று குரல் பிளந்து கண்கள் கொட்டியபோதே
உன் மனம் மாறும் என்று
தெரியும் எனக்கு

நீ உண்மையானவள்
உறுதியானவளும் கூட
காலமும் கோலமும்
விசப்பற்களை
வாயுறையிலிருந்து உருவிக்கொண்டு
உன்னை உண்ணும்போது
நீ என்னதான் செய்வாய்

இருந்தும்
நான் மகிழ்வோடிருக்கிறேன்

இன்றுபோலவே இன்னொரு சத்தியத்தை
உன்னிடமிருந்து பெறும் நாளில்
சுவாசம் நசுங்கும் அணைப்பிலும்
நாளங்கள் பற்றும் முத்தத்திலும்
உயிர் வெடிக்கும் கலப்பிலும்
பிறப்போமே மீண்டும்
அதற்காக நீ பலகோடி முறை
மனம் மாறலாம்

நொடிகளில் நூறு ஜென்ம
வாழ்வென்பதைக் காட்டிலும்
வேறென்ன வேண்டிக்கிடக்கிறது
திரும்பவே மாட்டாய் என்று
உயிரின் வேர்களிலும் உணர்ந்ததும்
ஆழிப்புயல் மைய ஆழத்தில் சுழன்றன கண்கள்

காதலின் சுகமே கண்ணீர்தான் என்று
வகுப்பெடுத்தது காதல்

இந்தக் கண்ணீருக்குள்தான்
எத்தனை யுகங்களின் அடர்மிகு உணர்வுகள்
வெப்பமாய்க் கொட்டுகிறது
உயிரைக் கரையில்லா நதிகளாக்கி

பிரபஞ்சத்தின் ஒற்றை அதிசயமான
காதல் தராமல் எப்படித்தான் கிடைக்கும்
இந்த அற்புதக் கண்ணீர்
உன்
பிரியத்தைப் பிரிவிலும்
நெருக்கத்தைப் பொறாமையிலும்
காதலைக் கண்ணீரிலும்
மோகத்தை முத்தத்திலும்
கண்டுபிடித்தேன்

என்
ஆசைத் துடுப்புகளோடு
உன் இதயம் கண்டுபிடிக்க
நான் பயணப்பட்டபோதுதான்
என் நெஞ்சக் கப்பல்
உன் மகா சமுத்திரப்
புயலில் சிக்கித் தவிக்கிறது
பூவைப் பறித்துவிட்டால்
மீண்டும் காம்பில் இட முடியாதுதான்
ஆனால் நெருப்பைப் பறித்துவிட்டால்
மீண்டும் தீபத்தில் இட்டுவிடலாமே

சிசுவைப் பிரித்துவிட்டால்
மீண்டும் கர்ப்பத்தில் சேராதுதான்
ஆனால் நீரைப் பிரித்துவிட்டால்
மீண்டும் சேர்ந்துவிடுமே

முடியைப் பிடுங்கி நட்டால்
அது வளர வழியில்லைதான்
ஆனால் நாற்றைப் பிடுங்கி நட்டால்
இன்னும் செழித்து வளருமே

வெள்ளி விழுந்துவிட்டால்
மீண்டும் வானம் ஏறாதுதான்
ஆனால் சூரியன் விழுந்துவிட்டால்
மீண்டும் விடியலில் வானேறுமே

விதையைக் கிள்ளிவிட்டால்
அது மரமாய் வளராதுதான்
ஆனால் காதலைக் கிள்ளிவிட்டால்
அது மீண்டும் துளிர்த்துவிடுமே
உன்
தாமரை
இலைகளில்
என்
கண்ணீரும்
ஒட்டுவதே
இல்லை
பொருத்திப் பார்க்க
பொருத்திப் பார்க்க
பொறுத்துப் பொறுத்து
பொருத்திப் பார்க்க
பொருந்தாதது
பொருந்தாததாக
மீண்டும்
கூண்டுக்குள் அடைத்து
பருக்கைகள் இட்டு
வீட்டு முற்றத்தில்
தொங்கவிட்டு அழகு பார்க்கும்
காதல் சிட்டுகளைக்
காதல் சிட்டுகள் என்று
எப்படிச் சொல்வது
திறந்துவிட்டால்தானே
காதல் தெரியும்
மேகத்திற்கும் சூரியனுக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால் மெலிதாய்க் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்

அண்ட வெளிகளில்
பிளக்கப்படா அணுவடர்வாய்
மௌனத்தால் மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்

பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை வசதியாய் வளைக்கும்
அபிலாசைச் சொல்லல்லவா அது

புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுளம்

அவகாசம் கேட்கும் மனுக்களாய்த்தான்
சட்டுச்சட்டென மொட்டுகளாகும்
பெண்ணின் பூக்கள்

சரியான சாவி தேடி அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அன்பளித்துக் காத்திருப்பதே
நல்ல ஆண்மை
இமைகள் எரிந்து
காய்ந்து பிளவுபட்டுக்கிடந்த
என் தாக விழிகளில்
ஒரே ஒரு கண்ணீர்த்துளி
விழுந்தது

கருணை நிறைந்த
இதயக் கூட்டிலிருந்து விழுந்தது
அன்பு நிறைந்த
கண் மடியிலிருந்து விழுந்தது
அமுது நிறைந்த
உயிர்க் காம்பிலிருந்து விழுந்தது

அவ்வளவுதான்
என் கசடுகள் அனைத்தையும்
கழுவித் துடைத்து
புத்துயிராய் பெற்றெடுத்தது

அம்மம்மா
இனி நெகிழ்ந்து பரிதவிக்கும்
இந்த உயிர்
அந்த உன் விழிகளுக்கே அர்ப்பணம்
நீ
பிறந்தபோது நானறியேன்
என் உயிரைத் தத்தெடுத்துக்கொள்ளவே
நீ பிறந்திருக்கிறாயென்று

நீ
வளர்ந்தபோது நானறியேன்
என்னைப்போலவே ஏக்க விழிகளோடு
நீயும் வளர்கிறாயென்று

நீ
கண்ணீராய் உன் கன்னங்களிலும்
என் உயிரிலும்
உருண்டபோதுதான் தெளிந்தேன்
நீயில்லாமல் இனி நானில்லையென்று

என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்
உங்களை
உயிருக்குயிராய்
காதலிக்கிறேன்
என்னை
மறந்துவிடுங்கள்
வடுக்களையும் காயங்களையும்
தொட்டுத் தடவிய உன் மயிலிறகுகளில்
என் கண்ணாழியின் விசுவாச உப்பு
கால நெடிதும் ஒட்டிக்கிடக்கிறது
உன் தடுமாற்றப் பரிதாப நகங்களே
செங்குருதிப் பிளவுகளை
கீறிச் செல்லும் மூர்க்கத்தோடு
நிலை பெற்றிருக்கும் போதும்
நகப்பூ
பூத்த விரல்பூ

விரல்பூ
பூத்த கைப்பூ

பூவில் பூத்த
பூவில் பூத்த பூ
என் தலை கோதும்
சீப்பூ
பார்வைகளால் கீறிக்கீறி
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்
புன்னகையால் சிறைபிடித்து
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்

இப்படியாய்
கடிதங்களால்
கால்விரல் கோலங்களால்
கவிதைகளால்
கவர்ச்சி அபிநயங்களால்
காதலைச் சொல்வார்கள்
உலகெங்கிலும் பெண்கள்

நெகிழ்ந்து நெகிழ்ந்து
ஏங்கங்களைச் சுமந்து சுமந்து
உயிரின் செல்களைக் கரைத்து கரைத்து
கன்னங்களில் உருண்டு பேசும்
விழிமணிகளால்
விழிமணிகளின் உப்புப் பூக்களால்
அன்பை நேசத்தை பரிவை பாசத்தை
கருணையை காதலைச்
சொன்ன நூதனமே

உனக்கு நான் யாரென்று
அறிவதில் அக்கறையில்லை எனக்கு
ஆனால் எனக்கு நீதான்
நீ மட்டும்தான் எல்லாமானவள்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துகொண்டே இருக்கிறது

உன்மீதான நம்பிக்கை
வற்றிக்கொண்டே
விழி இருட்டுகிறது

ஏமாற்றினாலும்
என்னுடையவன் என்று
என் காதல் வலுப்பெறுகிறது

இருந்தும்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துகொண்டேதான் இருக்கிறது
கடைந்தெடுத்த சொற்களால்
உனக்கொரு கவிதை எழுத வேண்டும்

எந்த சொற்களுக்கு அந்த
அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறதோ
ஒவ்வொன்றும் வெகு வனப்பாய்
வசீகரப்படுத்திக்கொண்டு
வரிசையில் நின்று தவிக்கின்றன

தேர்வாகாமல் தேம்பியழப்போகும்
எச்சொல் பற்றியும்
யாதொரு கவலையுமில்லை எனக்கு

வென்றுவரும் சொற்களை
எப்படி இணை வைப்பது
என் பேரழகிக்கு என்ற கவலையில்தான்
தலையோடு தகராறாய் தடுமாறிக்கிடக்கிறேன்
என்னைக் கைக்குழந்தையாக்கி
உன் உயிரில் இட்டுத் தாலாட்டிய
குட்டித் தாயே

அதிகாலை
உன் முகம் பார்த்து கண் விழித்தேன்

பொழுதெல்லாம்
உன் புன்னனையால் பூ பூத்தேன்

முன்னிரவில்
பாலோடு பாலாடையாய் வரும்
உன் அக்கறையால் உறங்கினேன்

இரவெல்லாம் கனவில் வரும்
உன் கருணைமுக ஊர்வலங்களால்
நிம்மதிகொண்டேன்

வாழ்வுப் பாலையில்
நான் தனித்திருந்தேன் நீயோ
வசந்த சோலைகளை
என் காலடிக்கே கொண்டுவந்து குவித்தாய்

நீயில்லாமல் இன்றெல்லாம்
நெருப்பாய்த் தவிக்கிறேன்

நாளெல்லாம் கைகோத்து
என் வாழ்க்கை பயணம் அர்த்தமானது
என்று காட்டினாயே

அன்பே நீ எங்கே
நீ இல்லாமல் இனி நான் எங்கே
நீ பேசப்பேச
பிரபஞ்சம் என்னிடம்
பிச்சை கேட்டு நிற்கிறது

உன் உணர்வுகளின் பொழிவுகளால்
தொப்பல் தொப்பலாய் நனைந்துவிட்டேன்

இப்படி மப்பும் மந்தாரமுமாய்
நிற்பதும் பொழிவதுமாய் இருந்தால்
எப்போதடீ நான்
தலை துவட்டிக்கொள்வது
என் அடர்த்தியான அன்பு மழையில்
இதயம் மூழ்க நனைந்திருக்கிறாய்
என் நீண்ட நெடும் பாச நதியில்
உணர்வு விரித்து நீந்தியிருக்கிறாய்
என் பேராழக் காதல் கடலுக்குள்
உயிர் சிலிர்க்க முக்குளித்திருக்கிறாய்
உனக்காகக் கரைந்துருகும்
என் கண்ணீர் அருவியில்
நெகிழ்ந்து நெகிழ்ந்து பிறந்திருக்கிறாய்

எங்கே செல்வாய்
என்னைத் தேடி அழப்போகிறாய்
உன்னைத் துறத்தும் இதய நினைவுகளை
அவசரமாய் மிதித்து மிதித்து
எத்தனை தொலைவுதான் நடக்கவியலும்
களைத்துப்போவாய்
என்னைக் காணத் துடித்துப்போவாய்

நான் காத்திருக்கிறேன் பெண்ணே
ஏன் சென்றாய் என்ற கேள்வி இருக்காது
பொன்முகம் நிமிர்த்தி என்னானது என்றுகேட்டு
என் விழிகளில் வினாக்குறி விரியாது

வருவாய்
வந்ததும் மடிகிடத்துவேன்
வானம் கொள்ளாப் பேரானந்தத்தை
கண்ணெனும் கிண்ணிகளில் நிரப்பி
என் உயிர் பிரியும் நாள்வரை ஊட்டிவிடுவேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
அழுதே அறியாத நீ
என் முன் உயிர் கரைய அழுதாய்

அந்த அழுகை
உன்னை உனக்கே அறிமுகம் செய்தது

அந்த அழுகை
உனக்கு நான் யாரென்றும் அறியத் தந்தது

அந்த அழுகை
உனக்குப் புதுப் பிறந்தநாள்

தன்னை இழந்து
முழுதாய் உடைந்து அழுதாய்
இன்னொரு ஜென்மத்துக்குள்
நுழைந்தாய்

நீ எனக்குள் விழுந்தாய்
நம் இதயக் குடுவைகள்
அமுது நிறைக்கப்பெற்றன

நான் உனக்குள் விழுந்தேன்
நம் உள்வெளிகள்
நெகிழ்வுக் கண்ணீரால்
சுத்தம் செய்யப்பட்டன
கூந்தலில் அணியாதே
நான் மலரல்ல
விரல்களில் அணியாதே
நான் மோதிரமல்ல
கழுத்தினில் அணியாதே
நான் ஆரமல்ல
நெஞ்சினில் அணிந்ததோடு
நின்றுவிடாதே
உன் நெருப்பினிலும் அணிந்துகொள்
நான் உயிராவேன்
மனக் கூடையிலிருந்து
ஒவ்வொரு செங்கல்லாக
இறக்கி வைத்துக் கொண்டே
இருக்கிறேன்
பாரம் இரட்டிப்பாய்க்
கூடிக்கொண்டே இருக்கிறது
இணையம் முழுவதும்
தவழும் நிலவுகளாய்
உனக்கான என் கவிதைகள்
கன்னங்களில்
சிவப்புக் கம்பளம் விரித்தாள்
கண்களில் என் கண்களுக்கான
நாற்காலி இட்டாள்
எனைக் கண்டு உயர்ந்த மூச்சில்
உயிரின் வாசனை வீசினாள்
காதலிக்கிறாயா என்றேன்
இல்லை என்கிறாள்
கவிதைக்குப் பொய்யழகு
அவள் ஒரு கவிதை
முகிலின் துப்பட்டாவுக்குள்
முத்தமிட்டேன் நனைந்தேன்
நான் சூரியனாய்ச் சூடானேன்
என் உயிருக்குள் கருவானேன்

நேற்று வரை நானும் ஒரு கூழாங்கல்
இன்று முதல் யோகங்களின் வைரக்கல்
என்னைவிட்டுப் போகாதே
உயிரின் கரு கலைவது கூடாதே

நெருப்புக்குள் விழுந்து நான் நனைகிறேன்
நீருக்குள் நின்று நான் எரிகிறேன்
வானத்தின் வரப்புகளில் நடக்கிறேன்
பூமிப்பந்தின் உள்ளுக்குள் பறக்கிறேன்

கண்டு கொண்டேன்
உன்னை நான் நேசிக்கின்றேன்
கண்கள் போகும் பாதை எல்லாம்
நீயே கண்டேன்

காற்றுக்குள்
என் சுவாசத்தைக் காணவில்லை
கண்மணியே உன் காதல் இன்றி
மூச்சே இல்லை
உன்னைப் பருக வரும்
நதி நான்
என்னில் நீந்த வரும்
கடல் நீ

உன்னைத் திறக்க வரும்
பூட்டு நான்
என்னைத் திறந்து நிற்கும்
அறை நீ
நான்
உன்னைத் தரிசிக்கும்
பொழுதுகளில் மட்டுமே
என் உடலின் இரத்த ஓட்டத்தை
உணர்கின்றேன்

நான்
வருசங்களை
நிமிசங்களாய்க் கணக்கிட்டபோது
நீ என்னருகில் அமர்ந்திருந்தாய்

அன்றொருநாள்
சூரிய விழியை பூமி இமை
மூடிக் கொண்டிருந்தபோது
நம் கண்கள் விழித்திருந்தன
நேருக்கு நேராய்
நினைவுகள் மட்டும் உறங்கிவிட்டன

நாம் விழித்தபோது
என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய
எல்லாம் மறந்தோம்
உன் வாய்க்குள் விழுந்து
அரைபட்டுச் சிவக்கும்
வெற்றிலையாய் கிடக்க
ஏங்குகிறது ஏக்கம்

உன் கழுத்துக்குள் புதைந்து
காணாமல் போக
அலைகிறது ஆசை

சின்னவனாய் பிறந்து
கூந்தல் அலையும்
உன் நெற்றி முற்றத்தில்
மல்லாந்து
மணிக்கணக்காய்க் கிடக்க
தவிக்கிறது தாகம்

காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்
உன் விழிகண்ட பின்தான்
தெரிந்துகொண்டேன்
அதுவரை நான்
குருடனாய் இருந்தேன் என்று

உன் முத்தம்பெற்ற பின்தான்
உணர்ந்துகொண்டேன்
உன் இதழ்களில்
தாய்ப்பால் சுரக்குமென்று

உன்னைக் கூடிக்கலந்த பின்தான்
அறிந்துகொண்டேன்
நான் ஒவ்வொருமுறையும்
பிறக்கிறேனென்று
கண்ணே
பார்
அழு

இதயமே
நினை
துடி

உயிரே
பிற
சா

காதல்...
திருக்குறளும் காதலும்
ஒன்றெனவே அமைத்திருப்பது
ஓர் உபரி ஆச்சரியம்

குறளின் முதலடி உயரம்
அடுத்த அடி குள்ளம்
காதலில் கமழும் ஓர் ஆணையும்
பெண்ணையும் போல

ஆணடியில்தான்
குறள் துவங்குகிறதென்றாலும்
பொருளும் முடிவும்
பெண்ணடியில்தானே
அர்த்தமாகி நிறைகிறது
வாழும் நம் வாழ்வைப்போல

ஆணும் பெண்ணும்
சமமென்றே அறிவிக்கும்
குறளும் காதலும் வாழ்க

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பாலைச் செவிக் குகைக்குள்
பசுஞ்சொர்க்கம் வளர்

தாகக் கண்ணிமைக்குள்
தங்க நிறம் தெளி

தூரும் தோல் துளையுள்
இளந்தளிர் நடு

உறையும் குருதி நதியைக்
குப்புறக் கவிழ்

உடைந்த நகநுனியிலும்
துடிப்பிதயம் நிறுத்து

உதிரும் செத்த முடியிலும்
உர உயிர் ஊட்டு

பேசு... பேசு...
பேசுடா செல்லம்
உன்னைப்
புரிந்துகொள்ள முடியாமல்
தவித்த பொழுதுகளை
புரிந்துகொண்ட பொழுதுகள்
விழுங்கிக்கொள்ள

தூரமாய் வெளியேற்றப்பட்டேன்
ஞான நெருப்பால்

ஆழமாய் உள்ளிழுக்கப்பட்டேன்
இதயக் காற்றால்

இன்று என்னையே
புரிந்துகொள்ள முடியாமல்
என் நாட்கள்
உன் மனதின் மௌனத்தைப்
பதிவு செய்துகொண்டே
முன்னேறுகிறேன் நான்

பின்னொருநாள்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான் அப்படி
நினைக்கவே இல்லையே என்று

உன் மனம் என்னிடம் மொழிந்ததைத்
தெளிவாகக் கேட்டேனே என்று வாதிடுவது
எனக்கே மடத்தனமாய்த் தோன்றுகிறது

எனக்கும் அந்தச் சாதுர்யத்தைக்
கற்றுத்தந்துவிடாதே கிளியே
மனதோடு மனதாக மட்டுமே
இழைய விழைகிறேன் நான் உன்னுடன்

உன் செடிகளின் நிஜமான பூக்களில்
தொட்டுத் துடித்துச் சிறகசைப்பதே
என் வண்ணத்துப் பூச்சிகள்

அதற்கு உன் மௌனமே போதும்
பேசுகிறேனென்று பொய்கள் வேண்டாம்
அன்பே
உன் விழிகளுக்கு மாத்திரமே சாத்தியம்
இப்படிச் சிந்தாமல் சிதறாமல்
சன்னமாய்ச் சொல்லும் மௌனமொழிக் கலை

உனக்குத் தெரியுமா
இப்பொழுதெல்லாம் என் உள்ள வெளியெங்கும்
ஒரே குதூகலக் கோலம்தான்

உன் விழிகளைப் புணர்ந்த
என் உயிரின் புளகாங்கிதம் ஒரு சாதாரணமா

நொடி தோறும் உன் பெயர் பொறித்த
நினைவுத் தேர்கள் எனக்குள்
அழுந்தி அழுந்தி அசைய

துடிதுடிக்கும் என் உயிர் பறக்கப் பரபரப்பது
மீண்டும் மீண்டும்
உன் விழிவனத்துக்குள் மட்டும்தான்

ஏழுலக சத்தியங்களும்
ஒரே குரலில் ஒப்புக்கொள்ளூம்
சத்தியம்தான் இது நம்பு

நம்பாமல்
என்னைச் சோதிக்கும் பிரியமாயும்
உன் விழிகளை மூடாதே

மூடினால் அந்த அரை நொடியில்
என்னைப் பிரிவது
உன் பார்வை மட்டுமல்ல அன்பே
என் ஆவியும்தான்
சங்கிலித் தொடராய் வரும்
உன் நினைவுகளில் வசப்பட்டு
நான் முதன் முதலில் வடிக்கின்ற கவிதை
இது உன் காதோடு சொல்லவேண்டிய கதை

உள்ளம் தொட்ட நீ
என் உயிர் தொடப் போகும்
வசந்தநாளுக்காக நான்
சத்தியமாய்த் தவமிருக்கிறேன்

ஆகாயத்தில் பறக்க
சிறகுகள் வேண்டுமாம்
உன் பவளப் புன்னகை போதுமென்கிறேன்
நான்

உன் நீளக் கண்களில் ஏதோ
பளிச் சென்று ஒரு வெளிச்சம்
அந்த வெளிச்சமே
என் கனவுகள் குவிந்து கிடக்கும்
வனாந்திரத்துக்கு வழிகாட்டும்
ஒற்றைச் சுடர்
வெறுமனே கரையும்
மனமேடு

விரக்தியாய் வழியும்
உயிர்க் கூடு

வெள்ளையடிக்க வெள்ளையடிக்க
விலகாமல் என் சுவர்களில்
உன் ஓவியம்
பொன் துகள்கள் உதிர்ந்துபோகுமே
என்ற கவலையில்தான்
கழுத்தில் இறுகும் முடிச்சை
அவிழ்க்காமல் இருந்துவிடுகின்றன
இதயங்கள்

தேவைகளோடு பிறந்த உயிர்கள்
நெருப்பிலேயே கிடப்பது
நியாயமில்லை
அமைதியின்றி அலைவது
பிசாசு வாழ்க்கை
சாந்தமடையும் புள்ளிகளின்றி
இதயக் கோலங்கள்
கலைந்துதான் கிடக்கும்

உன்னைக் கண்டதுமே
திறந்துவிடப்பட்ட காவிரியாகின்றன
கண்கள்
காற்றில் படபடக்கும் தீபங்களைப் போல்
படபடக்கின்றன உணர்வுகள்

என் கோலத்தை
உன் புள்ளிகளில்
கட்டிவைத்துக்கொள்ள
சம்மதமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
என் ஆனந்தமே
என் அழுகையே
என் உயிரே
என் மரணமே
என்றெல்லாம்
சொல்லடுக்கிக்கொண்டே
போகாமல்
ஒற்றைச் சொல்லில்
சொல்வதானால்
’காதலியே’
ஒரே அலைவரிசையில்
இரண்டு பாடல்கள் நீயும் நானும்
ஒரே பாடலில்
இரண்டு குரல்கள் நீயும் நானும்

ஒரே குரலில்
இரண்டு சொற்கள் நீயும் நானும்
ஒரே சொல்லில்
இரண்டு எழுத்துக்கள் நீயும் நானும்

ஒரே எழுத்தில்
இரண்டு கோடுகள் நீயும் நானும்
ஒரே கோட்டில்
இரண்டு புள்ளிகள் நீயும் நானும்

ஒரே புள்ளியில்
இரண்டாய் உருவாகி
ஒன்றாகிப்போன
தன்னந்தனி உலகம் நீயும் நானும்
உன்னையே உயிரென்று
ஏற்றிவைத்தபின்
உன்னை எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்
இனிப்பாய்த்தான் இருக்கிறது
வகுந்தெடுத்ததாய்
மிளிரும் உன் அதரங்களில்
என் காதல் தேன் அருந்துவதை
தேக்கடியில் காணலாம்

திறந்துகிடக்கும் தோட்டமாய்க்
கவரும் உன் மேனியில்
என் காதல் கொடி ஊர்வதை
ஊட்டியில் காணலாம்

என் தலைமுடியை
உன் பொன் விரல்கள்
காதலாய்க் கோதுவதை
குற்றாலத்தில் காணலாம்
கணினி
சாளரம் திறந்தது
அவள்
விழி திறந்தாள்
உள்ளே
பேரண்டம்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
உயிர் துடிக்கத் துடிக்க
என்னை அடித்துத் போட்டுவிட்டு
என்னிடமிருந்து உன்னை நீயே
வலுக்கட்டாயமாய் அழைத்துக்கொண்டு
எங்கே செல்கிறாய்

செல் செல்
அங்கேயும் நான் இருப்பேன்
உன்
உணர்வுகளை
நீயே சிறைபிடித்தாலும்
நீ குற்றவாளிதான்
காதல் மன்றத்தில்

உன்
இதயம் கொப்பளிக்கும்
உன் உணர்வுகள்
எனக்குச் சொந்தமானவை
பிரமித்த சிலிர்ப்போடு
உள்நுழைந்த உள்ளக் கொதிப்பை
ஞாபகம் வைத்திருப்பாயா

நெடுயுகத் தாகத்தோடு
தொட்டுத் தடவிய
உயிரின் தவிப்பை மறந்திருப்பாயா

அழகின் ஒளியைவிட
ஏக்கத்தின் கண்ணீரை
நேசித்து நெகிழ்வோனுக்கு
உன்மீது காதல்

உனக்கு?
ஒவ்வொரு பறவையும் தினமும்
தன் உடலின் எடையில்
சரிபாதி அளவுக்கேனும் உண்டால்தான்
உயிர்வாழ முடியுமாம்

அதே போலத்தான் காதலும்
தன் உயிரின் பாதி அளவுக்கேணும்
தினமும் உருகி வழிந்தால்தான்
அது உயிர்வாழ முடியும்
கண்மணி
இது கவிதையா
என்று பாரென்றேன்

வாசித்துச் சிலிர்த்து
இதை எப்போதடா
எழுதினாய் என்றாள்

உனக்காகக் காத்திருந்தேனே
ஒரு நிமிடம்
அது ஒரு நிமிடமல்ல
ஒரு நூறு ஆயுட்காலம்
அத்தனைக் காலத்தையும்
மொத்தமாய் உள்ளடக்கிய
முத்தக் கவிதையடா
செல்லம் இது என்றேன்

எட்டு மடிப்பாக மடித்து
எங்கோ ஓர் சொர்க்கத்தில்
பதுக்கிக்கொண்டாள்
ஒரு கவிதை எழுத
முதல்வரி தேடி
உன் பார்வைக்காகக் காத்திருந்தேன்
உன் பார்வை
வந்தவுடன்தான் தெரிந்தது
என் கவிதை முழுமையுமே
உன் பார்வை
மட்டும்தான் என்று

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
என் கண்களால் அல்ல
என் கவிதைகளின் விழிகளால்
உன்னையல்ல உன் கவிதைகளை
நானல்ல என் கவிதைகள்
பார்த்துப் பார்த்து
ரசித்துக் கொண்டிருக்கின்றன

உன் குரல் இழுத்துவரும்
உன்னோடு அல்ல
உன் கவிதைகளின் இதயத்தோடு
நானல்ல என் கவிதைகளின் செவிகள்
துள்ளிக் குதித்துக் கூத்தாடுகின்றன

புலன்களால்தான் உணர முடியுமாம்
கண்டு கேட்டு நுகர்ந்து ருசித்து தீண்டியது
உன்னையல்ல உன் கவிதைகளை
என் புலன்களால் அல்ல
என் கவிதைகளின் இழைகளால்

நானல்ல
என் கவிதைகளின் அலைகள்
நட்புறவாக்கியது உன்னையல்ல
உன் கவிதைகளின் உணர்வு நதிகளை

ஆழத்தில் வேர்களில் உயிரின் ஈரத்தில்
நானல்ல என் கவிதைகள்
உனையல்ல உன் கவிதைகளை
உணர்ந்ததும்
என் கவிதைகளல்ல
விலக முடியா உயிராகிப்போனது
கண்ணாடி முன்நின்று பார்த்தேன்
நீங்கள் சொல்வதுபோல்
நானொன்றும் அழகில்லை
நீங்களோ
மிக மிக அழகு என்று
அழகற்றவனிடம்
அழகானவள்
கூறிச் சிலிர்ப்பது
காதல்
இந்த
உலகம் அழிந்து
பல கோடி ஆண்டுகள் கழித்து
பின் ஒருநாள் புல் பூண்டுகளெல்லாம்
புதிதாய் முளைத்து அதில்
நானும் பிறந்து நீயும் பிறந்தால்

பிறந்தால் என்ன
நான் பிறந்திருந்தால்
நீயும் நிச்சயம் பிறக்கத்தானே செய்வாய்

சத்தியமாய் நான்
உன் விழிக்குள் விழுந்து
இப்படித்தான் தவியாய்த் தவித்து
துடியாய்த் துடித்து...
அஃதொன்றும்
வெகு தூரத்திலுள்ள
பகற் கனவில்லை
பக்கத்திலேயே இருக்கும்
தேதி தெரியாச்
சொற்பப் பொழுதுதான்
ஞாபகமூட்டுவதற்காக
இந்த நொடி விசும்பலை
உன் அழுக்கு முந்தானையில்
முடிந்துவைத்துக்கொள்
அழைத்துவிடாதே
என்னை நீ முந்திக்கொண்டு
தெரியப்படுத்த
நாதியற்றவனிடமிருந்து
வாரா தூரமிருந்துவிடாதே
மூடிய விழிகளாலும்
தேடுவதென்
உறவு
உன் கூந்தலில்
எனக்கான காதல் வாசனையை
யார் பின்னிப்போனது

உன் கையணைவுகளில் ரோஜா சாற்றை
யார் கொட்டிவைத்தது

உன் மார்பினில் ஊட்டி மலர்களை
யார் பரப்பிச்சென்றது

என் ஆடைகளில் வாசனை திரவியமாய்
உன் வியர்வையை ஒத்திக்கொள்ள
யார் சொல்லித்தந்தது
அன்பே
உன்னைத் தொடாதபோது
துடிக்கும் என் உயிர்
எனக்கா சொந்தம்
உனக்குத்தானே
என்னைத் தொடவிடு
கடைக் கண்ணையும் மடித்து
கைப்பையில் இட்டுக்கொண்டு
கவனமாய்க் கடந்தாய் என்னை நீ நேற்று
உலையரிசியை வெளித்தள்ளி
உள்ளே விழுந்து கொதித்ததென் உயிர்

இன்றோ
மூன்றாம்பிறை இமைகளுதிர
முழுமொத்த விழி விரித்து
மோகமாய் விழுங்குகின்றாய் நின்று
ஓநாய்க்குத் தப்பியோடும்
சிறு முயலின் மூச்சிறைப்பில்
என் உயிர் கிடந்து தவியாய்த் தவிக்கிறது

இனி எப்போதுதானடி
நானென் இயல்பிலிருப்பேன்
மடியில் கிடந்த நித்திரை
விழித்தெழுந்து ஓடிவிட்டது

உயிரில் விழுந்த கண்ணீர்
சாக்கடல் பரிசளித்து ஆவியானது

என் உயிர் ஒரு முறை உள்ளிழுத்த
உயிர்க் காற்றை
ஒரு நாளும் மறப்பதில்லை

தவமிருக்கிறேன்
உயிர் உடைந்து சொட்டுச் சொட்டாய்க்
கொட்டக் கொட்ட

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இதழ்களின்
மொழிகளைப்போல
இதயங்களின் மொழிகளும்
வேறுவேறு

இறுகிக்கிடக்கும்
எந்தவோர் இதயத்தையும்
அதன் பிரத்தியேக மொழியறிந்த
இன்னோர் இதயத்தால் மட்டுமே
தட்டியெழுப்ப முடியும்

இதய மொழியறிந்த
இதயங்களைச்
சேகரித்து வாழ்வதே
இதய வாழ்க்கை
மீண்டும் என்
விடியல் பறவையின்
கீச்சுக்கீச்சுக் குரல் கேட்டேன்
நெஞ்சில் நீண்டு புலர்ந்த
வெளிச்சக் கீற்றுகளால்
விலகியோடி மறைந்தன இருட்டுகள்

எங்கே பறந்தாயடீ செல்லம்
என்றேன் செல்லமாக
எங்கே சுற்றித் திரிந்தாலும்
பறவையின் சரணாலயம்
வேடந்தாங்கல்தானே என்றது பறவை

இந்தச் சரணாலயத்தின் சரணம் நீ
என் சிறகுகளிலெல்லாம் உன் இறகுகள்
உன் இறகுகளில்தான்
என் உயிர் என்று சொல்லி
முத்தமிட்டேன் உயிரில் உயிரால்
ஞாபகங்களால் ஆனது
காதல்

ஆழமான ஞாபகங்களின் மீது
முழுமையாய் ஏறிக்கொண்டு
இறங்குவதே இல்லை
காதல்

மறக்க நினைக்கும்போது
மரணத்தை
நினைக்கத் தொடங்குகின்றன
சில ஞாபகங்கள்
உன்னைக் காணும்
அந்த ஓர் நொடி
நான் என்னாவேன்
உன் முழுமொத்த
உருவத்தையும்
அப்படியே
விழுங்கிக்கொண்டு
செரிக்கத் திணறி
கண்ணீராய்
உன் பூமடி விழுவேனோ
சிறு மலரின் பொன்னிதழ் மேல்
சிம்மாசனமிற்றிருக்கும்
நிம்மதிப் பனிக்குடம் கவிழ்க்க
துளியும் விருப்பில்லை எனக்கு

உள்ளங்கை மெத்தையில் இட்டு
மூச்சு வெப்பக் கூடுகட்டி
இமைகழித்துக் காவலிருக்கும்
என்னால் அது எப்படி இயலும்

ஆயினும்
விழிகளிலும் நெஞ்சக் குழிகளிலும்
விழுந்து சிதறடித்தப் பேரிடிகள்
போதுமென்று விட்டுவிடவில்லை
இனியும் இன்னமும் கொடூரமாய்
வேர்களுக்குள்ளும்
இறங்கிக்கொண்டேதான் இருக்கின்றன

நீ வந்து முத்தமிடு
உன் எச்சிலால் மருந்திடப்பட்டு
என் காயங்களெல்லாம் உதிர்ந்தழியும் என்று
என் மனமின்னல் உனை நோக்கிப் பாய்கிறது
அன்பே நீ இதழ் குவிப்பாயா
ஏதாவது
ஒன்று சொல்
விழியே என்னை
இன்றாவது உறங்கவிடு
கண்ணீரைக்
கண்ணீரால் சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால் தூக்கிவிட்டு
நீ என்னை நானாக்கியபோது
என் சிறகுகளின் சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்

பின்னொரு நாளில்
ஒரு பெரிய பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும் கலையை
நானே அறிந்திருப்பது
அவசியமென்று அறிந்துகொண்டேன்

காதல் புரிதலும் காதலைப் புரிதலும்

காதல் புரிதலும் காதலைப் புரிதலும்


காதலைப் புரிந்துகொள்வது வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைப்போல காலத்துக்குக் காலம் மாறித்தான் வந்திருக்கிறது.

காதல் நம்மிடம்தான் இருக்கிறது யாரிடமோ இல்லை என்ற தெளிவு வரும்போது நம்மை நாம் அதிகம் காதலிக்கிறோம்.

யார் யாரோ எவ்வெப்போதோ நம் காதலை அவர்கள் காதலோடு இணைத்து வீடுகட்டி விளையாட வருகிறார்கள்.

மாரில் சாய்த்து ஊட்டி விடுபவர்களே நம்மை ஒடித்தும் போடுகிறார்கள்.

எதிர்பாரா தருணங்களில் மிகுந்த ஆச்சரியமானதாய்ச் சட்டென தொடங்கி கண்ணீரில் வளர்ந்து வெறும் அழுகையாய் மட்டுமே நின்றுவிடுகிறது சில காதல்.

சமுதாய சாத்தியமில்லாக் காதல்கள்தான் உலகெங்கிலும் அழுத்தமானதாய் வியாபித்திருக்கின்றன. அவைதான் ஆழமாய் உணரப்படுகின்றன. உயிர் கரையும் அழுகைகளை ஆட்கொள்கின்றன.

காதலை கல்யாணத்தோடு சம்பந்தப்படுத்துவது ஒரு வயது. கல்யாணத்திற்குப்பின் காதல் வருவது இன்னொரு வயது. ஒடிந்துகிடந்தபோது முகத்தில் நீர் தெளிக்கும் மேகமாய் காதல் வருவது பிரிதொரு வயது.

இப்படியாய், வருகிறது வருகிறது என்று சொல்வதைவிட காதல் நம்மிடமே இருக்கிறது. அது சேர்வாரோடு சேர்ந்தால் மட்டும் சிவக்கிறது என்று சொல்வதே சரி.

சேர்வாரெல்லாம் அனைத்தாலும் சேர்ந்தே இருப்பார் என்றால் அது ஒருவரோடு முடிந்துபோகலாம்.

ஓடிப்போயோ அல்லது உடனிருந்தோ காதலை காயப்போடும் நிலை வரும்போது தனிமையை விரும்பாத காதல் சந்தர்ப்பங்களால் மீண்டும் சிலிர்த்துக்கொள்கிறது.

ஒரு சமயம் ஒருவர் மீது காதல் என்பதை நம்பலாம்.
ஆனால் ஒருமுறையே காதல் வரும் என்பது சுத்தப் பொய்.

காதலைத் தொட்டுப் பார்க்காத பழைய நாட்களில் ஒவ்வொரு பார்வையிலும் கரைந்து நிற்கிறோம்.

நல்ல காதலின் மடியில் கிடக்கும்போது எந்தப் பார்வையும் தீண்டமுடியாத தூரத்தில் தீபமாய் எரிகிறோம். இயலாமைகள் தாக்கிய வடுக்களின் மீது வந்து ஒட்டும் கண்ணீரோடு கண்ணீர் சேர்த்து ஆனந்தக் காதலைப் பெறுகிறோம்.

இப்படியாய் காதல் என்பது ஒன்றோடு மட்டுமே நின்றுவிடும் மூச்சாய் இல்லை பலருக்கும்.

கணிவழிக் கிளிவதை

இணையச் சாளரங்களில்
கணினிச் சொடுக்குகளால்
ஜிமெயில் பிளந்து
மின் துடிப்புகளுக்கிடையில்
கண் துடித்தேன்

வெற்றுகள் கூடி துக்கம் விசாரிக்க
என் விழியே என் விழி பார்த்துக் கேட்கிறது
"எங்கே என் கணிக்குயில்?"

வலைப்பூ வனப்பாய் விழுதுகள் பரப்பி
கிளைத்து வளர்கின்றன உயிரிணையத்தில்
பசும் பொல்லா நினைவுகள்

வாலறுந்த கணியெலிபோல்
அவளின் உணர்வுக் கணிக்குள்
எதைச் சொடுக்கவும்
வழியற்று வலிபெற்று நான்

யுனித்தமிழ்ச் சொல்தேடும் கூகுள் எந்திரம் போல்
கடுவிழியலைந்து தவிக்கிறேன்
கூட்டுக்குள் அடையா ஏக்கங்களோடு
என் மூச்சானவள் மனம் தேடி

மௌனமும் அல்லாத பேச்சும் அல்லாத
இடைப்பட்ட மொழியில்
வினோதமாய்ப் புதிர்கிறாள்
நாளும் பொழுதும் இவள்

மௌனமெனில்
நம்பிக்கைத் திசையில்
அவளை என் விருப்பம்போல்
நகர்த்திக்கொள்வேன்

பேச்செனில்
இதுதான் இவளென்று வெள்ளைத்தாள் எழுதி
உறுதியாவது செய்து கொள்வேன்

மௌனமுமல்லாத பேச்சுமல்லாத
இவளின் முட்பூ முத்தம்
உயிரின் உள்ளுதடுகளைக் கிழிக்கின்றது

அதன் மூர்க்க வாசம்
அணுக்கள் ஒவ்வொன்றையும்
இரண்டிரண்டாய்ப் பிளந்தெடுத்துக்கொண்டே
ஓய மறுக்கின்றது

கண்ட்ரோல்+ஆல்டர்+டெலீட்டால்
பில்கேட்சின் பிழைகளைச் சரி செய்வதைப்போல
இவ்வதைகளையும் சரிசெய்ய
நெஞ்சப் பொறிக்குள்ளும் பொத்தான்கள் இல்லையா

காணத்துடிக்கும் உயிரோடு
என் உயிருக்கு இந்த உயிர் மடலும்
விரைந்து போய்ச் சேரட்டும்

திறக்கப்படாத
திறந்தாலும் வாசிக்கப்படாமல்
அழித்தல் பொத்தானால் தூக்கிலிடப்படும்
அவளின் மின்னஞ்சல் வருகைப் பெட்டிக்குள்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

கண்ணதாசன் பாடல்கள் - அத்திக்காய் காய் காய்


அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


என்ற கண்ணதாசனின் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இதை வெறும் சினிமாப்பாட்டு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். சங்ககாலத்துப் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகளை எடுத்து கண்ணதாசன் திரையிசையில் கலக்கிய பாடல். இதை சினிமாவில் போடுகிறேன் என்றதற்கு எம் எஸ் வி கண்ணதாசனை விடவில்லை. இதெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று புறந்தள்ளிவிட்டார்.

கண்ணதாசன் கண்களில் கண்ணீர். அடடா கண்ணதாசா இதுக்கெல்லாம் அழலாமா சரி சரி போடலாம் விடு என்று எம் எஸ் வி சம்மதித்திருக்கிறார் இந்தப் பாட்டில் வரும் காய்களை உற்றுக்கவனியுங்கள். அவற்றுள் வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன. இது மிகமிக இலக்கியத்தரம் வாய்ந்த சினிமாப் பாடல். அதனால் எனக்கு மிக மிகப் பிடித்தபாடல்.

தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஒரு சுவாரசியமான விசயம் சிலேடை. இரு பொருளைத்தரும் ஒரு சொல் அல்லது வரி அல்லது பாடல்தான் சிலேடை. நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் அந்தப் பா வகைக்குள் ஒளிந்துகிடக்கும். இதற்கு உதாரணமாய் எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம். அதில் ஒன்றுதான் இந்த அத்திக்காய் காய் காய்.

அந்த சங்ககாலப்பாடலில் வருவது சில காய்கள்தான். ஆனால் அதைத் தழுவி கண்ணதாசன் எழுதிய திரையிசைப்பாடலில் ஏகப்பட்ட காய்கள். கொத்தவால் சாவடிக்குள் நுழைந்துவிட்டதைப் போல கமகமக்கும்

அத்திக்காய்
ஆலங்காய்
இத்திக்காய்
கன்னிக்காய்
ஆசைக்காய்
பாவைக்காய்
அங்கேகாய்
அவரைக்காய்
கோவைக்காய்
மாதுளங்காய்
என்னுளங்காய்
இரவுக்காய்
உறவுக்காய்
ஏழைக்காய்
நீயும்காய்
நிதமுங்காய்
இவளைக்காய்
உருவங்காய்
பருவங்காய்
ஏலக்காய்
வாழக்காய்
ஜாதிக்காய்
கனியக்காய்
விளங்காய்
தூதுவழங்காய்
மிளகாய்
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
சிரிக்காய்
கொற்றவரைக்காய்
தனிமையிலேங்காய்

எத்தனைக் காய்கள் பாருங்கள். இத்தனையையும் கொண்டு கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்தான் அத்திக்காய் காய் காய். இதோ முழுப்பாடலும். பாடலை முதலில் பாடிப்பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு வரியையும் நாம் அலசுவோம்.

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்

தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்

வெண்ணிலவே நீ சிரிக்காயோ
கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே

தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)





பாடல்:அத்திக்காய் காய் காய்
குரல்:டி எம் சௌந்தரராஜன், சுசீலா, P B ஸ்ரீநிவாஸ், ஜமுனா ராணி
வரிகள்:கண்ணதாசன்
வருடம்: 1965

கேட்க - http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4296

இது ஒரு சங்ககாலப் பாடல் என்று முன்பே சொன்னேன். சங்ககாலப் பாடலில் இருந்தது இரண்டுமூன்று காய்கள்தான். ஆனால் கண்ணதாச மரத்தில் காய்த்ததோ முப்பதையும் தாண்டி.

தலைவன் பொருள்தேடிப் பிரிகிறான். அவன் சென்ற திசை நோக்கி இவள் ஏங்கிக் கிடக்கிறாள். இந்தப் பொல்லாத வேளையில் நிலவு வந்து இம்சிக்கிறது. ஏற்கனவே
அவள் மனம் ஏக்கத்தில் சிக்கியிருக்க காதலை ஊட்டும் வசீகர நிலா தன் ஒளியைப் பாய்ச்சி அவளை உஷ்ணப்படுத்துகிற்து. அவளோ துவள்கிறாள். கோபம் வருகிற்து நிலவின்மீது. என்ன இது அநியாயம் என்னை ஏன் வதைக்கிறாய் என்று திட்டவேண்டும்போல் இருக்கிற்து. இருந்தாலும், நிலா காதல் உணர்வுகளை ஊட்டும் அற்புதமாயிற்றே திட்டவும் மனமில்லை. எனவே, அதனுடன் முறையிடுகிறாள் அவள்....

எப்படி

அத்திக்காய் காய் காய்

ஏ நிலாவே..... நீ காய்கிறாய் நான் தேய்கிறேன். என்னை நீங்கிச்சென்ற தலைவனோ அங்கே இன்பமாய் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் காய்கிறாய்? எனவே நீ அவன் இருக்கும் அந்தத் திக்கில் காய் - அந்த திசையில் காய் - அவனிடம் சென்று காய். அவனை இந்தக் காதல் நோய் பற்றட்டும். அப்படிப்பற்றினால்தான் அவன் என்னிடம் ஓடிவருவான்.

ஆலங்காய் வெண்ணிலவே

வெறுமனே காய்ந்துவிடாதே. அது அவனுக்குப் போதாது. பொறுப்பில்லாம அங்கேயே இருந்துவிடுவான். நீ காய்க்கும் மோக வெப்பத்தில் அவன் என்னை நோக்கி ஓடிவரவேண்டும். எனவே நீ விசத்தைப் போல் காய். ஆலம் என்றால் விசம். சாதாரண காய்ச்சலுக்குக் கரையாத அவன் மனம் உன் விசக் காய்ச்சலுக்கு நிச்சயம் சிதையும்

இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ


என்னிடம் வந்து இந்தத் திக்கில் நின்று காய்ந்து தொலைக்காதே வெண்ணிலாவே. உனக்கு பெண்களில் தாபம் புரியாதா? தவிப்பு விளங்காதா? தனிமை புரியாதா? ஏக்கம்
அறியமாட்டாயா? ஏனெனில் நிலாவே, நீயும் ஒரு பெண்ணல்லவா?

அடடா எத்தனை அருமை பாருங்கள். இந்த இலக்கிய ரசனைதான் என்னை நம் பழந்தமிழ் இலக்கியத்தின்முன் மண்டியிடச் செய்யும். விடவே மாட்டேன் பழைய இலக்கியங்களை.

அத்திக்காய் என்பது அத்திக்காய் அல்ல அது அந்தத் திக்காய்
ஆலங்காய் என்பது ஆலமரக்காயல்ல அது விசம்போல் காய்
இத்திக்காய் என்பது நாம் அறியாத காயல்ல அது இந்தத் திக்காய்

இதோடு மூன்று காய்கள் முடிந்தன.

இனி

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்


4. கன்னிக்காய்
5. ஆசைக்காய்
6. பாவைக்காய்
7. அங்கேகாய்
8. அவரைக்காய்
9 கோவைக்காய்

மேலும் ஆறு காய்கள். அடடா அதற்குள் ஒன்பது காய்களை அடுக்கிவிட்டார் பாருங்கள் கவியரசர் கண்ணதாசன்.

தலைவி பாடுகிறாள். நிலவே, தலைவனை நினைத்து நினைத்து உறங்காத விழிகளோடு தவியாய்த் தவிக்கும் இந்தக் கன்னிப் பெண்ணுக்காக, (கன்னிக்காக - கன்னிக்காய்) அவள் சின்னஞ்சிறு வயதுமுதல் அதாவது ஞாபகம் முளைக்காத அந்த பழைய நாள் முதல் அவன் மீது கொண்டுவிட்ட அடங்காத ஆசைக்காக (ஆசைக்காய்), அவன்மீது அபரிமிதமான காதல் கொண்டுவிட்ட பாவைக்காய் (பாவை என்றால் பெண்), அதாவது இந்தப் பெண்ணுக்காய், இங்கே காய்ந்து தொலைக்காதே.

என் மீது இரக்கப்படு, நான் தகிக்கும் உன் காதல் கதிர்களைத் தாங்கும் நிலையில் இல்லை, அவனைத் தேடும் விழுகளோடும், அவனுக்காக ஏங்கும் இதயத்தோடும், அவன் இல்லாமல் உயிரற்றுப் போன உடல் போலவும்தான் வாடுகிறேன். வாடாமல் என்னைவிட்டு எங்கோ ஓடிப்போன காதல் மறந்து என் மீது இரக்கமற்ற அவனிடம் நீ சென்று காய், அங்கேகாய்.

என் காதலரான அவரைக் காய் (அவரைக்காய்) இந்த மங்கையின் ஒற்றை அரசன், தலைவன் கோ (கோ என்றால் அரசன். இளங்கோ என்றால், இளைய அரசன்) வைக்காய்

(கோவைக்காய்). அப்போதுதான் அவன் என்னிடம் என் காதல்நாடி என்னைத்தேடி ஆசையாய் வந்து தொலைப்பான்.

9 காய்கள் முடிந்தபின் மேலும் இரண்டு கண்ணதாசக் காய்கள்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


இப்போது தலைவியின் அந்தப்பக்கப் பாட்டுக்கு தலைவன் இந்தப் பக்கம் இருந்துகொண்டு எசப்பாட்டு பாடுகிறான். நிலவே, இவள் சொல்கிறாள் என்று என்மீது காய்ந்துவிடாதே! நான் அவளைவிட கொதிப்பில் இருக்கிறேன். அவள் அப்படித்தான் பழியை என்மீது தூக்கிப் போட்டுவிடுவாள். அவள் உள்ளம் காய். என்மீது கனியாத காய்.

தொழில் நிமித்தமாகவே நான் இங்கே வந்து இப்படித் துடித்துச் சாகிறேன். அவளென்னவோ நான் அவளைப் பிரிவதற்காகவே இப்படிப் புறப்பட்டுவந்துவிட்டதைப் போல் உன்னிடம் முறையிடுகிறாள். நான் அப்படிப்பட்டவன் அல்லன்.

மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்)

மாது அவள் உள்ளம் காய்தான் - என் மீது கனிவின்றிச் சாடுகிறது. என்னை நெருப்பாய்ச் சுட்டெரிக்க உன்னைத் தூண்டிவிடுகிறாள். அவள் என் மீது மிகுந்த அன்பு உள்ளவள்தான். ஆனால் அவளது காதல் அவளை உண்டு இல்லை ஒரு கை பார்க்கிறது. அதனால் அவள் உள்ளம் காயாகிவிட்டது. அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா?

என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? அவளுக்கு முன்பே நீதானே என் காதலி. என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக்க் காயாதே. பாருங்கள் ஆண் இங்கே நிலாவை என்னைக் காயாதே அவளைப் போய் காய் என்று மூட்டிவிடவில்லை. என்னைக்காயாதே நீயும் என் உயிர்தானே என்னை அறிந்தவள் தானே என்று கூறுகிறான். அட எப்படிப்பார்த்தாலும் ஆண்கள் நல்லவர்களப்பா :)

01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்

என்று பதினோரு காய்கள் முடிந்துவிட்டன, இனி அடுத்த இரு வரிகளில் இன்னும் ஏழு காய்கள். அம்மாடியோவ் கண்ணதாசா, அப்படியே அசத்துகிறாயே கவியரசா!


இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும்காய் நிதமும்காய் 

நேரில் நிற்கும் இவளைக்காய்

12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்

இது ஆண்பாடும் வரிகள். பெண்கள் எப்போதுமே தூரமாய் இருக்கும்போது, வா வா என்பார்கள். ஏங்கித் தவிக்கிறேன் என்பார்கள். தூங்காமல் துவள்கிறேன் என்பார்கள்.

அருகே வந்தால் போதும், அது அச்சமோ நாணமோ மடமோ பயிர்ப்போ, அந்த வள்ளுவனுக்குத்தான் வெளிச்சம், ஒரே பிகுதான்.

வெட்டிக்கு ஒரு சண்டை வேறு போடுவாள். ஏன் சண்டை போடுகிறாய் கெண்டை மீனே என்று கேட்டால், வள்ளுவன் வேறு வக்காலத்துக்கு வருவான்.

இது ஊடலடா மடையா. நீ ஊடிக்கூடு அதில்தான் உற்சாக வெள்ளம் கரைபுறண்டோடும் என்று சூடுபோடுவான்.

ஆக, தவிப்பும் துடிப்புமாய் ஆண்களில் நிலை பாவம் பாவம் அந்தோ பரிதாபம்.

கெஞ்சுடா நீ கெஞ்சலேனா மவனே கஞ்சிடா என்று மிதப்பாய் நிற்பாள் அவள். சரி வேண்டாம் போலும் என்று விட்டு விலகித் தொலைத்தால் போதும், பிறகு ஒரு ரகளையே நடக்கும்.

வேறு வழி? கெஞ்சிக் கொஞ்சி பின் கிடைப்பாள் அந்த வஞ்சி ஓர் ஒன்றையணா முத்தத்துக்கு ;-)

இரவுக்காய்... ம்ம்ம் இறைவன் ஏன் இரவைப்படைத்தான்? அட இரவில்லையேல் இன்பமே இல்லை. பலரும் அது உறங்குவதற்குத்தான் என்று நினைத்துக்கொண்டு குறட்டையோடு தயாராக இருப்பார்கள்.

சோத்தப்போடு ஒரு சங்கீதம் மிச்சம் வெச்சிருக்கேன் என்ற மிதப்பு கண்களில் மின்னியலையும்.

இரவு காதலுக்குச் சொந்தம். இளமாலை தொட்டு இருள் ஏற ஏற காதலும் ஜிவ்வென்று ஏறும், அந்த இரவுக்காய்.

சரி இரவு வந்தாச்சு. வந்து? உறவில்லேன்னா? தொலைஞ்சுதே சங்கதி. ஆக இரவும் வேண்டும் அதில் அதனோடு உறவும் வேண்டுமே.

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்.

யார் ஏழை? உழைப்பவன் எவனும் ஏழையில்லை. கையேந்துபவன் மட்டும்தான் ஏழை. மாடி வீட்டில் இருந்தாலும், தன் தேவைக்காக கையேந்தினால் அவன் ஏழைதான்.

பெண்கள் ஆண்களை ஏழையாக்கிப் பார்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஏங்கும் ஏழையாகிறான் காதலன் தன் காதலியின் முன். இல்லேன்னு யாராச்சும் சொல்லுவீங்களா?

அடியே ஆருயிர்க் கற்றாழை ஆசையாய் ஒரு முத்தம்தா செவ்விதழ் சுழித்து என்று கேட்டுவிட்டால் போதும், உடனே பதில் வரும். "மாட்டேன்" அடடா இந்த ஏழைகள்படும் பாடு இருக்கிறதே :)

இவ்ளோ பாடு படுத்துகிறாளே இவள். நான் தானே தவிச்சிக்கிடக்கிறேன். என்னை ஏன் காய்கிறாய் நிலாவே. இவளைக்காய் என்கிறான் தலைவன். அதுவும் எப்படி?

எலிதான் காயுதுன்னா எலிப்புழுக்கையும் ஏன் சேந்து காய்கிறது என்று எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க. தஞ்சாவூர் கிராமங்களில் சொல்லப்படாத பழமொழிகளே இல்லை என்று சொல்லலாம்.

காதல் படுத்தும் பாட்டில் தலைவன் காய்ந்துதான் கிடக்கிறான். அட நிலா ஏன் காயுது. அது யாரின் வரவுக்காகக் காயுது. சூரியனாய் இருக்குமோ? இருக்கும் இருக்கும்.

நிலாவே உனக்குத் தெரிகிறதா காய்வதென்பது எத்தனை கொடுமை என்று. எனவே நீயும்காய், நிதமும் காய். பவுர்ணமிக்கு மட்டும் விறுவிறுப்பாய்க் காய்ந்தால் போதாது. தினமும் காயவேண்டும். இல்லையெனில் இவள் சரிவரமாட்டாள். இதெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாய் நிலாவிடம் தலைவன் சொல்கிறான். நேரில் நிற்கும் இவளைக்காய் என்று.

அடடா இதற்குள் என்னே ஒரு மந்திரப் பொருள் பாருங்கள். நேரில் தான் நிலாவே இவள் நிற்கிறாள். பாவி படுபாவி. மனுசன் வேதனை புரியுதா இவளுக்கு? பாரு அப்படியே கல்லு மாதிரி நிற்கிறாள்?

பொண்ணுன்னா அனல் பட்ட வெற்றிலையாய்த் துவள வேண்டாம்?

அப்படியே ஒரு வளைவும் காட்டாமல் என் நேரில் அப்படியே சிலை மாதிரி நிற்கும் இதோ இவளைக்காய் காய் காய் காய் என்று பாடுகிறான்

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும்காய் நிதமும்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்

பாருங்க, இதெல்லாம் காய் காய் தாங்க. ஆனால் அத்தனையும் உண்ணத் திகட்டாத கனி கனி கனி கண்ணதாசன் கனிகள்ங்க. வாங்க. அடுத்த இருவரிகளுக்கு.

உருவங்காய் ஆனாலும் 
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே 

என்னுயிரும் நீயல்லவோ

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


18. உருவங்காய்
19. பவ்ருவங்காய்

காதலனோ மிகத் தெளிவாக ஏழு காய்களை வீசி, இவளே இரக்கம்ற்றவள் இவளையே காய் நிலாவே. அருகிருந்தும் அப்படியே நிற்கிறாள், நீ காய்ந்தாலே இவள் கழுத்தைக் கட்டிக்கொள்ள ஓடிவருவாள் என்று தன் மனக்குறையைச் சொன்னதும், பெண் மனமல்லவா. அப்படியே இளகுகிறது வளைகிறது தாழ்கிற்து அவனுக்காகப் பாடுகிறது அதுதான் பெண்மை. பெண்மையின் மேன்மையான ரகசியம்.

தருவதற்கென்றே பிறந்தவர்கள் பெண்கள். அவர்கள் அழகில் மட்டும் தாராளம் இல்லை அன்பிலும் தாராளம், அணைப்பிலும் தாராளம், கனிவிலும் தாராளம், காதலிலும் தாராளம். என்ன வித்தியாசம் என்றல் ஆண் எப்போதும் துடித்துக்கொண்டே நிற்பான். பெண் அதற்கென்று ஒரு சூழலில் அமர்க்களமாய் எழுவாள். எழுந்தால் இவன் விழுந்தான், அவ்வளவுதான்.

என்னுடைய உருவம்தான் நான் முரண்டு பண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து ஒட்டிக் கிடக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமே அவளுக்கு. நிலவைப் பார்த்து நிலவிடம் சொல்வதுபோல் சொல்கிறாள்.

உருவங்காய் ஆனாலும் உள்ளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவா

சிலையைப்போல் சலனமற்று நிற்பதாய்த் தோன்றும் பெண்ணின் உள்ளே பல வண்ணத்துப்பூச்சிகள் பலகோடி சிறகடித்துப் பறப்பதை யாரறிவார்? இப்போது அவளால், அவனைக் காய் என்று சொல்லமுடியவில்லை. அவன் தான் கொதித்து நிற்கிறானே. ஏழு காய்களை எடுத்துவீசி இந்தக் கனியின் கனியிதழுக்காகக் காத்திருக்கிறானே.

இருவரும் சேர்ந்து இனி பாடுகிறார்கள்

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


ஒருவழியாய் இருவரும் யார் யார் மடிமீது என்று அறிந்துகொள்ள முடியா வண்ணம், யார் கரம் யாரை வளைத்துக்கொண்டு என்று தெரியாமல், உஜாலாவுக்குத்
தாவுகிறார்கள். அதோடு நின்றார்களா. இல்லை இத்திக்காய் காயாதே. எங்களை விட்டுவிடு. அத்திக்கில் ஊடலில் கிடக்கும் ஏனைய காதலர்களைக் காய் என்று டாடா சொல்லி
அனுப்பிவைக்கிறார்கள்.

அனுப்பி வைத்துவிட்டு....

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்


நான் பிறந்த ஊர் ஒரத்தநாடுங்க. ஒரத்தநாடு தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கடற்கரையோரம் வாழும் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேனீர் அருந்தும்போது

வெறும் பால் மட்டும் சேர்க்கமாட்டார்கள். கூடவே ஏலக்காய் வேண்டும் அல்லது இஞ்சி வேண்டும் அப்படியே பல சுவைமிக பொருட்களைச் சேர்த்து அருமையாய்

கமகமக்கும் மசாலா தேநீர் ஆக்கிவிடுவார்கள். ஒருமுறை அதைப் பருகிப் பழகிவிட்டால் அவ்வளவுதான். நாக்கு மீண்டும் அதையே கேட்டு மல்லுக்கு நிற்கும்.

ஏலக்காய் பல்லுக்கு நல்லது என்பதால் அழகிய காதல் சொல்லுக்கும் நல்லது. ஏலக்காய் தொண்டைக்கு நல்லது என்பதால் காதலில் கனிந்துபாடும் பாட்டுக்கு நல்லது.

அதுமட்டும் இல்லீங்க இன்னொரு மிக முக்கியமான விசயம் ஏலக்காயிடம் இருக்குங்க. அது இந்தக் காதல் என்றால் முகம் சுழித்து காத தூரம் ஓடுபவர்களின் மலட்டுத் தனத்தை உடைத்து ரத்தம் சுத்திகரித்து ஆண்மையை வலிமையாக்கி.... இவ்ளோ போதுமா இன்னும் சொல்லவேண்டுமா?

தேநீருக்கே இந்த ஏலக்காய் தரும் வாசமும் வீரியமும் இத்தனை என்றால், வாழ்க்கைக்கு? அதான் தலைவி சொல்கிறாள், ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம்

வாழக்காய் என்று. ஒரு தரம் அந்த வாசனையைத் தேநீரில் பருகிவிட்டால் எப்படி விடமுடியாதோ அதே போல அவர்கள் உள்ளமும் ஒருவரை ஒருவர் விடாமல்

வாழவேண்டும் என்று கண்ணதாசன் முடிவுபண்ணிட்டுத்தான் இப்படி எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரி அவர் அதோடு நிக்கலீங்க, ஒருககால் அதுகூட கைகொடுக்கலேன்னா இந்த ஜாதிக்காயைக் கொண்டுவருகிறார் வாழ்க்கைக்குள். தலைவியின் கவலையே அதுதானே? எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி அமையவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் காதல் விருப்பம்.

ஜாதிக்காயும் வாசம் வீசும் சமாச்சாரம்தான். ஏன் கண்ணதாசன் இப்படி வாசனை வீசும் சமாச்சாரமாகவே கொண்டுவருகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம்

காரணமாகத்தான். முதலிரவு என்றால் மல்லிகை மணம் வேண்டுமல்லவா? திருமணம் என்ற பேச்சு வந்தாலே பூக்கள்தான். அவை தரும் வாசனைதான். அப்படியே

கிளர்ச்சியை ஊட்டி, ஊட்டியையே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

ஜாதிக்காயை கொஞம் அதிகமாகப் பயன்படுத்திவிட்டால் என்னாகும் தெரியுமோ மயக்கம்தான் கிறக்கம்தான் போதைதான். அந்த ஜாதிக்காய் வைத்திருக்கும்

பெட்டகத்தைப்போல அதாவது பெட்டியைப்போல அதைத் திறந்தால் அந்த வாசனையில் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கிடைக்க அதனுள் இன்பம் கனியக்காய் என்று நிலாவை காயச்சொல்லிக் கேட்கிறாள். ஏன் இப்போதுமட்டும் காயச் சொல்கிறாள் என்றால் தலைவன் தலைவியின் மடிக்கு வந்துவிட்டான். இனி நிலா காய்வது அவசியமாகிவிடுகிறது. அமாவாசையோ தேய்பிறையோ கூடாது அவளுக்கு. அப்போதுதானே காதல் ஊட்டப்பட்டு அவர்கள் அற்புதமாய் வாழலாம் அல்லவா!

20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்

அப்படியே 23 காய்கள் இதுவரை வந்துவிட்டன. இத்தோடு நிற்கலீங்க. கண்ணதாசன் அவ்வளவு எளிதில் திருப்தி பட்டுவிடுவாரா என்ன? மேலும் அவர் தன் பாட்டுச் சாவடிக்குள் குவித்த காய்களை அடுத்த இடுகையில் காண்போம்.

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


தலைவி சொல்லிவிட்டாள் நிலாவே நாங்கள் ஏலக்காய் வாசனையாய் வாழக்காய் என்றும் ஜாதிக்காய் பெட்டகத்தின் வாசனையாய் எங்கள் வாழ்வில் இன்பம் கனியக்காய் என்றும். நிலாவை இனி காயாதே என்று சொல்லாமல் வந்து எங்களிடம் காய் அதனால் எங்களை வாழவைப்பாய் என்று சொல்லிவிட்டாள். இனி தலைவன் என்ன சொல்வது?

தலைவன் ஒரு ரகசியத்தை ரகசியமாய் சொன்னதைக் கேளாத வான் நிலாவுக்குச் சொல்லுகிறான். நிலாவே, தலைவி சொன்னதெல்லாம் உனக்கு விளங்கியதா இல்லையா? ஒழுங்காய் விழங்கிக்கொள். உனக்கு எப்பவும் சொல்வதைக் கேட்கும் பழக்கம் கிடையாது. எதையாவது குண்டக்க மண்டக்க செய்துகொண்டிருப்பாய். தூதுபோ என்றால் முகில் படுதாக்குள் பதுங்கிவிடுவாய். காயாதே என்றால் உடனே வந்து காயோ காயென்று காய்வாய். காரணம் என் மீதுள்ள ஊடல் என்று நானறிவேன்.

ஆனால் நீ புரிந்துகொள் நிலாவே, நீ தலைவியைக் காய்ந்தால்தான் அவள் என்னைத் தேடுவாள். எனக்கு நீ காயவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நான் எப்போதும் காய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆகவே என்னைக் காய்வதை விட்டுவிட்டு நீ தலைவியையே காய். அப்போதுதான் காதல் கனியும் காமம் சுவைக்கும் வாழ்க்கை வசமாகும். என்ன விளையாடுகிறாயா என்கிறாயா? உண்மையை உனக்குமட்டும் ஒரு கிசுகிசுப்பாய் உன் காதோடு சொல்கிறேன் கேள்.

தலைவியைக் காதலிக்கும்முன் நான் உன்னைத்தானே காதலித்தேன். அதில் மாற்றமில்லை என்றென்றும் நீ என்னுயிர்தான். என் செல்லம்தான். நீ தூரத்து நிலா என்பதால் உன்னை அருகில் கொண்டுவரும் வரமாகத்தான் இந்தப் பக்கத்து நிலா. உன்னைக் கிள்ளி எடுத்து வைத்தச் சின்ன நிலாதான் இவள். இந்தப் பக்கத்து நிலாவோடு நான் சொர்க்கம் காண்பது நீ காய்வதால்தான். அதாவது தலைவியிடம் நான் காணும் சுகமெல்லாம் நீ காய்வதால் அவள் கொள்ளும் காதலால்தான். அதாவது உன் காதலைத்தான். அவளைத் தூண்டிவிட்டு அவளோடு கூடும் போது நான் கொள்கிறேன். நீதானே என் உயிர் என்று நிலாவிடம் தலைவன் கதைவிடுகிறான்.

நிலா அவன் வார்த்தைகளில் மயங்கி ஓ அப்படியா கதை? நீ என்னைத்தான் காதலிக்கிறாயா என்னோடு கொஞ்சிக் குலவுதாகத்தான் நீ அவளுடன் இருக்கிறாயா என்று புரிந்துகொண்டு நாள் தவறாமல் தலைவியைக் காய நிலா அக்கறையாய் வந்துவிடும் என்று நினைப்பு தலைவனுக்கு! லஞ்ச லாவண்யங்களில் உச்சிக்கே போனவர்களாயிற்றே ஆண்கள். ஏமாற்றும் கலையைச் சொல்லித்தரவேண்டுமா? ஊடலை உடைக்க இவர்கள் சொல்லும் பொய் யுகம் தாங்குமா?

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

24.விளங்காய்
25. தூதுவழங்காய்

மேலும் நாலு காய்கள் பற்றி அடுத்த இடுகையில் நாம் காணும்வரை நீங்கள் காயாதிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள் கண்ணதாசனும் வண்ணநிலாவும்!

உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ


இந்த வரிகள்தான் கண்ணதாசனை இந்த சினிமாப்பாட்டு எழுத வைத்த கவர்ச்சி வரிகள். கண்ணதாசன் நொறுக்குத் தீனி தின்ற காகிகத்தில் யாரோ எழுதிய சில வரிகளைப் பார்க்கிறார். அதிலிருந்த காய்கள் இவர் மனதைக் கவிதையாய்க் கனியவைக்கின்றன.

கவிஞனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அவன் எழுதும் கவிதைகள் சில வேறெவரின் கவிதையையோ வாசித்து பிரமித்ததின் பலனாய் உருவாகும். அப்படியான பாதிப்பில் கவிதை எழுதாத கவிஞர்களே இருக்கமுடியாது என்று ஒரு கவிஞனாய் நான் சத்தியம் செய்வேன்.

கவிஞன் என்பவனே நேற்றைய கவிஞனின் தொளேறி நிற்கும் புதிய உயரமானவன்தான். நேற்றைய கவிஞன் இல்லாவிட்டால் இன்றைய கவிஞனின் உயரம் குள்ளமாகவே இருக்கும்.

வெள்ளரிக்காயா
விரும்பும் அவரைக்காயா
உள்ளமிளகாயா
ஒருபேச் சுரைக்காயா

இதுதான் கண்ணதாசனை உலுக்கிய வரிகள். நொறுக்குத்தீனி தின்றவர் அப்படியே அதன் சுவையில் சறுக்கி விழுந்தார். ஏன் இதை வளர்த்தெடுத்து காய்களின் ஊர்வலம் ஆக்கக்கூடாது என்று தன் கற்பனை சிட்டைப் பறக்கவிட்டார். ஒருமுறை வைரமுத்து நான்கு வரிகளாய் இக்கவிதையைச் சொன்ன ஞாபகம். இந்தக் கவிதை முழுவதும் கிடைத்தால் நான் பாக்கியசாலியாவேன். அறிந்தோர் எனக்கு அறிவிக்க அன்புடன் பணிகிறேன்.

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்கிறான் தலைவன் தலைவியைப் பார்த்து. அட என்னங்க தன் காதலியைப் பார்த்து இப்படியா மிளகாய் சுரைக்காய் என்று திட்டுவது? பிறகு காதல் எங்கே மலரும் சண்டை முள்தான் மண்டும் அல்லவா? மிளகாய் என்று அவள் குணத்தையும் சுரைக்காய் என்று அவள் உருவத்தையும் கேலிசெய்வதாகவல்லவா இருக்கிறது இந்த வரி என்று நீங்கள் கவலைப்படவேண்டாம். காதலி அந்தக்காலத்தவள் தமிழ் அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். இந்தச் சிலேடையெல்லாம் அவளுக்கு பிசுகோத்து.

இந்தக்காலப் பெண்போல் ஆங்கில மீடியத்தில் படித்தவளா அவள்? மிகுந்த உணர்ச்சியில் பொங்கித் ததும்பி தன் காதலைச் சொல்லும்போதுகூட ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் சொல்லும் இன்றைய தூய தமிழ்ப் பெண்ணா அவள்? வள்ளுவன் கம்பன் இளங்கோ போன்றோருக்கும் முந்தைய கவிஞர்களும் நக்கீரன் ஒட்டக்கூத்தன் போன்றோருக்கும் முந்தைய விமரிசகர்களும் உருவாக்கிய பழந்தமிழ் மாதாயிற்றே அவள்?

உள்ளமெலாம் மிளகாயோ என்பதை உள்ளம் எல்லாம் இளகாயோ என்று சரியாகவே அவள் புரிந்துகொள்வாள். அதே போல ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்பதை ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ என்றும் புரிந்துகொள்வாள். தலைவன் அவள் புரிந்துகொள்வாள் என்ற தைரியத்தில்தான் உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்று பயமின்றி சொல்கிறான். ஒருக்கால் புரியாமல் அவள் நின்றால் அதன் வழியே ஊடல் வரும் அதன்பின் காதல் வரும் அது சொர்க்கம் தரும் என்ற நப்பாசையாகவும் இருக்கலாம்.

அதைத்தொடர்ந்து தலைவன் சொல்கிறான் வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ? இதுவரை வானத்து வெண்ணிலவையே காய் காய் என்று கதறிக்கொண்டிருந்துவிட்டு. நீதான் என் வெண்ணிலா என்று தலைவியின் தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் தலைவன். வெள்ளரிக்காய் பிளந்து பார்த்திருக்கிறீர்களா? வேறு எந்தக்காயைப் பிளந்தாலும் அத்தனை அழகான சிரிப்பை நீங்கள் தரிசிக்கவே முடியாது. வெள்ளரிக்காய் பிளந்ததைப்போல் வெண்ணிலவாகிய நீ சிரிக்கமாட்டாயா என்று காதலன் தலைவியிடம் ஒப்புதல் கேட்கிறான். இபோது வெண்ணிலா தன் அருகிருக்கும் தலைவியாகிவிடுகிறாள். ஆண்கள் வசதிக்கேற்ப வர்ணனைகளை மாற்றிக்கொள்வார்க்ள்தானே?

பொம்பள சிரிச்சாப்போச்சு என்பார்களே என்ன பொருள், அவள் சம்மதம் தந்துவிட்டாள் என்று பொருள். பிறகென்ன இவர் கைவரிசையைக் காட்டிவிடுவாரல்லவா? அதுதான் நோக்கம்.

26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்

இவ்விரு வரிகளில் கண்ணதாசன் என்ற வினோத கவிதை மரம் நான்கு காய்களை உலுக்கிக்கொடுத்துவிட்டது. அத்தோடு நிற்கவில்லை இறுதியாய் மேலும் இரு காய்களைத்தர நாளை வருகிறது என் இடுகையில் வழியே!

கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா


அத்திக்காய் காய் காய் பாட்டின் கடைசி இரு வரிகளுக்கு வந்துவிட்டோம். இந்த இருவரிகளில் கண்ணதாசன் விருந்து வைப்பது இரு காய்களை. அதில் முதலாவது.

கொற்றவரைக்காய். கொத்தவரங்காய் என்று காய்கறிக்கடையில் கூடையில் குவித்துவைத்திருப்பார்களே அதுதான். பச்சைக் கொலுசுகளாய் அவை பளபளக்கும். கொற்றவரைக்காய் என்றால் கண்ணதாசன் முன்வைக்கும் பொருள் என்ன?

கொற்றவன் பெற்ற குலக்கொடியைக்
கல்விகற்க விட்டேனடா அடா
குற்றம் புரிந்தனையா இல்லையா
அதை மட்டும் உரைத்துவிடு


கொற்றவன் என்ற சொல் கேட்டதுமே என் மூளைக்குள் ஓடிவரும் ஞாபகம் இந்த வரிகள்தாம். இது பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன். அம்பிகாபதி அமராவதி காதல் நாடகத்தில் வரும் ஒரு பகுதி. குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவதிக்குத் தமிழ் சொல்லித்தர வந்த அம்பிகாபதி அவளைக் காதலிக்கிறான். அதை அறிந்த மன்னனின் விசாரனைக் கூடம் எழுப்பும் கேள்வியே இது.

கொற்றவன் என்றால் அரசன். கொற்றவரைக் காய் என்றால் என் மன்னனைக் காய். பழந்தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவனை தன் அரசன் என்றே காண்பார்கள். என் ராசா என்று செல்லமாய்க் கொஞ்சுவார்களே அது இதன் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தக் காலப்பெண்போல கணவனைக் கடன்காரணாய்க் காண்பதில்லை :)

தலைவி சொல்கிறாள், நிலவே நீ என் தலைவனைக் காய். அவன் காதல் அதனால் பெருகட்டும். எங்கள் வாழ்வு இனிக்கட்டும். என் தலைவன் பொய்யுரைப்பதுபோல் நானொன்றும் காதல் உணர்வுகள் இல்லாமல் இல்லை. எனவே கோதை என்னைக் காயாதே. கோதை என்றால் பெண். இந்தக் கோதை காதல் வாதையில்தான் நாளெல்லாம் இருக்கிறாள். எனவே என் கொற்றவரைத்தான் நீ காயவேண்டும் என்கிறாள்.

தலைவனின் முகம் பொய்க்கோபத்தால் வாடுகிறது. இந்த ஊடலுக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் மனதைத் திருப்பிக்கொள்ளா கள்ளத்தனத்துடன்.

உடனே தலைவி அவன் தோள்களில் விழுகிறாள். இந்தப் பெண்களே ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கும் புத்திசாலிகள்தானே? அப்படியே கழுத்தை வளைக்கிறாள். மனமும் விழிகளும் கனிந்துருக வெண்ணிலவைப் பார்க்கிறாள். வெண்ணிலவே நீ எங்கள் இருவரையும் காயாதே என்று செல்லமாகச் சொல்லிச் சிணுங்குகிறாள்.

அத்தோடு அவள் நிற்கவில்லை அவள் காதல் உள்ளம் காதலை அடைந்த பூரிப்பில் இந்தக் காதலுக்குக் காரணமான நிலவைப்பார்த்து பரிதாபப்பட்டு, இப்படி தினம் தினம் தனிமையில் வந்து வானில் காய்கிறாயே பாவம் இப்படி நீ இனி தனிமையில் ஏங்காதே வெண்ணிலவே. உன் காதலன் ஆதவன் மடிசென்று சேரு என்று வெண்ணிலவுக்குப் பரிந்துரைக்கிறாள்.

இத்தோடு பாடல் முடிகிறது ஆனால் அது நம் இதயத்தில் என்றென்றும் தொடர்கிறது. காலத்தால் அழியாத இந்த கண்ணதாசப் பாடலுக்கு முடிவேது? காய் காய் என்று கவிதையாய்க் கனிந்தவன் நம் எல்லோரையும் கனியவைக்கிறான் அவன் மறைந்தபின்னும். கவிஞனுக்கு மறைவு உண்டா? இல்லவே இல்லை. கண்ணதாசன் வாழ்கிறான்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வாழ்கிறான். நம் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் வாழ்கின்றான். காதல் என்ற சொல்லுக்கு கண்ணதாசன் என்று ஓர் அர்த்தம் உண்டென்று அகராதிகளைப் புதுப்பிக்க வேண்டும். இதோ அவன் கொட்டிக்குவித்த முப்பத்தியோரு காய்கள்.

01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்
12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்
18. உருவங்காய்
19. பருவங்காய்
20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்
24.விளங்காய்
25. தூதுவழங்காய்
26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்
30. கொற்றவரைக்காய்
31. தனிமையிலேங்காய்

இனி அவன் புகழ்பாட அவனை ஒட்டிப்பாட நான் எழுதிய மேலும் சில காய்கள் வருகின்றன கீழே:


கவிதைக்காய் சிலேடைக்காய்
கண்ணதாசன் கொய்யாக்காய்
வேலங்காய் விழியிங்காய் 

தேடித் தோற்றேன் வெண்ணிலவே

நெஞ்சுருகாய் நினைத் தேங்காய் 

காலம் தந்த பிரிவுக்காய்
வெஞ்சருகாய் காய்க்காமல் 

வருவேன் நிலவே உன்னருகாய்

கள்ளிக்காய் கனவுக்காய் 

ஆசைகள் நெஞ்சில் சுண்டக்காய்
காதல்காய் வாழ்வல்லவோ 

கத்தரிக்காய் வெண்ணிலவே

கவிஞர் புகாரி



என்
உயிரின்
திரவ வடிவம்
உன்
கண்களிலிருந்து
சொட்டுச் சொட்டாய்

காலமெல்லாம் காத்திருப்பேன்
கடந்தெனைச்செல் வரவேண்டாம்
பாலமொன்று நினைவிலுண்டு
பகலிரவு உடனிருப்பேன்
சேலைமுகில் உன்மடியைச்
சேராமலே சேர்ந்திருப்பேன்
மாலையென்று ஏன் எதற்கு
மனதுனது எனதன்றோ

நீ தடுத்தாலும் உனையள்ளித் தாலாட்டுப் பாடிவிடும்

உள்ளத்தில் புரண்டோடும்
ஓரு கோடிக் கவி நதிகள்
அவை உயிரை எழுத்தாக்கி
உணர்வேந்தும் நவமணிகள்

சொல்லுக்குப் பொருளென்று
சில நூறு விளக்கங்கள்
அது சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் நெஞ்சுக்குள்

பள்ளத்தின் நிலையென்றும்
பரிதவிக்கும் தாகங்கள்
அதன் பசியுள்ளம் கேட்பதெலாம்
பிரசவிக்கும் மேகங்கள்

வல்லோனும் வாழ்வதில்லை
வசைமொழியே இல்லாமல்
தினம் வந்தவற்றுள் விசம்நீக்கி
வாழ்வதுதான் பெருவாழ்வு

கொண்டோடும் நதியோடு
கொடியாகச் சென்றாலும்
உன் கரைதேடும் கண்ணுக்குள்
கொள்வாய் ஓர் நம்பிக்கை

தண்டோடு தாழம்பூ
தனிவாசம் வீசிவரும்
நீ தடுத்தாலும் உனையள்ளித்
தாலாட்டுப் பாடிவிடும்
காதலில்
கண்கள் விழவேண்டாம்
இதயம் விழட்டும்
கண்கள் வழியே துடிக்கும்
இதயமல்ல
ஏக்கங்கள் வழியே துடிக்கும்
இதயம்
பருவக் கொதிப்பால் வரும்
ஏக்கமல்ல
பழகும் சுகத்தால் வரும்
ஏக்கம்
காமத் தொடுதல்களால் வரும்
பழகுசுகமல்ல
இதயத் தொடுதல்களால் வரும்
பழகுசுகம்
நெஞ்சைத் துளைத்த
துப்பாக்கி ரவை கதறியழுகிறது
தனக்குக்
காயம்பட்டுவிட்டதாய்

எடுத்து
ரத்தம் துடைத்து
துப்பாக்கிக்குள் இட்டு
கைகளில் கொடுத்துவிட்டு
மீண்டும் சுடு என்று
காத்திருக்கிறது
காதல்
காதல் என்பது ஒரு பரிட்சை
காத்திருப்பது மகிழ்வைத் தரவேண்டும்
தந்தால் போட்டுக்கொள் ஒரு மதிப்பெண்
காக்க வைக்கும்போது உயிர் துடிக்கவேண்டும்
துடித்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்

பிரிந்தபோது காதல் உயர்ந்திருக்க வேண்டும்
உயர்ந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்
எப்போது தொடும்போதும்
இப்போதுதான் முதன் முதலில் தொடுவதுபோல்
சிலிர்க்கவேண்டும் சிலிர்த்தால் போட்டுக்கொள்
இன்னொரு மதிப்பெண்

பேசப் பேசத் தீராமல் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
இருந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்
மௌனத்தில் அமரும்போதும் விழிகள் கோத்துக்கொண்டு
உள்ளுக்குள் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
இருந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்

முத்தத்தைத் துவங்கினால் முடிக்கவே கூடாது
முடிக்காமலிருந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்
மோகத்தில் எரியும்போது உயிர்தான்
முதலில் நனையவேண்டும்
நனைந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்

வெளியில் புத்திசாலியாகவும்
காதலியிடம் முட்டாளாகவும் இருக்கவேண்டும்
இல்லாவிட்டால் கழித்துவிடு
இதுவரை போட்ட அத்தனை மதிப்பெண்களையும்
இன்னும் இரு மடங்கையும்
என்னை வாழவிடு
உனக்குள்ளேயே துடித்துக்கிடக்கிறேன்
என்னைச் சாகவிடு
உனக்குள்ளேயே புதைந்து விடுகிறேன்

கட்டுகள் கோடுகள் கூண்டுகள் என்று
வாழ்க்கைக்கு மரணத்தோடு கயிறிழுப்பா

என்னோடு நீயிருந்தால்
எதையும் வெல்வோம்
என்னை நீ பிரிந்தால்
மூச்சுவிடவும் தோற்போம்

நம் முட்டைகளில்
பொரிக்கபடாத குஞ்சுகளாய்
நம் கனவுகளும் துடிப்புகளும்
வா அடைகாக்கலாம்

ஆயிரம் கண்ணுடையாள் - என்மன
        ஆறுதல் பொன்னுடையாள்

தீவிரச் சொல்லுடையாள் - துயரம்
        தீர்த்திடும் நெஞ்சுடையாள்

தேன்மலர் இதழுடையாள் - கண்ணில்
        தேங்கிடும் கனவுடையாள்

பால்முக ஒளியுடையாள் - என்னுள்
        பாய்கின்ற உயிருடையாள்
நெகிழ்ந்து அழும்போது
சுகம் ஊட்டும்
தருணங்களால் ஆனதே
அசலான உறவும்
அழகான வாழ்வும்

காத்திரு உயிரே

எண்ணங்களின் கொதிப்பு
இயலாமையின் கனம்
வெளிவந்து விழுகிறது
கண்ணீர் கண்ணீர்

விழுந்த நொடியில்
யுத்தம் முடித்தச்
சோர்வு

ஆனால்
அடுத்த நொடியோ
மீண்டும் கொதித்துக் கனத்து
வெளிவந்து விழுகிறது
கண்ணீர் கண்ணீர்

நம்பிக்கையின்
அத்தனை வேர்களும் அறுந்து
உயிரின் கடைசி அணுவும் கரைந்து
மேலே மேலே போய்க்கொண்டிருந்த
அந்தக் கறுப்பு நாளில்தான்
அவள் வந்தாள்

அவனுள் செத்துக்கிடந்த
அத்தனைச் சருகுகளையும்
உயிர்ப்பிக்கச் செய்தாள்

இனியொரு கொடியும்
முறிந்து கிடக்கும்
தன் கரம் படரும் என்று
கனவிலும்
கனவு கண்டிருக்கவில்லை
அவன்

தேவதை தேவதை என்பார்களே
அது அவனுக்கு இன்று
அவள்தான்

இழந்தேன் என்று இதுவரை
ஓர் ஒன்றுமற்றதையா
தன் வேதனை இதயத்தில்
அவன் கோபுரமாக்கி வைத்திருந்தான்
என்று வெட்கப்பட்டான்

வந்த இருளின்
தனிமைக் கொடுமையில்
வெதும்பித் துடித்தாலும்
உதிர்ந்துவிடாமல்
இறுதித் துளி உயிரை
இறுகப் பற்றிக்கொண்டு
விழிகள் பூத்தவண்ணம் காத்திருக்கும்
அத்தனை உயிர்களுக்கும்
சொர்க்கம் உண்டு

உன் சொர்க்கத்திற்காக
உன் கடைசி நரகத்திலும்
நம்பிக்கையோடு காத்திரு
உயிரே
உன் வெறுப்பை உண்டு நாக்கு தள்ளுகிறேன்
மறதியை நினைத்து நினைவிழக்கிறேன்
பழிச்சொல் தீண்டி நீலம் பாரிக்கிறேன்
என்றாலும்
உன் கண்களை கடந்து
என்னால் வெகுதூரம் செல்ல முடியாது
உன் புன்னகையை பிரிந்து
என்னால் விடைகொள்ள முடியாது
உன் காதலை மறந்து
என்னால் புதைந்துபோக முடியாது
சுழலும் குளிர்க்கோள் கண்கள்
சூடுமிழும் முதுவெயில் இதழ்கள்
அழகிய கணித்திரை நெற்றி
அணிற்பழ மீதமாய்ச் செவி

நிறைகுளப் பரப்பாய்க் கன்னங்கள்
நிழல்மர விரிப்பாய்ப் பார்வைகள்
மடக்கி நிறுத்தி வைத்த
மழைக்குடையாய் மூக்கு

சரிந்து நிலம் விழுகின்ற
தங்கத் தாம்பூலமாய்த் தாடை
அலைவீசும் மணல் குழைவாய்
மேலுதட்டு மேடை
பனிவிழுந்த மாவிலையாய்
கீழுதட்டுத் தாழ்வாரத்தில்
துளித்துளியாய்த் தேன் ஈரம்

வகிடுக்குப் படியாத திமிரில்
கருங்கற்றைக் கூந்தலோரம்
கவிதை கிறுக்க அலையும்
விசிறி முடிச் சிதறல்கள்

புலம்பெயர்ந்த தமிழ்போல் வாசம்
புரியாத செம்மொழியில் நாணம்
புண்பட்டவனுக்கு எங்கே மருந்து
புறப்பட்டுவிடுமே இந்தப் பேருந்து
நாவடியில் வைத்து என்னை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் தத்தளிக்கிறாய்

குறுதி கொப்பளிக்கும் என் உயிர்
உன் அவதிகள் கண்டு செத்து மடிகிறது

சோதனையாய் ஒன்றுசெய்
என்மீது கண்ணீர் பொழியும்
உன் விழிகளை இக்கணமே தடுத்து நிறுத்திக்கொள்

பின்னெல்லாம் உன்முன்
வசந்தங்கள் திறந்துகொண்டால்
என்னை முழுவதும் மறந்து வெகுதூரம் ஓடிப்போ

அன்றி
உன்னிடம் இருப்பவையும்
தொடு தூரத்தில் தழுவக் காத்திருப்பவையும்
மூடிக்கொண்டுவிட்டால்
வா வா என் உயிரே நீ என்னிடமே வந்துவிடு
என் இதய ஆழத்தில்
இரும்பு எழுத்தாணியால்
காதலைப் பொறித்தவளே

உன் பிஞ்சுப் பாதங்கள்
தத்தியோடிய
பசும்புல் வெளிகள்தாம்
இன்று மயானகீதம் பாடும்
வறண்ட பாலைகள்

பூக்களை உதிர்த்துவிட்டு
உன்னை நோக்கி
நம்பிக்கைக் கிளைகளை
ஏந்தி நிற்கும் நான்
இன்று வெறும் பட்டமரம்தான்

இருப்பினும் என் அன்பே
நம்பிக்கை வசந்தங்களில்
நீயே நாயகியாய் வந்து
அசைந்தாடும் பொழுதுகளில்
என்னைமறந்து நான்
பூக்கவே செய்கிறேன்
இனி நாம்
சந்திக்கக் கூடாது என்று
நீதானே சொன்னாய்
பிறகு ஏன் ஒரு நாளும் விடாமல்
நீ என் கனவில் வந்து தொலைக்கிறாய்

நான் உறங்கச் செல்லும்போது
நீ என் தலையணைக்குள்
ஒளிந்திருப்பாயா
அல்லது
எப்போதுமே நீ என்
இமைகளின் மேல் மாடியில்தான்
குடியிருக்கிறாயா

இப்படித்தான்
சில காலம் வருவாய்
பின் ஒருநாள் என்னை அழைத்து
இறுக்கமாகக் கட்டிக்கொண்டு
கனவில்கூட இனி நாம் சந்திக்கக்கூடாது
என்று சொல்லிவிட்டு
என் முகத்தை ஏக்கத்தோடு
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே
போயே போய்விடுவாய்
உன் மீது எனக்குக்
காதல் இருக்கா இல்லையா என்று
இனியொரு முறை கேட்காதே
இல்லை என்று நான் சொல்லுவதை
கேள்வி கேட்காமல் நம்பு

என்னுடனேயே நீ
எப்போதும் இருக்க வேண்டும்
நீ பேசப்பேச நான் பூரிக்கவேண்டும்
உன்னைப் பார்த்துப்பார்த்து
நான் பிரகாசிக்க வேண்டும்
கனவுகளில் தினம்
காணாமல் போகவேண்டும்
நீயும் என்னையே எப்போதும்
நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்

அதைத்தவிர வேறு எதையும்
என்னிடம் கேட்டுவைக்காதே
என் பொய்க்கோபத்துக்கு ஆளாகாதே
உன் மீது என்னால்
உண்மைக் கோபப்பட முடியாது
மீண்டும் ஏன் என்று கேட்காதே
அது அப்படித்தான்

நாம் இறக்கும் வரை
ஒருவரை ஒருவர் பிரியாதிருக்க வேண்டும்
பிரிந்தால் நான் இறந்தே விடுவேன்
முட்டாளே
உன்மீதான என் பிரியம் என்பது
உன்னையே பொன் தூவி வாழ்த்தும்
என் ரசனைகளின் ஒளிப்பந்தல்

உன்னையே வண்ணங்களாய்ச்
சுற்றித் திரியும் என் நினைவுகளின்
நிறத்தோட்டம்

ஆனால்
வாகனம் மூடிக்கிடக்கும்
வெண்பனிப் பொழிவைப்போல
அவை உன்னால்
வரவேற்கப்படாததாய் ஆனபின்

உன் நினைவுகளின் கதகதப்புகள்
எனக்கு வேண்டவே வேண்டாம் என்று
முடிவெடுத்து நிறுத்திக்கொள்ள
நினைத்ததுதான் தாமதம்
என் காடு கொள்ளாத பட்டாம் பூச்சிகளாய்
உன் நினைவுகள் பெருக்கெடுத்துப்
படபடத்துப் பறப்பது ஆச்சரியம்

அந்த ஆச்சரியத்தில்
உன் மீதான என் பிரியம்
அந்தியின் உந்து காற்று ஏறிய
செம்மஞ்சள் அலைகளாய் மேலும் மேலும்
உயர்ந்து உன்னையே இன்னமும்
இறுக்கமாய்த் தழுவுகிறது

என்றால்
என் நெஞ்சப் பொதியே
உன் மீதான என் பிரியத்தின்
உயிர்ப் பிடியிலிருந்து
நான் தப்பிப்பதுதான் எப்படி?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிதைந்து கிடந்த
என் எழுத்துக்களைப் பொறுக்கி
வார்த்தைகளாய்க் கோத்தவள் நீ
வார்த்தைகளின் கூட்டுக்குள்
உயிர்க் காற்று ஊதி
வாழும் கவிதையாய் ஆக்கியவள் நீ

அனாதைக் கவிதையை
ஆகாயத்தில் எறிந்துவிடாமல்
அள்ளி மடிகிடத்தி பரிவமுதூட்டி
காதலன்னையானவள் நீ

பாசப் பொழிவுகளால்
என் கடலை மூழ்கடித்தவள் நீ
அன்பு வெள்ளத்தால் என்னை
உனக்குள் அடித்துச் சென்றவள் நீ

உன் பால் முகத்தில்
வழிந்தோடிக்கிடக்கிறேன்
உன் கருணை விழிகளில்
ஒளிவீசிக்கிடக்கிறேன்
உன் அன்புப் புன்னகையில்
வசந்தமாய் மலர்கிறேன்

முன்னைவிடத் தீவிரமாய்
ஒவ்வொரு நொடியும்
உன்னையே நினைத்துருகுகிறேன்

கடந்துபோன
பிரிவுகளும் துயரங்களும்
ஏறிமிதித்த ஏக்கங்களும் ஏமாற்றங்களும்
காதலை வைரக்கண்ணீர் என்று
விழா எடுத்து அழைக்கின்றன

அந்தக் கண்ணீர்தான்
உணர்ந்த காதலை உலரவிடாமல் காக்கும்
ஈரக் கவசமாய் இருக்கிறதோ
என்று நான் கசிந்துகொண்டிருக்கிறேன்

கனாக்கண்டேன் தோழி

அமுதநீர் சுரக்கும் இதயக் கிணற்றில்
ஊமைக் காயங்களாய் மூடிக் கிடக்கும்
அவளின் ஆசை ஊற்றுக்கண்கள்
அத்தனையையும்
அந்தரங்க விரல்கள் நீட்டி
மெல்ல மெல்ல உடைத்தான் அவன்

வெள்ளம் வெள்ளம்
எப்போதும் இல்லாத அளவில்
விழி மனம் உயிர் ஆன்மா
அனைத்தையும் நனைத்துத் துவைத்து
பொங்கிப் பெருகி
அவளுள் ஒரு வெள்ளத் திருவிழா

குருதிச் சித்திரங்கள் தீட்டி
துடித்து வெடித்து விளைந்த
அவனின் கந்தகக் காயங்களிலெல்லாம்
மெல்லிய மன இழைகளால்
பொழுதுகள் தப்பாமல்
நேச உயிர் ஒத்தடங்கள் கொடுத்தாள் அவள்

கண்ணீர் கண்ணீர்
இமைகளைக் கரைத்தழித்துக்கொண்டு
கருணை பெற்ற நெகிழ்ச்சியில்
கனிந்து குழைந்த அவனின் கண்களில்
காட்டாற்று கண்ணீர்ப் பெருவிழா

வாடி வதங்கி
உயிர்மட்டும் மீதம் வைத்து
வான் நோக்கிக்கிடந்த
காய்ந்த பழைய செடியில்
பூத்தது ஒரு சந்தனமுல்லை

காலப் பெருமரத்தில் முட்டி மோதி
அடிபட்டு குற்றுயிராய்க் கிடந்த
ஒரு வண்ணத்துப்பூச்சி
திடுதிப்பெனத் தேடிவந்த பொன் வசந்தத்தில்
மூச்சுப்பற்றி உயிர்த்தது

தன்னையே பதித்துப் பூத்த
சந்தன முல்லையின் இதயவனத்தில்
ஓர் ஈர முத்தமாய்ச் சென்றமர
கருகிக் கிடந்த சிறகுகளை
புத்துறவுக் காற்றில் புதுப்பித்துக்கொண்டு
சிறகடித்துச் சிறகடித்து சிலிர்த்தது
வாஞ்சைமிகு வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சியே
வண்ணத்துப்பூச்சியே
அங்கேயே நில்
என் வண்ணத்துப்பூச்சியே
அருகிலொருபோதும் வாராய்
என் உள்ளங்கவர்
வண்ணத்துப்பூச்சியே

என்னைப் பறித்தெடுத்து
அலங்கார ஆடையில் செருகி
விருந்துக்குச்செல்ல விரைந்து வருகிறான்
அதோ என் எஜமானன் என்று
முகம் மூடி விசித்தது சந்தனமுல்லை

இயற்கைத் தளிர்களையெல்லாம்
துண்டுதுண்டாய் நறுக்கிப்போட்டு
வாழ்க்கை அடுக்களையில் இவைபோல்
எத்தனை எத்தனையோ கூட்டுக்கறிகள்

நிரம்பி வழியும் ஏக்கங்களில்
பெருகி உயரும் துயரங்களில்
சுற்றிச் சுழலும் பெருமூச்சுப் புயல்களில்
பிரபஞ்சமே அழிந்துபோகும் என்று
பிரபஞ்சமே கதறுவதுபோல்
கனாக்கண்டேன் தோழி
சின்னஞ்சிறு வயதில்
நிலவைத் தொட்டு மடியில் இட்டு
விழியிரண்டும் இமைகளுக்குள் கிறங்கிக் கிடக்க
வெதுவெதுப்பாய் முத்தமிட விரும்புவேன்

ஏழு வர்ண வானவில் ஊஞ்சலில்
தேகத்தைச் சிலிர்ப்புப் பூக்களாக்கும்
சிறு தூரல்களின் ஈரமான தழுவல்களில்
நானெனும் நினைவழிந்து
ஆடிக்கொண்டிருக்க ஆசைப்படுவேன்

சுழித்தோடும் பெருவெள்ள நதியின்
கம்பீரத்தின் மேல் ஓர் இலையாய்
மேலும் கீழும் ஏறியிறங்கி
போகுமிடம் அறியாத பூரிப்பில்
கனவுகளாய் மிதந்துபோக கனவு காண்பேன்

கண் தொடாத தூரங்களைக்
காணும் திசையெல்லாம் கொண்ட
ஆச்சரிய ஆகாயத்தின் காற்றில் ஏறிக்கொண்டு
இல்லாத சிறகுகளை
இருப்பதாய் அசைத்துப் பறக்க ஏங்குவேன்

வாலிபம் வந்தது
கற்பனைப் தவிப்புகள் வளர்ந்து வளர்ந்து
விருட்சங்களாய் நிறைந்தன
என் நிஜங்களை மூடி
முழுவதும் மறைத்தே விட்டன

நீ வந்தாய்
அட இதெல்லாம் ஒன்றுமே இல்லை
என்று உன்னை ஊட்டினாய்
என் மைய வேர்களையும் ஆட்டினாய்
கற்பனை யாவும் தூசெனத் தள்ளும்
நிஜம் காட்டினாய்

போய்விட்டாய்
ஆயிரம் கற்பனைகளிலும்
என்னிடம் உண்மை என்று இருந்த
என் உயிரும் பொய்யானது
நிசப்தங்கள் ஒன்றுகூடி
மாநாடு நடத்திக்கொண்டிருந்த
நட்ட நடு இரவில்

பொதி சுமக்கத் திணறித் திண்டாடிக் கதறி
உறக்கத்தை நெருப்பின் பற்களுக்கு
தின்னக் கொடுத்திருந்த என் தலையை

நடுங்கும் ஆயுள் ரேகையற்ற என் கரங்களால்
பிடித்துக் கசக்கிப் பிதுக்கி
அதன் கொடுங்கவலை கழிவுகளை
மரண நினைவுச் சாக்கடைகளை
வெளியேற்ற வெறியோடு போராட

இந்த அவல நாடகத்தை நமட்டுச் சிறுநகையோடு
இரவு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க
நான் வந்து பிழியட்டுமா என்று கேட்டுக்கொண்டே
பகல் படபடவென்று வந்தேவிட

பாரத்தின் சீழ் சட்டென உடைந்து பெருக்கெடுத்து
அதிகாலை நித்திரையாய்
திமுதிமுவென எரியும் விழிகளில்
ஈரமாய்ப் படர்ந்தது
முகமோ அகமோ அறியா உடல்களை
சம்பிரதாயச் சடங்குகளுக்கும்
பொருளாதார இறுக்கத்திற்கும்
மண்டியிடச் செய்து
இற்றுப்போன கயிற்றால்
இழுத்துக்கட்டும் கண்கெட்ட வித்தை
நிச்சயிக்கப்பட்ட திருமணம்

காதலியைக்
காதலனிடம் சேர்த்து விட்டு
காதலைக் காதலர்களிடமிருந்து
பிரித்துவிடும் தண்டவாளத் திசைமாற்றி
காதல் கல்யாணம்

நட்பில் துவங்கி
நம்பிக்கையில் வளர்ந்து
ஈர்ப்பில் இறுகி
குறைகளுக்குக் கோவில் கட்டாத
கோபுர உள்ளங்கள் காதலில் கனிந்து
இதயப் புனிதங்களால் இணைத்துக்கொள்ளும்
ஈடில்லா முடிச்சே இன்பத்தின் முடிச்சு

கண்ணீரே இல்லை கவிதை முற்றும்

அவன்
புழுதிகளாலும்
சபிக்கப்பட்டுவிட்டான்

மரணத்துக்கு
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அவனுக்கு அடங்காப் பசி

ருசியில்லாப் பிண்டம்
அவனை
மரணமும் மறுதலிக்கிறது

தெருத் தெருவாய் அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனமானான்

உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாக் குருவியானான்

மென்று மென்று தின்று பார்த்து
பாதியில் மீதியைத் துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று மரணம்

மிச்ச எலும்புகளைப்
பொறுக்கிப் புதைத்துப் பார்த்தான்

கிழிந்த தசைத் தொங்கல்களை
நெருப்புக் கூட்டி எரித்துப் பார்த்தான்

விடைதரா விருந்தாளியாய்
வேதனை மட்டும்
ஒட்டிக்கொண்டேதான் இருந்தது

வேறொரு நல்ல உடல்தேடி
எங்கோ அலைந்துகொண்டிருக்குமோ
தனக்கான மரணமும் கூட
என்று தாழ்வு மனப்பான்மையின்
பாதாளம் தொட்டான்

அப்போதுதான்
பறந்து வந்தது ஒரு பறவை

அதன் முறிந்த சிறகுகளை
அவன் முகத்தில் விசிறியது
இரத்தம் சொட்ட

வெடித்து எழுந்தான்
துடித்து அழுதான்
இப்போது அவனுக்காக அல்ல
அந்தப் பறவைக்காக

மீதக் கதையில்
ஆனந்தத்திற்காகக்கூட
கண்ணீரே இல்லை

கவிதை முற்றும்

என்னைப் பார்

உனக்குச் சொன்னால்
புரிய மாட்டேனென்கிறது

கட்டுகளைக் கொஞ்சம்
கழற்றி எறிந்துவிட்டு
உள்ளத்தால் உள்ளத்தைத்
தொட்டுப் பார்

என்னை என்ன
செய்யச் சொல்கிறாய்

நான் தேடும்
எல்லாமாகவும் நிறைந்திருக்கும்
உன்னை நான் ஆராதிக்காமல்
வேறென்ன செய்ய

இந்த உறவு உரசல் உருவாக்கும்
வழக்கு நிமிடங்கள்கூட
எத்தனைத் தித்திப்பு தெரியுமா

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
இந்த உலகத்தை
எல்லாம் தலைகீழ் நாடகம்

வேண்டாம்களை
வேண்டச் சொல்லியும்
வேண்டும்களைத்
தீண்டவிடாமல் விரட்டியும்
விளையாடும் விபரீதங்கள்
ஜீவனைக் கடித்து
நடைபிணமாய்த் துப்புகின்றன

கொஞ்சம் வாழலாமென்றால்
புழுத்துப்போன தடைகளெல்லாம்
உயிரை இழுத்துவைத்து
ஊசிகளல்லவா ஏற்றுகின்றன

பொய்யாய்ப் பெருங்கதையாய்
மெல்லத் தொலையாமல்
வேறென்ன நிகழும் இனியும்

செத்ததும் கிடைக்கும்
சந்தோசம் என்று
சீக்கிரமாகவே புதைக்க
தினம் தினம் மல்யுத்தம்

வாழும் வழிதேடி ஓடி வந்தால்
ஏன் இந்த விளங்காத மௌனம்
உன்னிடம்

காலங்காலமாய் அணிவிக்கப்பட்ட
கண்ணுக்குத் தெரியாத
கண்ணாடிகளைக் கழற்றியெறிந்துவிட்டு
என்னைப் பார் அழகே

என்ன தவம் செய்தனை

காயங்கள் நிலைக்கவில்லை
அனுபவம் நிலைத்தது
தழும்புகள் திடப்படவில்லை
அறிவு திடப்பட்டது

ஞாபகங்களில் எப்போதும்
எனக்குப் பூக்களின் வாசம்தான்
முட்களை மறப்பதே என் இதயத்தின் இயல்பு

எல்லோரையும் நம்புகிறேனா தெரியாது
ஆனால் உன்னை மட்டும்
அதிகமாகவே....

நீ சொன்னதெல்லாம்
உண்மையென்று நம்பியதால்தான்
சோகம் என்னிடம்
முட்டி முட்டிப் பார்த்துவிட்டுத்
தோற்றுப்போனது

ரத்த அடர்த்தியுடைய
கண்ணீரோடு கேட்டுக்கொண்டதால்தான்
என்னால் புன்னகையோடு புறப்பட முடிந்தது

வாழவிடும் சுகமென்பது
சால-உறு-தவ-நனி-கூர்-கழி
உயர் ஈகைச் சுகம்

பூ, பட்டாம்பூச்சி, பெண்
கையில் வைத்துக் கசக்குபவன்
மனித இனமில்லை

என் நினைவு உன்னிடம் அழியலாம்
அது இயற்கை
நிரந்தரமாய் அழிய
நிச்சயமாய் வாய்ப்பே இல்லை
இது என் நம்பிக்கை

அந்த முதல் முத்தத்தில்
உன் நீள்விழி உதிர்த்த
ஒரு துளி நீருக்கு ஈடாக எதையும் தரலாம்

மறுஜென்மம் கண்ட என் உயிர்
எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை
என்று அறிந்துகொண்டவன் நான்
திசைமாறிய சிறகசைப்பு முயற்சிகளெல்லாம்
என்னை முடமென்றே பரிகசிக்க

நானும் பறந்தவன்தான் என்ற
பழைய செருக்கோடு என் பயணம்
எதுவுமே இல்லாத எதையோ நோக்கி
என்று பிதற்றினாலும்

ஒன்று மட்டும் உண்மை
உன் முகம் மறப்பதாயில்லை
உன் குரல் அழிவதாயில்லை
உன் கொஞ்சல் கலைவதாயில்லை
என்ன தவம் செய்தனை